நிஜ வெள்ளத்தில் மூழ்கிய மெட்ராஸ்

நிஜ வெள்ளத்தில் மூழ்கிய மெட்ராஸ்
Updated on
2 min read

21-ம் நூற்றாண்டில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் என ஊரே அல்லோல கல்லோலப்படுகிறது. சென்னையில் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளம் எதுவென்று கேட்டால், அது 1943-ல் வந்ததுதான்.

அந்த வெள்ளம் 1943 அக்டோபர் மாதம் வந்தது. சென்னையின் நீங்காத நினைவுகளில் படிந்துள்ள மிக மோசமான வெள்ளம் அது. ஆறு நாட்களுக்கு இடைவிடாமல் பெய்த மழையில் (கவனிக்கவும் ஆறு நாட்கள்) குளங்கள், கால்வாய்கள், ஏரிகள், நதிகள் பெருத்துக் கரைகள் உடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டையும் வாழ்க்கையையும் சொத்தையும் இழந்தனர்.

கூவம் நதி (கவனிக்கவும் சாக்கடையல்ல), அதன் துணை ஆறுகள், கால்வாய்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணா சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகள் முற்றிலும் சீர்குலைந்து போயின. அடையாறு நதியும் பெருத்து வெள்ளம் வந்தாலும், அது பரவலாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

திகில் காட்சிகள்

வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பான செய்திகள் ஒரு திகில் திரைப்படத்தைப் போலிருந்தன. வெள்ளம் உச்சத்துக்குப் போனபோது, அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவ நிறுவனத்துக்கு அருகே மேடவாக்கத்தில் இருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அருகில் லாக் சேரியில் இருந்த மக்கள் மனநல மருத்துவ நிறுவனத்தில் தஞ்சமடைந்தனர். வெள்ள நீரில் சிக்கி இறந்தவர்களின் சடலங்கள் மிதந்து வருவதைப் பெரம்பூர், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பார்த்தனர். புரசைவாக்கத்தில் வீட்டுச் சுவர் இடிந்து பாதாளம் போலாகி ஒன்பது பேர் பலியானது, மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த மாடுகள், எருதுகள், ஆடுகள் செத்து மிதந்தன. புறநகர்ப் பகுதிகளில் வைக்கோல் போர்களும், அறுவடை செய்யப்பட்ட தானியக் கதிர்களும் தண்ணீரில் மிதந்து சென்றன (அந்தக் காலத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெருமளவு விவசாயம் நடைபெற்று வந்ததே காரணம்). ஆற்றங்கரைகளில் குவிந்துகிடந்த அறைகலன்கள், நடந்த பயங்கரத்தை வீச்சை உணர்த்துவதாக இருந்தன.

பாதிப்பின் வீச்சு

வெள்ளத்தால் வீடின்றித் தவித்த மக்கள் கட்டுமரங்களிலும், ரப்பர் படகுகளிலும் காப்பாற்றப்பட்டனர். வியாசர்பாடி காவல்நிலையம் ஆறு அடி தண்ணீரில் மிதந்த நிலையில், அந்த நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் படகில் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போலச் சூளை, பெரம்பூர், கொசப்பேட்டை, கொண்டித்தோப்பு, சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்துவந்த குடிசை பகுதி மக்கள், உழைக்கும் மக்கள்தான் வெள்ளத்தின் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டனர். அவர்களுடைய குடிசைகளும் குடியிருப்புகளும் சிதைந்து போயின.

மாநகராட்சி பள்ளிகள், அரசு கட்டிடங்கள், திருமண மண்டபங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை மக்கள் மாநகராட்சித் தலைமையகமான ரிப்பன் கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த வெள்ளத்தில் மோசமாகப் பாதிக்கப்படாமல் தப்பிய பகுதிகள் சென்னையின் மயிலாப்பூர், ஜார்ஜ் டவுன், ராயபுரம், திருவல்லிக்கேணி மட்டுமே.

களம் இறங்கிய மக்கள்

அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால், சென்னை மக்களுக்குத் தற்காலிக உதவிகளே கிடைத்தன. பணப் பற்றாக்குறை காரணமாக நிரந்தரச் சீரமைப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையில் மக்கள் தாங்களாகவே ஒன்றுகூடி உதவ ஆரம்பித்தனர். நல்ல உள்ளம் படைத்த பல குழுக்கள் வீடற்றவர்களுக்கு உதவின. 1930-களில் உருவாக்கப்பட்ட மேயர் வெள்ள நிவாரண நிதி புதுப்பிக்கப்பட்டது. வெள்ள நிவாரணத்துக்குச் சென்னை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 50,000 ஒதுக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள், சமூகநலக் குழுக்களும் வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு இணைந்து வேலை பார்த்தன. நெருக்கடியில் உள்ள சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியுடன் ‘மனிதநேய சேவை படை' முக்கிய சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. அதே காலத்தில் வங்கத்தில் பஞ்சம் நிலவிய நேரத்திலும், அந்த அமைப்பு சென்னையில் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

© தி இந்து (ஆங்கிலம்)

சுருக்கமாகத் தமிழில்: நேயா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in