

ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமை தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்குப் போராடிய வீரன் பிர்சா முண்டா. சிறு வயதிலேயே பழங்குடிகளுக்குத் தலைமை வகித்துப் போராடிய அவர், மண்ணின் தந்தை (தர்த்தி அபா) என்று போற்றப்படுகிறார்.
அவரது பார்வை விஸ்தாரமானது. அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஜமீன்தார்கள், கடன் கொடுப்பவர்களிடம் இருந்து பழங்குடிகள் விடுதலை பெற்று, 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற கருத்தை முன்வைத்துப் போராடிய முதல் பழங்குடித் தலைவன் பிர்சாதான்.
பழங்குடிகளுக்கு விடுதலை
அத்துடன் ஆங்கிலேயர்கள் நம் மண்ணுக்கு வந்ததற்குக் காரணம், மக்களைச் சித்திரவதை செய்து சுரண்டி, வளத்தை ஏற்றுமதி செய்வதுதான் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
பிரிட்டிஷ் மகாராணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பழங்குடிகள் தங்களுடைய அரசைத் தாங்களே ஆள வேண்டும் என்றார்.
இந்த மண்ணில் வாழ்ந்தது 25 ஆண்டுகள்தான் என்றாலும், பழங்குடிகளின் உணர்வைத் தட்டியெழுப்பிய அவர், சோட்டா நாக்பூரில் அவர்களைத் திரட்டி, ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குச் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்தார்.
பறிபோன உரிமை
மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளின் நிலத்தைப் பழங்குடி அல்லாதோர், இடைத்தரகர்களான திகதார்கள், வட்டிக்குக் கடன் தரும் ஜமீன்தார்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பழங்குடிகளைக் காலங்காலமாக ஒடுக்கி வந்தார்கள்.
பழங்குடிகளிடையே வழிவழிவந்த வாய்வழி நில உரிமையைப் பிரிட்டிஷ் சட்டம் ஏற்றுக்கொள்ளாததால், பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். கடைசியில் அந்த மண்ணின் மைந்தர்கள், உள்நாட்டு நிலவுடைமைதாரர்களிடம் அடிமைத் தொழிலாளிகளாக மாறினர்.
இந்த நில ஆக்கிரமிப்பைப் பிர்சா கடுமையாக எதிர்த்தார். தங்களது மூதாதையரின் நாட்டுப் பற்றை முன்வைத்து, சக பழங்குடிகளிடம் அவர் பேசிய வாதங்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின.
உலுக்கிய போராட்டம்
1890-களில் நாட்டில் பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. பழங்குடிகள்
உயிர் வாழே போராடிக் கொண்டிருந்த நேரம் அது. இந்தப் பின்னணியில் பழங்குடிகளின் உரிமைகளைக் காக்கத் தலைமை வகித்துச் சோட்டா நாக்பூர் பகுதியில் ஒருங்கிணைத்து, பழங்குடி சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார்.
காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1-ம் தேதி பிர்சா நடத்தினார். பழங்குடிகளின் உரிமை காக்க நாட்டில் நடைபெற்ற முதல் போராட்டம் அதுதான்.
ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கெரில்லா வீரர்கள் கொண்ட படையையும் பிர்சா முண்டா வைத்திருந்தார். 1900-ல் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு சிறையில் 25 வயதில் மரித்துப் போனார்.
நிறைவேறா கனவு
விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் நம் நாட்டில் பழங்குடிகளின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தைப் போலவே இன்றைக்கும் நில உரிமை மறுக்கப்பட்டு, பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். தங்களுக்கான விருப்பங்களுடன் சக மனிதனாக வாழ அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கவில்லை.
மறைமுக அடிமைத்தனம் இன்னமும் தொடரவே செய்கிறது. மற்றொரு புறம் தொழிற்சாலைகள், மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் பெருமளவு பழங்குடிகள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அதற்குப் பதிலாக அவர்கள் பெறும் இழப்பீடும் சொற்பம், மாற்று வாழ்வாதாரமும் கிடைப்பதில்லை. நாடு முழுவதும் பழங்குடிகள் இடையே தற்போது அதிருப்தி வளர்ந்துவருவதற்கு இதுவும் காரணம்.
நில உரிமை கிடைக்கும் நாளே பழங்குடிகளுக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கும். பிர்சாவின் கனவும் அன்றைக்கே நிறைவேறும்.