Last Updated : 14 Nov, 2015 12:29 PM

 

Published : 14 Nov 2015 12:29 PM
Last Updated : 14 Nov 2015 12:29 PM

8 இந்தியப் பறவைகளுக்கு ஆபத்து

இந்தியாவைச் சேர்ந்த எட்டு பறவைகள் அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் புதிய சிவப்புப் பட்டியல் தெரிவிக்கிறது. பறவைகளின் அழிவு, இயற்கை சுற்றுச்சூழலின் சீரழிவைச் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் குறித்த சிவப்புப் பட்டியலை (Red List) சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டுவருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய பட்டியலில் எட்டு இந்தியப் பறவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தியாவில் அழியும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ள பறவைகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்திருக்கிறது.

புறக்கணிப்பும் அழிவும்

பறவை இனங்கள் அழிவதற்கான முக்கியக் காரணம் அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுவதும், இயற்கையைப் பற்றி கவலைப்படாத நிலையில்லாத வளர்ச்சியுமே. அந்த வகையில் புல்வெளிகளும் நீர்நிலைகளும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவதே பறவைகளின் அழிவுக்கு முக்கியமான காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

புல்வெளிகளை இயற்கை செழிக்கும் இடமாகப் புரிந்துகொள்ளாமல், தரிசு நிலமாகக் கருதுவதால்தான் இத்தனை பிரச்சினையும். பல்வேறு தேவைகளுக்காக அரசு முதலில் கைவைக்கும் இடங்கள் புல்வெளிகளாகவே இருக்கின்றன. காலம்காலமாகப் புல்வெளிகள் புறக்கணிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன.

அரிய பறவைகள்

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள எட்டு புதிய பறவைகளில் ஐந்து பறவைகள் முன்னதாக அதிகம் கவலைப்படத் தேவையில்லாதவை என்ற நிலையிலிருந்து ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பட்டியலுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அவை: புல்வெளிகளில் வாழக்கூடிய வடக்கு ஆள்காட்டி, நீர்நிலை பறவைகளான கர்லூ உள்ளான் (Curlew Sandpiper), பட்டைவால் மூக்கன் (Bar-Tailed Godwit), ரெட் நாட், யுரேசியன் ஆய்ஸ்டர்கேட்சர்.

மேலும் இரண்டு நீர்நிலைப் பறவைகளான கொண்டை முக்குளிப்பான் (Horned Grebe), காமன் போச்சார்ட் ஆகிய இரண்டும் கவலைப்படத் தேவையில்லாதவை என்ற நிலையிலிருந்து அழிவுக்கு உள்ளாகக்கூடியவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வலசை வரும் அரிய பறவையான புல்வெளிக் கழுகும் (Steppe Eagle) அழியும் ஆபத்துக்குரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

புரிதல் மாற்றம் தேவை

சிவப்புப் பட்டியலின் ஒவ்வொரு மதிப்பீட்டிலும் ஆபத்துக்கு உள்ளாகிவரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவது பற்றி கவலை தெரிவிக்கிறார் பம்பாய் இயற்கை வரலாற்று கழக இயக்குநர் தீபக் ஆப்தே. "இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லாததையே இது சுட்டிக்காட்டுகிறது. வளர்ச்சி செயல்திட்டம் குறித்தும், புறக்கணிக்கப்பட்ட வாழிடங்கள் குறித்தும் தீவிர மறுபரிசீலனை தேவைப்படுகிறது. இதுவரை கவனம் செலுத்தப்படாத இயற்கை வாழிடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அல்லது சூழலியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்" என்கிறார் தீபக் ஆப்தே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x