Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

2020: சூழலியல் விடுத்த எச்சரிக்கை

வளர்ச்சி எனும் அதிவேகச் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு விரைந்து கொண்டிருந்த மனித இனத்தைச் சற்று நிதானிக்க வைத்திருக்கிறது 2020ஆம் ஆண்டு. இயற்கையின் குரலுக்குச் சிறிதளவேனும் மக்கள் காதுகொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வுகள்:

காடழிப்பும் கரோனாவும்

காட்டு உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவியதே, நாவல் கரோனா வைரஸ் நோய் தொற்றத் தொடங்கியதற்கான அடிப்படைக் காரணம். சீனாவின் வூகான் நகரத்தில் உயிருள்ள உயிரினங்கள் விற்பனை செய்யப்படும் சந்தையிலேயே, இந்த நோய்த்தொற்று தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

காடுகளை அழிப்பது, காட்டு உயிரினங்களைப் பிடிப்பது, அவற்றைப் பண்ணைகளில் வளர்ப்பது போன்றவை மனிதர்களுக்கு அருகே உயிரினங்களைக் கொண்டுவந்துவிட்டன. அந்த உயிரி னங்களிடம் உள்ள வைரஸ் உடனடி யாக வளர்ப்பு விலங்குகளுக்குத் தொற்றி, அவற்றிடமிருந்து மனிதர்களுக்குத் தாவுவதும் நடைபெறுகிறது. கரோனா காலகட்டம் உணர்த்தியுள்ள மிக முக்கியமான உண்மை இது.

கொல்லும் காற்று

கரோனாப் பெருந்தொற்று ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக, மின்சார உற்பத்தி, தொழிற்சாலை செயல்பாடுகள், வாகனப் போக்குவரத்து உள்ளிட்டவை சரிந்ததால் காற்று மாசுபாடு குறைந்தது. தலைநகர் டெல்லியில் 2018 ஜூலைக்குப் பிறகு காற்று மாசுபாடு குறைவான நிலைக்குச் சென்றிருப்பதாக நாசா செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் தெரி வித்தன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து இமயமலைப் பகுதி தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இது எல்லாமே தற்காலிக மாற்றமாக மட்டுமே எஞ்சியது. இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாடு 115 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டுக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்று லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

விசாகப்பட்டினம் நச்சு வாயுக் கசிவு

விசாகப்பட்டினத்தின் எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் மே 7 அன்று ஸ்டைரீன் நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் ஊர் மக்கள் சாலைகளிலும் வீடுகளிலும் மயங்கிச் சரிந்தனர். உடனடியாக 11 பேர் பலியானார்கள். ஆலையைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். ஏராளமான கால்நடைகளும் இறந்தன. இந்த ஆலை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலே இயங்கி வந்தது, விபத்துக்குப் பிறகே கண்டறியப்பட்டது.

மிரட்டிய வெட்டுக்கிளி

இந்தியாவின் ஐந்து வடமாநிலங்களின் வேளாண் நிலங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய பாலைவன வெட்டுக் கிளிகளின் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் 40,000 ஹெக்டேர் வேளான் பயிர்கள், காய்கறிகள் வெட்டுக்கிளிகளால் சேதமடைந்தன. அதேநேரம் பாலைவன வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்து வதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் எந்தத் திட்டவட்டமான திட்டமும் இருக்கவில்லை.

யானைகள் உயிரிழப்பு

கோவை வனச்சரகத்தில் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 17 யானைகள் மர்மமாக இறந்தன. அந்த வனச்சரகத்துக்கு உட்பட்ட யானை வழித்தடத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளே இதற்குக் காரணம் எனக் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். தொடர்ச்சியான யானை மரணத்தால் இந்தச் செய்தி ஊடக கவனம் பெற்றது. இதைப் பற்றி ஆராய 11 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதேநேரம் சத்தியமங்கலம் வனச்சரகத்தில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தும் அந்தச் செய்தி ஊடக கவனத்தைப் பெறவில்லை.

நீர்த்துப்போகும் சுற்றுச்சூழல் சட்டம்?

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020யை கடந்த ஆண்டு வெளியிட்டது. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986இன்கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006 ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக புதிய வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

சுரங்கம் தோண்டுதல், பாசனத்துக்கான அணை, தொழிலகம், கழிவு சுத்திகரிப்பு நிலையம் போன்றவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அறிவியல்பூர்வமாக மதிப்பிடுவதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு. இந்த விதிகளில் மக்களிடம் கருத்துக் கேட்பதற்கான வழிவகை உண்டு; ஆனால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கத்துடன் புதிய வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக நாடெங்கிலும் சுற்றுச்சூழல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

வேளாண் சட்டங்களுக்குக் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ‘புதிய வேளாண் சட்டம் 2020’ நிறைவேற்றப்பட்டது. இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். வேளாண் பொருள்களுக்கு அளிக்கப்பட்டுவந்த குறைந்தபட்ச ஆதார விலையை புதிய சட்டங்கள் இல்லாமல் ஆக்கிவிடும் என்பதே போராடும் உழவர் களின் முதன்மைக் குற்றச்சாட்டு. நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய உழவர்களின் ‘டெல்லி சலோ’ போராட்டம் டெல்லியில் நிலவும் கடுமையான குளிரைத் தாண்டி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. 30-க்கும் மேற்பட்ட உழவர்கள் போராட்டக் களத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

பெட்ரோலிய மண்டலம்: முரண்பாடான செயல்பாடுகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், கரூர் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை ஆண்டின் முற்பகுதியில் தமிழக அரசு ரத்துசெய்தது. ஆனால், ஆண்டின் பிற்பகுதியில் தமிழகக் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.யுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கடுமையான எதிர்ப்பு நிலவும் நிலையில், காவிரிப் படுகைக்குக் கிழக்கே கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அடுத்த ஆபத்தாகக் கருதப்படுகிறது.

அதிகரிக்கும் காட்டுத்தீ

ஆஸ்திரேலியாவில் 2019இன் இறுதியில் தொடங்கித் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் எரிந்த காட்டுத்தீயில் 30 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகின. சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்திரேலிய அரசு விமர்சிக்கப்பட்டது. ஐந்து கோடித் தவளைகள், 10 கோடி பாலூட்டிகள்-பறவைகள், 250 கோடி ஊர்வன உள்பட 300 கோடி உயிரினங்கள் அழிந்துவிட்டதாக உலக இயற்கை நிதியம் (WWF) தெரிவிக்கிறது. பருவநிலை மாற்ற விளைவுகளை உலக நாடுகள் அலட்சியப்படுத்திவரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

கிரெட்டாவுக்கு விருது

ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க், 2019ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்துப் பரவலான கவனத்தை உருவாக்கினார். 2020இலும் அவருடைய பணி தொடர்ந்தது. அதேநேரம் கரோனாப் பெருந்தொற்று அவருடைய பயணத்தையும் பிரசாரத்தையும் முடக்கியது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையே நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்தக்கூடாது என்று நடைபெற்ற போராட்டத்துக்கு கிரெட்டா ஆதரவு தெரிவித்தார். போர்த்துக்கீசிய அறக்கட்டளை வழங்கும் மனிதநேயத்துக் கான குல்பென்கியன் (Gulbenkian) பரிசை வென்றார். அதற்கான பரிசுத் தொகையைப் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் தொண்டு அமைப்புகளுக்கு வழங்கினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x