Published : 28 Nov 2015 01:11 PM
Last Updated : 28 Nov 2015 01:11 PM

தாக்குப்பிடிக்குமா சென்னை?

சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.

சென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.

பெருமழையா?

நவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.

சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.

சென்னையின் நிலஅமைப்பு

சென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.தாக்கமும் விளைவும்

கடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.5 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.

அதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.

கட்டிடக் கழிவும் குப்பையும்

தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.

சென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்து நிற்கும் சென்னை புறநகரின் பறவைப் பார்வை

சமநிலை சீர்குலைவு

சென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்டத்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.

இப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.

கூடுதல் பிரச்சினை

சென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.

ஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கடும் வானிலை நிகழ்வு

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

அத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.

சமாளிப்பது கடினம்

தமிழக அரசின் பருவநிலை மாற்றச் செயல்திட்ட அமைப்பின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் புயல்களின் எண்ணிக்கை குறையும் என்றாலும், அவற்றின் தீவிரமும் காற்று திசைவேகமும் அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் கடல்மட்ட உயர்வால், வெள்ளம் ஏற்படுவது மேலும் அதிகரிக்கும். 2100-ம் ஆண்டுக்குள் தமிழகக் கடற்கரையோரம் 0.19 முதல் 0.73 மீட்டர்வரை கடல்மட்டம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நமது நகரங்களும், சமூகங்களும் இதுபோன்ற வானிலை நிலையில்லாமல் போகும் பெருமழை நிகழ்வுகளுக்குத் தகவமைத்துக்கொள்வதே, எதிர்காலப் பருவநிலை மாற்றத்துக்குத் தகவமைத்துக் கொள்வதற்கு அடையாளமாக அமையும். சமீபத்தில் வெள்ளத்தைக் கையாள்வதில் சென்னை மாநகரம் பெரிதளவு திணறியது. இனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.

- கட்டுரையாளர், பானோஸ் தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர் தொடர்புக்கு:gopiwarrier@gmail.com
நன்றி: India Climate Dialogue
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x