தேர்தல் வாக்குறுதிகள் 2021 - சுற்றுச்சூழல்: எதிர்காலத்துக்கு உத்தரவாதம் உண்டா?

தேர்தல் வாக்குறுதிகள் 2021 - சுற்றுச்சூழல்: எதிர்காலத்துக்கு உத்தரவாதம் உண்டா?
Updated on
2 min read

சுற்றுச்சூழல் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் வரை அதிக முக்கியத்துவம் பெறாமல் இருந்துவந்தன. தற்போது அவை ஓரளவு கவனம் பெற்றுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அளித்துள்ள வாக்குறுதிகள்:

# சிறு, குறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்துப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக் கூடுதல் மானியம் வழங்கப்படும்.

# சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும், மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

# பசுமை வீடு திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.2,43,000-லிருந்து ரூ.3,40,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

# காவிரி நதி, அதன் உபநதிகளில் ஏற்படும் மாசுபாட்டைக் களையத் திட்டம் செயல்படுத்தப்படும்.

# கடலோர நிலப்பரப்பைக் காப்பாற்றக் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

# தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் கலக்கும் தொழிற்சாலைக் கழிவு உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்.

#சென்னை மாநகரில் ஓடுகின்ற ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, மேற்கண்ட ஆறுகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவதன் மூலம் நீரோட்டம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

#டெல்லியில் இயக்கப்படுவதுபோல (CNG) எரிவாயுவில் இயங்கும் புகையில்லாப் பேருந்துகளைப் படிப்படியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

# மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33 சதவீதம் காடுகள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

# முக்கிய பறவை சரணாலயங்களில் பறவைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளக்கூடிய வகையில் பறவைகள் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல்: விடுபட்ட முக்கிய அம்சங்கள்

தேர்தல் வாக்குறுதிகளில் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அம்சங்கள்:

# பருவநிலை நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளின் கவனம் இன்னமும்கூடத் திரும்பவில்லை. எதிர்காலத்தில் வரவுள்ள இயற்கைச் சீற்றங்கள், பருவநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த திட்டம் அவசியம்.

# பிளாஸ்டிக் தடை என்பது சிறிது காலம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது அதுவும் சடங்குச் சட்டங்களில் ஒன்றாக மாறிவிட்டது. கழிவு மேலாண்மையும் மிக மோசமான நிலையில் உள்ளது. சில மாநகராட்சிகளில் திடக்கழிவு மக்கிய உரமாக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான இடங்களில் அனைத்துக் கழிவும் சேர்த்தே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு தொடர்கிறது.

# காற்று மாசுபாடு மோசமாக அதிகரித்துவருகிறது. ஆனால், அதற்குக் காரண மாக உள்ள தொழிற்சாலைகளையோ வாகனங்களையோ முறைப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.

# மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் (யானைகள் உள்பட) அதிகரித்துவருகிறது. இது உயிரினங்கள், மனிதர்கள் என இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான சமநிலையைக் கண்டறியத் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த திட்டவட்டமான செயல்பாடுகளும் தெளிவும் தேவை.

# சதுப்புநிலங்கள், புல்வெளிகள், புதர்க் காடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழலியல் தொகுதிகளை வருவாய் ஆதாரமற்ற புறம்போக்குப் பகுதிகள் என்று வரையறுத்துள்ளதை மாற்றி, அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் தேவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in