Published : 28 Nov 2020 03:16 am

Updated : 28 Nov 2020 19:40 pm

 

Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 07:40 PM

‘யானைக் காவலன்’ அஜய் தேசாய்

elephant-guard

'ஓசை' காளிதாசன்

யானை பாதுகாப்பில் அக்கறை உள்ள அனைவருக்கும் பெரும் துயரமளிக்கும் செய்தி கடந்த வாரம் வந்துசேர்ந்தது. உலகப் புகழ்பெற்ற ஆசிய யானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் (62) மாரடைப்பால் காலமானதுதான் அந்தச் செய்தி. யானை அறிவியலையும் அஜய் தேசாயையும் அறிந்தவர்கள், அவரின் மரணம் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர்வார்கள்.

1980-களில் ஆப்பிரிக்க யானை களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஆசிய யானைகள் குறித்த ஆய்வுகள் அரிதாகவே இருந்தன. அப்போது, ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம்’ (BNHS) யானைகள் பற்றிய ஆய்வுப் பணி ஒன்றைத் தொடங்கியது. ஜே.சி. டேனியல் தலைமையில் ஏ.ஜே.டி. ஜான்சிங் போன்றவர்களால் தொடங்கப்பட்ட அந்த ஆய்வு முதுமலை, பந்திபூர், நாகரஹொலே பகுதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக இளம் ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்றபோது கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த அஜய் தேசாய், தமிழகத்தைச் சேர்ந்த சிவகணேசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டார்கள்.


தமது கல்வித் தகுதி, காட்டுயிர் ஆய்வில் கொண்டிருந்த ஆர்வம் ஆகியவற்றுடன் மாணவப் பருவத்தில் கால்பந்து, ஓட்டப்பந்தயம் ஆகிய வற்றில் பரிசு வென்றிருந்ததும் தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று என்று அவரே கூறியுள்ளார். ஏனென்றால், காட்டு யானைகள் குறித்த ஆய்வுக்கு உடல்தகுதி அவசியம் என்று தேர்வுக்குழு அறிவுறுத்தியிருந்தது.

நவீன அடிப்படை ஆய்வு

கடல் உயிரின ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த அஜய் தேசாய், 1982 ஆம் ஆண்டு யானை ஆய்வுப் பணியைத் தொடங்கினார். காட்டு யானைகளை ஆய்வுசெய்ய நேரடியாக அவர் அனுப்பப்படவில்லை. தென்தமிழகத்தில் களக்காடு சரணாலயப் பகுதியில் அப்போது நடைபெற்ற பணிகளுக்கு உதவ ஆனைமலையிலிருந்து 4 வளர்ப்பு யானைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. அப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை நடத்திவந்த ஏ.ஜே.டி. ஜான்சிங்கின் வழிகாட்டுதலில் வளர்ப்பு யானை களைக் கண்காணித்து, அவற்றின் நடவடிக்கைகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்யும் பணியை சிவகணேசனுடன் இணைந்து அஜய் தேசாய் தொடங்கினார்.

பின்னர் இருவரும் முதுமலை வந்தனர். அங்கே 10 ஆண்டுகள்வரை யானைகள் குறித்த பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்தனர். மேல்கார்குடி பகுதியில் இருந்த ‘கரடி பங்களா’ என அழைக்கப்பட்ட பழைய கட்டடம் ஒன்றைச் சீரமைத்து, அங்கே தங்கியிருந்து ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வுதான் நவீன காட்டுயிர் அறிவியல் முறையான ‘ரேடியோ காலர்' முறையில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு. ஆசிய யானைகள் பற்றி இன்று நாம் அறிந்திருக்கும் வாழிடம், வலசை, உணவுமுறை எனப் பல்வேறு தகவல்களை தந்த முன்னோடி ஆய்வு அது.

அப்போது பெற்ற அறிவும் அனுபவமும் தொடர்ந்து யானைகள் குறித்த ஆய்வில் அவரை ஈடுபடவைத்தது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, வியட்நாம், மலேசியா உள்பட ஆசிய யானைகள் வாழும் பல்வேறு நாடுகளில் அவருடைய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. கடந்த 38 ஆண்டுகளாக அவருடைய ஆய்வுப் பணி தொய்வின்றித் தொடர்ந்துகொண்டிருந்தது.

வல்லமை மிகுந்த ஆலோசகர்

யானை - மனித எதிர்கொள்ளல் அதிகரிக்கத் தொடங்கியது கடந்த 25 ஆண்டுகளாகத்தான். எனவே, அந்த விவகாரத்தை மேலாண்மைசெய்ய ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அறிவியல் தரவுகள் தேவைப்பட்டன. அவற்றைத் தரும் வல்லமை பெற்றவராக அஜய் இருந்தார்.

உலக இயற்கை நிதியத்தின் (WWF) ஆசிய யானை சார்ந்த செயல் பாடுகளுக்கான ஆலோசகர், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானைகள் சிறப்புக் குழுவின் தலைவர், உறுப்பினர், மத்திய அரசு அமைத்த யானை சிறப்புச் செயல்பாட்டுக் குழு (Elephant Task Force) உறுப்பினர் ஆகிய முக்கியப் பொறுப்புகளை அஜய் தேசாய் வகித்துள்ளார்.

காட்டில் யானைகள் வாழும் எல்லா இந்திய மாநிலங்களிலும் பல்வேறு மேலாண்மைப் பணிகளுக்கு ஆலோசகராக இருந்துவந்தார். டேராடூன் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் (WII) பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கும் மேலாண்மைப் பணிகளுக்கும் அவரை ஆலோசகராக நியமித்திருந்தது.

அவரின் ஆய்வுகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டதால், நமது காடுகளை நன்கு அறிந்தவராக இருந்தார். யானைகள் மேலாண்மை குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் பல்வேறு முடிவுகள் அஜய் தேசாயின் ஆலோசனை யைப் பெற்றே இறுதி செய்யப்பட்டு வந்துள்ளன. அன்மையில் கோவை வனக் கோட்டத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த யானைகள் மரணம் பற்றி அறிய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவில் அவர் இடம்பெற்றிருந்தார்.

வலசை பாதை பாதுகாப்பு

இந்தியாவில் யானைகள் பயன்படுத்தும் குறுகிய வலசைப் பாதைகளைக் (Elephant corridors) காப்பாற்றும் பெருமுயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், தனியார் நிலத்தில் இருக்கும் யானைகளின் வலசைப் பாதைகளுக்கு எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. நீலகிரியில் உள்ள சீகூர் யானை வலசைப் பாதை குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பு சார்ந்த மேல்முறையீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

மசினகுடி பகுதியில் யானை வலசைப் பாதையை மறித்து இயங்கிவரும் கேளிக்கை விடுதிகளை மூடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கி யிருந்தது. அதற்குத் தமிழக வனத்துறை தந்த அறிவியல் தரவுகள் முக்கியக் காரணம். அந்த அறிவியல் தரவுகளுக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர் அஜய் தேசாய். அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

பல உயிரியலாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல்கள் எழுதுவதிலும் வல்லவராக இருப்பார்கள். ஆனால், கள ஆய்வை யும் அனுபவத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நகரத்தில் இருந்துகொண்டு கல்விப்புல அறிவைக் கொண்டவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் கொடுக்கும் மேலாண்மைப் பரிந்துரைகள் பெரும்பாலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகவும் குறிப்பிட்ட பகுதிக்குப் பொருந்தாதவையாகவும் இருக்கும்.

ஆனால், 38 ஆண்டுகள் தொடர்ந்து கள ஆய்வு செய்பவராக இருந்த அஜய் தேசாய் தரும் ஆலோசனைகள் நடைமுறையில் சாத்தியப்படக்கூடியவையாகவே இருந்தன. அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவையாகவும் இருந்தன. அத்துடன் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் யானைகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு அரங்குகளில் அஜய் தேசாயின் குரல் வலிமையாக ஒலித்துள்ளது.

யானைக் காவலன்

அவரது ‘The Indian elephant: endangered in the land of Lord Ganesha’ (1997) எனும் நூல் யானைகளைப் பற்றிய அடிப்படை அறிவியலை அறிய உதவும் முக்கிய நூல்.

உலகின் முன்னணி ஆய்வாள ராகவும் அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோரிடம் நெருக்க மானவராகவும் இருந்திருந்தாலும் எந்த மகுடங்களையும் சூட்டிக்கொள்ளாத எளிய மனிதராக அவர் இருந்துவந்தார். தம்மை நாடி வரும் இளம் ஆய்வாளர் களை அரவணைத்து வழிநடத்தும் உயர்ந்த பண்பைக் கொண்டிருந்தார்.

யானைகள் குறித்த ஆய்வுகளிலும் மேலாண்மை நடவடிக்கைகளிலும் பெரும் பங்காற்றிய தலைச்சிறந்த அறிவியலாளரை இழந்துள்ளோம். இது ஒரு பெரும் வெற்றிடம். ஆசிய யானைகள் பெரும் காவலனை இழந்திருக்கின்றன.

'ஓசை' காளிதாசன்,

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: pasumaiosai@gmail.com


யானையானைக் காவலன்Elephant Guardஅஜய் தேசாய்Elephantஅடிப்படை ஆய்வுஆலோசகர்உலக இயற்கை நிதிவலசை பாதை பாதுகாப்புயானை பாதுகாப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x