

இயற்கை எப்போதுமே ஆச்சரியங்கள் நிரம்பியது. எத்தனையோ தொந்தரவுகள், பிரச்சினைகள் இருந்தாலும் சிறிய இடம் கிடைத்தாலும் அந்த இடத்தில் ஒட்டிக்கொண்டு துளிர்ப்பதுதான் இயற்கையின் மாறாத தன்மை. தாவரங்கள்தான் என்றில்லை, உயிரினங்களும் இப்படித்தான் நம்மைச் சுற்றிச் செழித்துள்ளன.
இது எப்படிச் சாத்தியம் என்று யோசிப்பவர்கள், உங்களைச் சுற்றிக் கொஞ்சம் கூர்ந்து நோக்குங்கள். உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும், தோட்டத்திலும், பக்கத்தில் உள்ள பூங்காவிலும் எறும்பு, சிலந்தி, பல்லி, வண்ணத்துப்பூச்சி, தேனீ, மண்புழு, நத்தை, தவளை, அணில், குரங்கு, காக்கை தொடங்கி எண்ணற்ற வகைப் பறவைகள் என இயற்கையாக வாழும் பல உயிரினங்களைப் பார்க்கலாம். இவை எதுவுமே மனிதர்கள் வீட்டுவிலங்காகப் பழக்கி வளர்த்தவை அல்ல.
காட்டுவிலங்கும் வளர்ப்புவிலங்கும்
காடுகளில் இருந்து மனிதர்கள் அழைத்துவந்து பழக்கிய முதல் விலங்கு நாய். அதன் பிறகு பூனை, ஆடு, மாடு, கோழி, குதிரை, கழுதை எனப் பல உயிரினங்கள் வீட்டுவிலங்குகளாகவோ, பண்ணை விலங்குகளாகவோ ஆக்கப்பட்டன.
இவை மனிதர்களின் தேவைகளுக்காக ஆரம்பத்தில் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்டு வேலை செய்யவும், உணவுக்காகவும் வளர்க்கப்பட்டன. அழகு, பாசத்தை வெளிப்படுத்தியதால் இவற்றில் சில செல்லப் பிராணிகளாகவும் மாறின.
ஆனால், காடுகளில் இருந்து மனிதர்கள் அழைத்து வராமல், தாங்களாகவே ஊருக்குள் வந்து தகவமைத்துக்கொண்டு, நம்முடன் வாழப் பழகிவிட்ட பல உயிரினங்கள் இன்றைக்கும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆரம்பத்தில் காடுகளுக்கு அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளிலும், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப் பகுதிகள் வரையும் இவை பரவிவிட்டன. தொடக்கத்தில் மனிதர்களிடம் இருந்து பெரிய தொந்தரவுகள் இல்லாததால், கவலையின்றி நம்மிடையே வாழப் பழகிவிட்டன. இந்த உயிரினங்கள் உடல் ரீதியிலும், நடத்தை முறையிலும் தங்கள் மூதாதையரிடம் இருந்து பல மாற்றங்களைப் பெற்றுள்ளன, அதனால்தான் நம்மிடையே வாழ முடிகிறது.
நவீன வாழ்க்கை தரும் தொந்தரவுகளைத் தாண்டி மனிதர்களை அண்டி வாழ்வதால் சில வசதிகள் கிடைப்பதால்தான், இன்றைக்கும் இந்த உயிரினங்கள் ஊருக்குள் வாழ்கின்றன. அதேநேரம், மனிதத் தலையீடும், பிரச்சினைகளும் அதிகரித்துவிட்டால் இந்த உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அருகிப் போகவும் கூடும். முன்பு நகர்ப்புறங்களில் பரவலாகக் கூடு கட்டிச் செழித்திருந்த சிட்டுக்குருவிகள் இன்றைக்குச் சில ஊர்கள், கிராமங்களில் மட்டும் முடங்கிவிட்டதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
உயிரினங்களின் பேருதவி
அதேநேரம் காடுகளில் இருந்து வந்த உயிரினங்கள் பல்வேறு வகைகளில் நமக்கு உதவிவருகின்றன.
வேகமாக இனப்பெருக்கம் செய்து காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரப்புவதிலும், தானியங்களை அழிப்பதிலும் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், பல்லி, தவளை, சிலந்தி போன்றவற்றின் முக்கிய இரை பூச்சிகள்தான். பெரும்பாலான பறவைகளின் முக்கிய உணவும் பூச்சிகள்தான். பறவைகள் இல்லை என்றால் உலகிலுள்ள தாவரங்கள் அனைத்தையுமே பூச்சிகள் அழித்துவிடக் கூடும்.
ஆந்தைகளும் பாம்புகளும் எலிகளைச் சாப்பிடவில்லை என்றால் நமது தானியங்களும், வயல்களும் பெருமளவில் நாசமாகும். வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்றவை தாவர இனப்பெருக்கம் நடக்க மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன.
மண்புழு பற்றிச் சொல்லத் தேவையில்லை, அது உழவனின் நண்பன். ‘ஆகாயத் தோட்டி' எனப்படும் காக்கை நாம் தேவையற்றது என ஒதுக்கும் கழிவு, இறந்த விலங்குகள் போன்றவற்றைச் சாப்பிட்டு ஊரைச் சுத்தப்படுத்துகிறது. இப்படி உலகைச் செழிக்கவைப்பதில் இந்த உயிரினங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பெட்டிச் செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ள காட்டுயிர்கள், உங்கள் பகுதியில் உள்ளனவா என்று சற்று உற்றுப் பாருங்கள். அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணியுங்கள். அது சுவாரசி யங்கள் நிரம்பிய புது உலகம்.