‘குயிலிசை போதுமே, அடக் குயில் முகம் தேவையா?' என்று சினிமாவில் நாயகன் வேண்டுமானால் பாடலாம். ஆனால் பறவைகளின் மீது காதல் கொண்டவர்களுக்கு, காட்டில் ஒரு பறவையின் பாடலை மட்டுமல்ல, பாடும் அந்தப் பறவையின் தோற்றமும் தெரிந்தால்தான் நிம்மதி. அப்போதுதான் அந்தப் பறவை இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்ய முடியும்.
பறவையின் பாடல் கேட்கிறபோது, அதன் முகம் எதற்கு? அந்தப் பாடலைக் கொண்டே இன்னமும் அந்தப் பறவை வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லுவதில் என்ன பிரச்சினை?
இருக்கிறது. சில பறவைகள், இரைகொல்லி பறவைகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, மற்றப் பறவைகளைப் போல குரலை எழுப்பி, தங்களை வேட்டையாட வரும் பறவைகளைத் திசைதிருப்பி விடுகின்றன.
உதாரணத்துக்கு வழக்கமாக ‘கீச் கீச்' எனக் குரல் எழுப்பும் பறவை ஒன்று, வேட்டையாட வரும் பறவையிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, பருந்துகளைப் போலக் குரல் எழுப்பலாம். ஒருவேளை அந்தப் பகுதியில் பருந்துகளே தென்படாமல் இருக்கும்பட்சத்தில், புதிதாக அந்தப் பகுதியில் பருந்துகள் இருப்பதாக மக்கள் தவறாக நம்பிவிட வாய்ப்புண்டு.
பறவை காக்கும் இசை
இதனால்தான், பறவையின் பாடல்களோடு, அந்தப் பறவையின் தோற்றமும் பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். இந்தப் பதிவுகளின் மூலம் ஒரு பறவை அழியும் நிலையில் இருக்கிறதா என்பது தெரிய வருவதோடு, அந்தப் பறவைகளின் வாழிடத்தையும் காப்பாற்ற முடியும்.
இந்த விஷயத்தைச் சற்றே வித்தியாசமாக இசை வடிவத்தில் செயல்படுத்தி வருகிறார்கள் மூன்று இளைஞர்கள். மூவர் அணியில் ஒருவரான ராபின், அது பற்றி பகிர ஆரம்பித்தார்.
"பெங்களூருவில் உள்ள ‘உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில்' (என்.சி.பி.எஸ்.) பறவைகளின் இயல்பு குறித்து நான் ஆராய்ந்துவருகிறேன். சில பறவைகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ்விகள். உலகில் வேறெங்கும் இவை வாழ்வதில்லை. அதிலும் மலை உச்சிகளில் மட்டுமே, அவை காணப்படும். இந்த மலை உச்சிப் பகுதிகளை ‘மேகத் தீவு' (ஸ்கை ஐலேன்ட்) என்று அழைப்போம். தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், மூணாறு ஆகிய பகுதிகளில் இப்படிப்பட்ட மேகத் தீவுகள் உள்ளன.

ஆனால், இன்றைக்கு மலைப்பகுதிகளில் நடைபெறும் மரம் வெட்டுதல், வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றால் பருவநிலை மாற்றமடைந்து மலை உச்சிப் பகுதிகள் வேகமாக நிர்மூலமாகிவருகின்றன. அதனால், அங்குள்ள பறவைகளும் சேர்ந்து அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான், நியூயார்க்கில் உள்ள பென் மிரினின் தொடர்பு ட்விட்டர் மூலம் வந்து சேர்ந்தது" என்று நிறுத்தினார்.
ட்விட்டர் பறவை
அவர் விட்ட இடத்திலிருந்து, பென் மிரின் தொடங்கினார். "நான் நியூயார்க் புரூக்ளினில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். என்னுடைய இசை ஆல்பங்களுக்கான பணிகள் அங்கேதான் நடைபெறுகின்றன.
சின்ன வயதிலிருந்தே பறவைகள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கடந்த ஒரு வருடமாகப் பறவைகளின் பாடலை வைத்து இசைக்கோப்புப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அவற்றில் ஒரு ட்யூனை ட்விட்டரில் வெளியிட்டேன். பலரும் அதைப் பாராட்டினார்கள். அந்த ட்யூனைக் கேட்டுத்தான் ராபின் என்னைத் தொடர்புகொண்டார்" என்றார்.

இந்த இடத்தில் தனது நண்பர் பிரசஞ்சித் யாதவை அறிமுகப்படுத்தினார் ராபின். "நானும் என்.சி.பி.எஸ். முன்னாள் ஆய்வு மாணவன். கடந்த 10 வருடங்களாகக் காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுத்துவருகிறேன்" என்றார்.
இந்த இடத்தில் தனது நண்பர் பிரசஞ்சித் யாதவை அறிமுகப்படுத்தினார் ராபின். "நானும் என்.சி.பி.எஸ். முன்னாள் ஆய்வு மாணவன். கடந்த 10 வருடங்களாகக் காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுத்துவருகிறேன்" என்றார்.
மறைந்துகொள்ளும் பறவை
பறவைகளின் இயல்புகளை ராபின் விளக்க, அந்தப் பறவையின் பாடலைக் கொண்டு பென் மிரின் இசையமைக்க, அந்தப் பறவையை ஒளிப்படமாகவும் வீடியோவாகவும் பிரசஞ்சித் ஆவணப்படுத்துகிறார்.
"வெறுமனே பறவைகளின் இயல்புகளை மக்களிடம் கொண்டுசென்றுவிட முடியாது. அப்படியே கொண்டு சென்றாலும், அதை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
உதாரணத்துக்கு, குட்டை இறக் கையன் (ஒயிட் பெல்லீடு ஷார்ட்விங்) என்றொரு பறவை உள்ளது. ஒவ்வொரு மலை உச்சியிலும் அந்தப் பேரினப் பறவையின் வேறு வேறு சிற்றினங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வேறு வேறு பாடல்களைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பறவைகள் மனிதர் யாரையாவது பார்த்துவிட்டால், உடனே பாடுவதை நிறுத்திவிட்டு, நம் கண்களுக்கு அகப்படாமல் மரங்களுக்கிடையே மறைந்துகொள்ளும் இயல்பு கொண்டவை.
அதேபோல நீலகிரி நெட்டைக்காலி (நீலகிரி பிப்பிட்) எனும் பறவை நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. உலகில் வேறு எங்கும் இந்தப் பறவையைக் காண முடியாது. ஆனால், இன்று இந்தப் பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்று சொல்லும் நிலை உள்ளது.
நேஷனல் ஜியாகிரஃபிக்
இந்த விஷயங்களையெல்லாம் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளுடன் மக்களுக்குப் புரியவைப்பது கஷ்டம். அதனால் என்னுடைய ஆய்வு முடிவுகளுடன் இசை, ஒளிப்படங்களையும் இணைத்து மக்களிடம் கொண்டுசெல்லும்போது, ஒரு பறவையின் குணநலன்கள், அது இப்படித்தான் பாடும் என்பதும் மக்களுக்குத் தெரியவரும். அதன்மூலம் அந்தப் பறவையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அதன் வாழிடங்களைப் பாதுகாக்க ஊக்கப்படுத்துவது எளிது" என்கிறார் ராபின்.
இப்படி, சுமார் 40 வகை மலை உச்சிப் பறவைகளின் பாடல்களை ராபின் பதிவு செய்துள்ளார். அவற்றில் 7 வகைப் பறவைகளின் பாடல்களைக் கொண்டு 10 விதமான ட்யூன்களைப் பென் மிரின் இசையமைத்துள்ளார். அந்த மலை உச்சிப் பறவைகளில் பெரும்பாலானவற்றை பிரசஞ்சித் படமெடுத்துள்ளார்.
"எங்களுடைய இந்த முயற்சியைக் கொண்டு இந்த ஆண்டு முடிவில் ‘நேஷனல் ஜியாகிரஃபிக்' தொலைக்காட்சியில் ஓர் ஆவணப் படத்தை வெளியிட உள்ளோம். இந்த முயற்சிக்கு என்.சி.பி.எஸ்., பாம்பே இயற்கை வரலாற்று கழகம் போன்ற அமைப்புகள் நிதி உதவி செய்கின்றன" என்கிறார் ராபின்.
எல்லாம் சரி, இந்த ட்யூன்களுக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறீர்களா என்று கேட்டபோது, "இயற்கை அனைவருக்கும் பொதுவாக இருக்கும்போது இசைக்கு மட்டும் எதற்குக் காப்புரிமை? அந்த மலை உச்சிப் பறவைகளின் பாடல் உங்களை மகிழ்வித்தால் போதும்!" என்கிறார்கள் ஒருமித்த குரலில்!
நீலகிரி நெட்டைக்காலி