

தென் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தும் திட்டம் உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இயற்கையான ஒரு சதுப்புநிலத்தைச், செயற்கையாகத் தோண்டி ஆழப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணராமல் அரசு இப்படி அறிவித்துள்ளது என்று சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். நீர்நிலைகளைச் சரிவரக் கையாளாததாலேயே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பள்ளிக்கரணையை ஆழப்படுத்தக் கூடாது என்று கூறப்படுவதற்கான அடிப்படை:
# பள்ளிக்கரணை இயற்கையாக உருவான பஞ்சு போன்ற ஓர் உறிஞ்சும் அமைப்பு; மழை நிறைந்த காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடைக் காலத்தில் சீராக வெளிவிடக்கூடியது. ஆழப்படுத்துவது இந்த இயல்பை முற்றிலும் தகர்த்து எதிர்காலத்தில் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம், வறட்சி ஏற்படக் காரணமாக அமையும்.
# மத்திய ஆசியப் பறவைகள் வழித்தடத்தின் முக்கிய அங்கம் பள்ளிக்கரணை சதுப்புநிலம். குளிர்கால வலசைப் பருவத்தில் பூநாரை, உள்ளான், மண்கொத்தி, ஆள்காட்டி, தாழைக்கோழி உள்ளிட்ட வகைகளின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்குச் சிறு பூச்சிகள், விதைகள், நத்தைகள், மீன்கள் போன்றவற்றின் மூலம் உணவளித்துவருகிறது. தூர்வாரி ஆழப்படுத்தினால் பறவைகள், அவை உண்ணும் உயிரினங்களின் நிலைமை என்ன ஆகும்?
# சதுப்புநிலத்தின் உயரமான பகுதிகளான பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்க நல்லூர், செம்மஞ்சேரி போன்றவற்றில் கடல்நீரைப் போன்று உப்புத்தன்மை நிறைந்த நீர்தான் உள்ளது; இந்நிலையில் நன்னீர் சதுப்புநிலமான பள்ளிக்கரணையை ஆழப்படுத்துவது கடல் நீர் உட்புக வழிவகுக்கும். சுற்றிலும் வாழும் மக்களுக்கும், சதுப்புநிலத்தில் வாழும் பல்லுயிர்களுக்கும் வாழத் தகுதியற்ற சூழலை இது ஏற்படுத்தும்!
# பள்ளிக்கரணையை ஆழப்படுத்துவதால் இங்கிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் கடலுக்குச் சீராகச் சென்றுகொண்டிருக்கும் நீரின் அளவு குறைந்து, கடல் நீர் உள்ளே வரச் சாத்தியம் உண்டு; மத்திய ஆசியாவில் இதுபோன்ற செயலால் பாலைவனமாக மாறிய அரல் ஏரி போன்று பள்ளிக்கரணை மாற சாத்தியமுள்ளது.
# பள்ளிக்கரணை என்பது முப்பதுக்கும் மேற்பட்ட ஏரி, சதுப்புநிலங்களின் சங்கமம்; சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்க பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கான நீர் வழிப்பாதைகளைச் சீரமைக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும். முக்கியமாகச் சதுப்புநிலத்தை ஆக்கிரமித்து மலைக் குன்றுகள் போல் நீர்வழி பாதையைத் தடுத்துக் கொண்டிருக்கும் மாநகராட்சிக் குப்பை மேட்டின் பகாசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது அவசியம்.
# பள்ளிக்கரணையை ஆழப்படுத்தினாலோ, இருப்பதை மறுகட்டமைப்பு செய்ய முயன்றாலோ அங்கிருக்கும் பல்லுயிர்களின் உயிரினப் பன்மை குறைந்து வெள்ளம், வறட்சி மூலம் மனிதர்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்து, உலக அளவில் முக்கியமான ஒரு சதுப்புநிலத்தைப் பாழாக்கிய அவப்பெயரே வந்துசேரும்!
- தீபக் வெங்கடாசலம்