

அசோகு, பிண்டி, செயலை என்று வெவ்வேறு பெயர்களில் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்தப் பண்பாட்டு சிறப்புமிக்க தாவரத்தின் அறிவியல் பெயர் சராகா அசோகா (Saraca Asoca). இது சிசால்பீனியேஸி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. நன்கு கிளைத்த, ஓரளவு சிறிய மரமான இம்மரம் கிளைகள் அனைத்திலும் பூங்கொத்தைக் கொண்டது (சினையெலாம் செயலை மலர - பரிபாடல் 15:31).
ஒடிசா மாநிலத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும், கோவா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளிலும் இயல் தாவரமாக இது காணப்படுகிறது. என்றாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வளர்ப்புத் தாவரமாக இருக்கிறது. பண்டைய தமிழகத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளில் ஒரு வளர்ப்புத் தாவரமாகவாவது, இது பரவலாகக் காணப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தமிழிலக்கியத்தில் இது அதிக முறை சுட்டப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 35 பாடல்களில். இதன் முதல் தமிழ் பெயர் ‘செயலை'. இரண்டாவது பெயர் ‘பிண்டி'. இப்பெயர் பெரும்பாலும் சமணத் தமிழ் புலவர்கள், சமண மதத்தினரால் பயன்படுத்தப்பட்ட சொல். மூன்றாவதாக வந்த பெயர் அசோகு. காலத்தால் பிந்தைய சங்க இலக்கியமான கலித்தொகையில் ஒரே ஒரு பாடலில் மட்டும் இப்பெயர் சுட்டப்பட்டுள்ளது.
சோகம் நீக்கும்
சோகத்தை நீக்கும் என்ற பொருளைத் தரும் சொல் அசோகம். மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தமயந்தியின் கதையிலிருந்து இது தெளிவாகிறது. தன்னுடைய கணவன் காணாமல் போன பின்பு, தமயந்தி கண்ணீர் மல்க ஒரு அசோக மரத்தைக் காண்கிறாள். முழுவதும் பூத்துக் குலுங்கி நிற்கிற மரத்தின் அருகில் சென்று, அதனுடைய பெயருக்கு ஏற்றவாறு தன்னுடைய துயரத்தை நீக்கும் வகையில், கணவன் மீண்டும் தன்னோடு சேர வேண்டும் என்று வேண்டுகிறாள். இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த மரத்துக்கு உயிரும் ஆன்மாவும் உண்டு என்றும், "மக்களின் துயரத்தில் இது துயர்கொள்ளும், மக்களின் மகிழ்ச்சியில் இது மகிழ்வு கொள்ளும்" என்பதும் பொதுவான நம்பிக்கை.
சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழகத்துக்கு வந்த பிறகு செயலை, பிண்டி என்ற இரண்டு தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. அசோகு என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. பிற்காலத் தமிழகத்தில் ‘செயலை' என்ற சொல் இந்தத் தாவரத்தைக் குறிப்பதற்குப் பதிலாக நெட்டிலிங்கம் தொடர்பான பாலியால்தியா (Polyalthea) என்ற பேரினத் தாவரங்களைச் சுட்டத் தொடங்கிவிட்டது.
என்ன வேறுபாடு?
சராகாவுக்கும் பாலியால்தியாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, முதல் தாவரத்தின் கொத்தான பூக்கள் நெருப்பை ஒத்தவை. இதை வழிமொழியும் வகையில் "எரிநிற நீள் பிண்டி இணர்" - திணை விடு தூது 63. "செந்தீ ஒண்பூம் பிண்டி" - மதுரைக்காஞ்சி 701, "பச்சைப் பட்டுக்குள் பொதிந்த செம்பவழங்கள்" - ரிது சம்ஹாரம் போன்றவை குறிப்பிடுகின்றன.
நெட்டிலிங்கத்தின் பூக்கள் பச்சை கலந்த வெண்மை நிறத்தவை. இரண்டுக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை இரண்டின் தளிர் இலைகளும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தைக் கொண்டவை ("ஊட்டி அன்ன ஒண்டளிர் செயலை" - அகநானூறு 68:5; "அழல்ஏர் செயலை அம் தளிர்" - அகநானூறு 188:11; அந்தச் செயலைத் துப்பு உறழ் ஒண்டளிர்" - ஐங்குறுநூறு 273). என்றாலும்கூட, இன்றைக்கு மக்களைக் குழப்பும் வகையில் அசோகம் என்ற சொல் இந்த இரண்டு வகைத் தாவரங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
புனிதப் பூ
கடவுளை வணங்குவதற்குத் தகுந்த மரமாக அசோகம் பல காலமாக இந்தியாவில் திகழ்ந்து வந்துள்ளது என்று பிரகத் சம்ஹிதை நூல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமண மதத்தினரும், பவுத்த மதத்தினரும் சராகா அசோக மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றனர். துர்க்கைக்கு உரித்தான ஒன்பது தாவரங்களில் அசோகமும் ஒன்று. சிவன் மட்டுமின்றி காமதேவனின் பக்தர்களும் இதைப் புனிதமாகக் கருதுகின்றனர். சமண அருகனுக்கு விருப்பமான இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார். அருகனின் பூ, பிண்டிப்பூ ("அசோகுடை செல்வன் அருகன்"). சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் என்று கருதப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.
மலர் நல்ல மணமுடையது; இளம் தளிரும் நல்ல மணமுடையது. இரண்டுமே ஏறத்தாழ ஆண்டு முழுவதும் உருவாவதால், பண்டை காலம் முதலே வீடுகளிலும், நந்தவனங்களிலும், பூங்காக்களிலும் இந்த மரம் வளர்க்கப்பட்டுவந்துள்ளது. பண்டைய இந்திய மக்கள் இந்த இரண்டு தாவர உறுப்புகளையுமே தலையிலும் காதிலும் (வண்காது நிறைத்த பிண்டி ஒண்டளிர் - திருமுருகாற்றுப்படை), மார்பிலும் அணிந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன. அசோக மரக் கூட்டங்கள் தங்களுடைய மலர்களுடன் காலைச் சூரிய ஒளியைப் போன்று திகழ்ந்ததாக மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுள்ளது.
இலக்கிய மோகம்
அசோக வனங்கள் பற்றி சமஸ்கிருத இலக்கியத்திலும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. சீதை ராவணனால் கடத்தப்பட்டு அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டது மட்டுமின்றி, 'அவள் எங்கு சென்றாள்?' என்று ஒரு அசோக மரத்திடம் ராமன் வருத்தப்பட்டுக் கேட்டதாக ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. அத்வைத வனத்திலும், இந்திரபிரஸ்தத்திலும் இந்த மரம் காணப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது.
சலங்கை அணிந்த ஓர் இளம்பெண் கால்களால் மென்மையாகவும், அன்போடும் உதைக்கப்பட்டால் இந்த மரம் பூத்துக் குலுங்கும் என்று காளிதாசர் மேகதூதத்தில் குறிப்பிட்டுள்ளார். "எனது வீட்டிலுள்ள அசோகு எனது காதலியின் சலங்கையணிந்த காலால் உதைத்தால் ஒழியப் பூக்காது" என்று மற்றொரு காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே சமணர்களின் ஆசாரங்க சூத்ரமும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் கூறுகின்றன. இப்படியாக மத நம்பிக்கை அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியிலும் அசோக மரம் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
(அடுத்த வாரம்: ஏன் பெண்களுக்காக அசோக மரத்தைக் காப்பாற்ற வேண்டும்?)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in