Published : 21 Nov 2015 02:20 PM
Last Updated : 21 Nov 2015 02:20 PM
இயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் இல்லை. இவ்வளவு செய்தாலும், கரும்புக்குக் கிடைக்கும் விலையோ மிகக் குறைவு. இருந்தபோதும், வங்கிக் கடனைப் பெறுவதற்காக நிறைய உழவர்கள் கரும்பு சாகுபடிக்குள் நுழைகின்றனர்.
இப்படி மோசமான பொருளாதார, சூழலியல் சேதாரத்தை ஏற்படுத்தும் கரும்பைப் பொருளாதார ரீதியில் லாபமாகவும், சொட்டு நீர் பாசன முறையில் குறைந்த தண்ணீர் செலவுடனும் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார் அந்தோணிசாமி.
இயற்கை உர உற்பத்தி
இவர் கரும்பு நடவுக்கு முன்பு உழுது பார் அமைக்கிறார். இரண்டரையடி பாரும் ஏழரை அடிப் பாருமாகக் கொண்ட வகையில் நிலத்தை வடிவமைக்கிறார். முதலில் இரண்ட ரையடி பார், அதற்கு அடுத்து ஏழரை அடி இடைவெளி, அதற்கடுத்து இரண்டரையடி பார், ஏழரை அடி இடைவெளி. இப்படியாக மாற்றி மாற்றி அமைக்கிறார். ஏழரை அடி இடைவெளிப் பாரில் பயறு வகைப் பயிர்களை வளர்க்கிறார். அடுத்த இரண்டரையடி பாரில் கரும்பை நடுகிறார்.
இரண்டு வரிசையாகக் கரும்பை நடுகிறார். கரும்புக்கு இடையில் பயறு வகைப் பயிர்களைப் பிடுங்கி, மூடாக்காக வைக்கிறார். இதற்கு வேறு எந்த உரமும் தேவையில்லை. இதன்பின்னர் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறார். அது வளர்ந்து அடுத்த மூடாக்குக்குப் பயன் படுகிறது. குறிப்பாக 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளரவிட்டு, பின்பு பிடுங்கி மூடாக்காக மாற்றுகிறார். பின்னர் 90-ம் நாள் அடுத்த மூடாக்கு செய்கிறார்.
நீர் சிக்கனம்
இரண்டாம் மூடாக்கு செய்தபிறகு பயிர் ஊக்கியான ஒரு லிட்டர் மீன்பாகுக் கரைசலை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கிறார். 120-ம் நாள் ஆவூட்டக் கரைசலைத் தெளிக்கிறார். அதுவும்கூடக் கட்டாயமில்லை என்கிறார். 160-ம் நாள் முதல் சோகை உரிக்கிறார். சோகையை உரித்துக் கரும்புக்கு அடியில் வைத்து, மண்ணால் மூடிவிடுகிறார். உடனே மீன்பாகுக் கரைசலை, முன்னர்ச் சொன்னதுபோலத் தெளிக்கிறார்.
200-ம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்கிறார். முன்னர் சொன்னதுபோலவே இதையும் மூடாக்கு செய்கிறார். 240-ம் நாள் கடைசி சோகை உரிப்பு செய்கிறார். அதை அருகில் உள்ள ஐந்தடி பாரில் போட்டு மண்ணால் மூடிவிடுகிறார். அது பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறுகிறது. கரும்புக்குச் சொட்டுநீர்ப் பாசனத்தையே இவர் பயன்படுத்துகிறார். நீர் சிக்கனம் மிகவும் சிறப்பாக உள்ளது.
அதிரடி விளைச்சல்
“தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன். இது இந்திய சராசரியைவிட அதிகம். ஆனால், நானோ வெளி இடுபொருள் ஏதுமின்றி ஏக்கருக்குச் சராசரியாக 60 டன் விளைச்சல் எடுக்கிறேன். கழிவை மறுசுழற்சி செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. எனது கரும்புத் தோட்டத்துக்குள் வந்தால் வெளிப்புறத்தைவிட ஏறத்தாழ 4 டிகிரி வெப்பம் குறைவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மண்புழுக்கள் ஊர்வதையும் பார்க்க முடியும்” என்கிறார் அந்தோணிசாமி உற்சாகம் குறையாமல்.
இவர் தன்னுடைய தோட்டத்துக் கரும்பைத் தனது பண்ணையிலேயே சர்க்கரையாக மாற்றி, ஒரு கிலோ அளவில் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புகிறார். இவரது சர்க்கரையில் இனிப்பின் அளவும் நன்மை செய்யும் காரணிகளின் அளவும், மற்ற சர்க்கரையைக் காட்டிலும் அதிகமாக உள்ளதை விளக்குகிறார். அதை முறையாக ஆய்வு நிறுவனங்களிடம் கொடுத்து, சான்றுகளையும் பெற்றுள்ளார்.
விழுந்து எழுந்த கதை
அந்தோணிசாமி 1957-ம் ஆண்டிலிருந்து வேளாண்மை செய்துவருகிறார். ‘அப்போது வேதி உரங்கள் பெரிதாகக் கிடையாது. ஒரு ஏக்கருக்கு 3 பக்கா (5 கிலோ) அமோனியம் சல்பேட் மட்டும் பயன்படுத்தக் கொடுத்தார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து முடிந்தபோது, மாட்டுவண்டிப் பட்டைக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இரும்பு கிடைக்கவில்லை. அதைப் பயன்படுத்தி ரசாயன உரத்தைக் கொடுத்தார்கள். அதாவது இரண்டு வண்டிப்பட்டைகள் வாங்கினால் ஒரு மூட்டை உரம் இலவசமாகக் கொடுத்தார்கள். அதைக் கொண்டுவந்து வயலில் வீசினோம். அப்போது மண்ணில் நிறைய மட்கு இருந்ததால், பயிர் ‘குபீர்' என்று வந்தது.
அப்படி வளர்ந்த பயிரின் கரும்பச்சை நிறம் என்னை ஈர்த்தது. என்னைப் போலவே எல்லோரும் மயங்கினார்கள். இதனால் பெருமளவில் ரசாயன வேளாண்மைக்கு மாறினோம். 1960 - 62-களில் பருத்தி ஏக்கருக்குப் பத்துக் குவிண்டால் கிடைத்தது. 1967-ல் தீவிரமாக ரசாயனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து, ஏக்கருக்கு 150 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் பயன்படுத்தினேன். அதன் பின்னர் 200 கிலோ கொடுத்தேன். ஏக்கருக்கு 60 மூட்டை கிடைத்தது. அதன் பின்னர் விளைச்சல் அதிகரிக்கவில்லை, சரிய ஆரம்பித்தது.
தலைகீழ் விகிதம்
மண்ணில் இருந்த மட்குப் பொருள் அருகிப் போனது. நுண்ணுயிர்கள் செத்துப் போய்விட்டன. அறுபது மூட்டை விளைந்த ஐ.ஆர். - 8 நெல் ரகம் மூன்றாண்டுகளில் முப்பது மூட்டையாகச் சுருங்கிப் போய்விட்டது. பின்னர் அந்த ரக நெல்லும் மறைந்து போனது. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போனது.
அன்றைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் கொண்டுவந்த அடுக்குமுறை வட்டிக் கொள்கையின் கைங்கரியத்தால், எனது வட்டிச்சுமை மென்மேலும் ஏறியது. அதாவது ரூ. ஐந்து லட்சம் வாங்கினால் ஒரு வட்டி, ரூ. 10 லட்சம் வாங்கினால் அதற்கு மேலும் வட்டி என்று அடுக்கடுக்காக வட்டியின் தொகை உயரும். இப்படியாக நான் தற்கொலை செய்துகொள்ளாதது மட்டும்தான் பாக்கி' என்று வேதி வேளாண்மையால்தான் பட்ட துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அந்தோணிசாமி.
அதற்கு மாற்றாக இன்றைக்கு வெற்றிபெற்ற மனிதராக உலாவரும் அந்தோணிசாமி ‘புதிய கண்டு பிடிப்பாளர்' விருதையும் பெற்றுள்ளார். தனது கடன் சுமைகளை முற்றிலும் இறக்கி வைத்துவிட்டு, மற்றவர் களுக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்கிறார்.
அந்தோணிசாமி தொடர்புக்கு: 9942979141
(அடுத்த வாரம்: மண்புழு மகத்துவம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT