

2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்:
மனிதக் குலத்தை அச்சுறுத்தும் பிளாஸ்டிக்
‘சிந்தன்’ குழு, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பொருளாகச் சமீப ஆண்டுகளாகக் கருதப்பட்டுவரும் பிளாஸ்டிக், நம் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. உற்பத்தி, பயன்பாடு, பயன்படுத்திய பிறகு என அனைத்துக் கட்டங்களிலும் பிளாஸ்டிக் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கின் ஆபத்தை எடுத்துரைக்கும் அதேநேரம் அதற்கான மாற்றுப்பொருள்கள் எவையெவை, பிளாஸ்டிக் சார்பை எப்படிக் குறைப்பது என்று இந்த நூல் எடுத்துரைக்கிறது.
நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663
சூழலியல் அரசியல் பொருளியல்
கி. வெங்கட்ராமன்
நுகர்வே இன்றைய சமூகத்தின் மையமாக இருக்கிறது. நுகர்வு உலகத்தையும் சந்தையையும் பாதுகாக்கும் வேலையை மட்டுமே அரசு செய்துவருகிறது. மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட எதுவும் முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக நுகர்வு, சந்தை வளர்ச்சி வாதமே மையமாக இருக்கிறது. அதன் பல்வேறு பரிமாண ஆபத்துகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
பன்மை வெளி, தொடர்புக்கு: 9840848594
பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர்
ஸாய் விட்டேகர், தமிழில்: கமலாலயன்
தமிழகத்தை மையமாகக்கொண்டு பணியாற்றிய உலகறிந்த ஊர்வன அறிஞர் ரோமுலஸ் விட்டேகர். அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் இந்தியப் பாம்புகள், ஊர்வனவற்றைப் பாதுகாப்பதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை முதலைப் பண்ணை ஆகியவற்றை நிறுவியவர். விரிவான ஆராய்ச்சிப் பணிகள் மூலம் இந்தியாவில் பாம்புகள், முதலைகள் பாதுகாப்புக்குப் பெரும் பங்காற்றியவர். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் சிறப்புற வெளியாகியிருக்கிறது.
வானதி, தொடர்புக்கு: 94441 26523
வாழும் மூதாதையர்கள்
அ. பகத்சிங்
தமிழகத்தில் உள்ள பதிமூன்று பழங்குடி இனங்களின் இனவரைவியல் கூறுகள், பண்பாட்டுத் தனித்தன்மைகள், வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இருளர்கள், காடர்கள், காணிகள், காட்டுநாயக்கர், கோத்தர், குறும்பர், குறுமன், மலையாளிகள், முதுவர், பளியர், பணியர், சோளகர், தோடர் ஆகிய பழங்குடிகளை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
உயிர், தொடர்புக்கு: 98412 04400
உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
நக்கீரன்
‘புட்டிகளில் தண்ணீரை அடைத்து விற்கும் நிறுவனங்கள் தண்ணீரை விற்பதில்லை, ஞெகிழிப் புட்டிகளையே விற்கின்றன’ என்கிற விமர்சனம் தீவிரமடைந்துவருகிறது. இன்று காணும் இடமெல்லாம் ஞெகிழித் தண்ணீர்புட்டி குப்பை மலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. உண்மையில் இந்த புட்டிநீர் எப்படிப்பட்டது, சுற்றுச்சூழல்-பொருளாதாரம்-உடல்நலத்துக்கு அது இழைக்கும் தீங்குகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கும் இந்தக் குறுநூல் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒன்று. அதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
காடோடி பதிப்பகம், தொடர்புக்கு: 80727 30977
தமிழரின் தாவர வழக்காறுகள்
ஆ. சிவசுப்ரமணியன்
தாவரங்களை உயிரியல்ரீதியில் மட்டுமல்லாமல், சமூகரீதியிலும் பகுப்பாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கும் நூல். இந்த நூலில் ‘பருத்தி’, ‘ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய்’, ‘தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய்’ ஆகிய மூன்று நெடுங்கட்டுரைகளும் தாவரவியலுக்கும் சமூகத்துக்கும் இடையிலான ஊடாட்டங்களை வரலாற்றின் துணைகொண்டு விரிவாக ஆராய்ந்துள்ளன. பொருள்சார் பண்பாட்டு ஆய்வு என்கிற துறை சார்ந்து தாவரவியல் பின்னணியுடன் வெளியாகியுள்ள முக்கியமான நூல் இது.
உயிர், தொடர்புக்கு: 98403 64783
மரப்பேச்சி
கோவை சதாசிவம்
சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், புதிய இயற்கை ஆர்வலர்களைக் காடுகளை நோக்கி அழைத்துச் சென்று இயற்கை, காட்டுயிர்கள், தாவரங்கள் குறித்து தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவரும் பணியைச் செய்துவருபவர். அந்த வகையில் காடறிதல் பயணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மரப்பேச்சி என்கிற தலைப்பில் நூலாக வெளியாகியிருக்கிறது.
குறிஞ்சி பதிப்பகம், தொடர்புக்கு: 99650 75221
காடர்
வே. பிரசாந்த்
காட்டையும் காட்டில் வாழும் பழங்குடிகளையும் மையமாகக்கொண்டு ஒரு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு வெளியாவது அபூர்வம். அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது காடர் சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாகக் காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகின்றன.
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302
ராஜ வனம்
ராம் தங்கம்
நாஞ்சில் நாட்டின் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நாவல். காடு, ஆறு, மலை, உயிரினங்கள், மரம், செடிகொடிகள், பறவை என நம்மைச் சுற்றியுள்ள உயிர்கள் அனைத்தும் உறவுகொண்டவை என்பதைக் கதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே புதியதைத் தெரிந்துகொள்வதும் விளங்காதவற்றைப் புரிந்துகொள்வதும்தான். அந்த வகையில் ராஜ வனம் ஒரு மாறுபட்ட பயணம்.
வம்சி, தொடர்புக்கு: 04175 235806
இந்து தமிழ் வெளியீடு
விண்ணளந்த சிறகு
சு. தியடோர் பாஸ்கரன்
‘இந்து தமிழ் உயிர்மூச்சு' இணைப்பிதழில் சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் 'வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடர் கவனப்படுத்தி, வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. தற்போது அந்தக் கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இயற்கை பெருமளவு சீரழிக்கப்பட்டுவரும் நிலையில், சுற்றுச்சூழல் சார்ந்த புரிதலை இந்த நூல் மேம்படுத்தும்.
இந்து தமிழ் திசை, தொடர்புக்கு: 7401329402