

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் நெல் ஜெயராமன். அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள ஆதிரங்கத்தில் நெல் பாதுகாப்பு மையத்தை நிறுவினார். அதன் சார்பாக 100 வகையான நெல் ரகங்கள் நடப்பாண்டில் பயிரிடப்பட்டன. அவை தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளன.
மூச்சுவிட வைக்கும் வெங்காயம்
கடந்த மாதம் சுமார் ரூ. 70 வரை கிலோவுக்கு விற்பனையாகி வந்த சின்ன வெங்காயம், இப்போது ரூ. 25 முதல் ரூ. 42 ஆக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டுப் பகுதிகள் அல்லாமல் மைசூரிலிருந்து சின்ன வெங்காய வரத்து அதிகமானதுதான், இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
பயிர்கள் நாசம்
உத்தராகண்ட் மாநிலம் கட்டிமா நகரத்தை அடுத்த பூடாக்கினி, தாஹ்தாகி ஆகிய கிராமப் பகுதிகளில் 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமைப் பயிர்கள் தீ விபத்தில் எரிந்து சாம்பலாயின. இதனால் ஏற்பட்ட பாதிப்பு ரூ.12 லட்சம் அளவில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல் அல்மோரா பகுதியில் நெற்பயிர்களும் தீயால் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்தத் தீ விபத்துகளுக்கு உடனடியாக இழப்பீடு தர வேண்டும் எனப் பாதிப்படைந்த உழவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளகாய் விளைச்சல் சரிவு
ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாட்டில் மிளகாய் வற்றல் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் பகுதி. இப்பகுதியில் 50 ஆயிரம் டன் மிளகாய்ச் சாகுபடி நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் ஜனவரியில் பெய்த மழையால் மிளகாய்ச் செடிகள் பாதிக்கப்பட்டன. இதனால் விளைச்சல் சரிந்துள்ளது. இந்நிலையில் தற்போது விலையும் குறைந்துள்ளதால் இப்பகுதி உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளி விலை வீழ்ச்சி
தக்காளி விற்பனைக்குப் பெயர்பெற்றது திருப்பூர் மாவட்டம் உடுமலைச் சந்தை. இங்கே தக்காளி விற்பனை வீழ்ச்சி அடைந்துவருகிறது. மேலும் தக்காளி விளைச்சல் பரவலாக இருப்பதால் இங்கு வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ. 20க்கு விற்பனை ஆகிறது. இந்தத் தக்காளியைச் சந்தைக்குக் கொண்டுவர ஆகும் செலவு, விற்பனை வருவாயைவிடக் கூடுதலாவதற்கும் சாத்தியம் உண்டு. விற்காத தக்காளியைத் திரும்பக் கொண்டுசெல்லும் கூலியைக் கணக்கில் எடுத்தால் நட்டமாகும். இதனால் உழவர்கள் சிலர் தக்காளியைப் பறித்துச் சாலையோரம் வீசுகின்றனர்.