

‘தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகம்’ என உலக அரங்கில் கம்பீரமாக எடுத்துக்காட்டுவதற்கான புத்தகங்கள் என்று யோசித்தால், தேடினால் அந்தப் பட்டியலில் முதலில் இடம்பெறுபவை ‘க்ரியா’ வெளியீடுகளாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பதிப்பகமும் அதன் மூளையாகவும் உடலாகவும் செயல்பட்டுவந்த ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும் சமகாலத்தில் இயங்கினார்கள் என்பது நம் காலத்துக்குப் பெருமை.
1974 இல் தொடங்கப்பட்ட ‘க்ரியா’, 140-க்கும் குறைவான புத்தகங்களையே வெளியிட்டிருக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இருப்பதோ, நீண்ட காலம் செயல்பட்டிருப்பதோ ஒரு பதிப்பகத்தையோ அந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகங்களையோ தனித்துக் காட்டுவதில்லை. காலத்தின் பெருவெள்ளத்தில் தரம் மட்டுமே புத்தகங்களுக்கு உரிய இடத்தையும் அவசியத்தையும் உறுதிசெய்கிறது. ‘க்ரியா' வெளியீடுகள் அந்த வெள்ளத்தில் கரையேறக்கூடியவையாகவே தோன்றுகின்றன.
தமிழில் எத்தனையோ முன்னணிப் பதிப்பகங்கள் இயங்கிவந்தாலும், பெரும் பாலான பதிப்பகங்கள் தொடத் துணியாத, எட்டியே பார்க்காத பல துறைகள் உண்டு. சுற்றுச்சூழல், மருத்துவம், காட்டுயிர் போன்ற துறைகள் பற்றியெல்லாம் தமிழ்ப் பதிப்பகங்கள் சிந்திக்காத ஒரு காலத்தில், இன்றைக்கும்கூட அந்தத் துறை சார்ந்த நூல்களின் விற்பனை சாத்தியத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு பல பதிப்பகங்கள் செயல்பட்டுவரும் நிலையில், தொடர்ந்து பாய்ச்சலுடன் இயங்கிக்கொண்டிருந்தது ‘க்ரியா’. ‘க்ரியா’வுக்கு முன்பே 1940களில் வை.கோவிந்தனின் ‘சக்தி காரியாலயம்’, 1965இல் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் ‘வாசகர் வட்டம்’ போன்றவை ஒரு தடத்தை உருவாக்கிச் சென்றிருந்தன.
முன்னோடி முயற்சிகள்
1977 முதல் 1986 வரையிலான பத்தாண்டு காலத்தில் ‘க்ரியா’ கொண்டுவந்து, தற்போது அந்தப் பதிப்பகத்தின் அச்சில் இல்லாத நூல்கள் இவை:
* இந்தியாவில் சுற்றுச்சூழல், தமிழில்: ப. சுப்பிரமணியம், 1986
* நெல் சாகுபடி, எஸ்.என். நாகராசன், 1977
* தோண்டு கிணறுகளும் அவற்றின் அமைப்பும், எஸ்.பி. வாட், டபிள்யு.இ. உட், தமிழில்: எஸ். பழனிச்சாமி, 1982
* மரம் வளர்ப்பு விரிவாக்கப் பணியாளர்களுக் கான குறிப்புகள், என். சிவராமன், 1983
* Agricultural Change and the Mercantile State, Barbara Harris, 1985
* டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், தமிழில்: ப. சங்கரலிங்கம், 1984
* Healthcare in India, A crisis of cost or commitment?, Dr.Arjun Rajagopalan, 1984
அந்தக் காலத்தில் வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் துறைகள் குறித்துத் தமிழகத்தில் நடைபெற்ற விவாதங்கள், முன்னெடுப்புகள் எப்படியிருந்தன என்கிற பின்னணியில் இந்தப் புத்தகங்களின் முக்கியத் துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட புத்தகங்களில் இரண்டு புத்தகங்கள் முன்னோடி முயற்சிகள், இன்றுவரை அந்தப் புத்தகங்களில் தொடப்பட்ட உயரம் தாண்டப்படவில்லை. மூல நூல் எழுதப்பட்டு ஏழே ஆண்டுகளில் (1984, ஆகஸ்ட்) ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழக நிலைமைக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த நூல் மருத்துவ-உடல்நலன் சார்ந்த அறிவை, அக்கறையைத் தமிழில் அறிவியல்பூர்வமாக முன்வைத்த முதன்மை நூல்களுள் ஒன்று. மருத்துவத் தமிழ்ச் சொல்லாடலை சாதாரணர்கள் மத்தியில் முன்னெடுத்ததுடன், மருத்துவத் தமிழுக்கு முன்னோடியாகவும் இந்நூல் திகழ்கிறது. ‘க்ரியா’ மட்டும் இந்த நூலை ஆறு பதிப்புகள் கொண்டுவந்துள்ளது.
‘இந்தியாவில் சுற்றுச்சூழல்’ என்கிற புத்தகம், The State of India's Environment - A Citizens' Report (1982), டெல்லியைச் சேர்ந்த அறிவியல் - சுற்றுச்சூழல் மைய வெளியீட்டின் தமிழாக்கம். இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான அனில் அகர்வால் உள்ளிட்டோர் எழுதியது. இந்த இரண்டைத் தாண்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்திய வேளாண் பொருளாதார சமூக உறவுகள் குறித்து இப்போதுவரை ஆராய்ந்துவருபவருமான பார்பரா ஹாரிஸின் நூல், நேரடி ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
பிரதிபலித்த கால மாற்றம்
1980களில் முன்னோடி முயற்சிகளை ‘க்ரியா’ தொடங்கியிருந்தது என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் ‘க்ரியா’வின் கவனக்குவிப்பு காலத்துக்கேற்ப மாறியிருக்கிறது. ‘பறவைகள்: அறிமுகக் கையேடு’ (ப. ஜெகநாதன், ஆசை) என்கிற நூல் தமிழ்ப் பதிப்புலகுக்கு முற்றிலும் புதிது. முழு வண்ணப் புத்தகம். ஆனால், அடக்கமான விலை. பறவை நோக்குபவர்கள் அதிகரித்துவந்த நிலையில் இந்தப் புத்தகம் வெளியானது. துல்லியமான படங்கள், தெளிவான விளக்கத்துடன் அமைந்திருந்த இந்தப் புத்தகம் தமிழகத்தில் பறவை நோக்கர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அந்தப் புத்தகத்துடன் ராமகிருஷ்ணன் நின்றுவிடவில்லை. அடுத்து ‘வண்ணத்துப் பூச்சிகள்’ (ஆர். பானுமதி), ‘தட்டான்கள், ஊசித்தட்டான்கள்’ (ப. ஜெகநாதன், ஆர். பானுமதி) என அறிமுக வழிகாட்டிக் கையேடு வரிசையில் தொடர்ந்து பல நூல்கள் வெளியாகத் தொடங்கின. தாவரங்கள் கையேடு, பாலூட்டிகள் கையேடு ஆகியவை தயாரிப்பில் இருந்துவருகின்றன. தங்கள் சுற்றுப்புறம், இயற்கை குறித்த ஆர்வம் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவந்த சூழ்நிலையில், இந்த நூல்கள் வெளியாகின.
இன்றைக்கு அதிகம் பேசப்பட்டுவரும் பருவநிலை மாற்றம் குறித்து அறிவியல் எழுத்தாளர் என். ராமதுரையின் ‘பருவநிலை மாற்றம்’ (2017) குறிப்பிடத்தக்க அறிமுக நூல். தமிழில் முதன்முறையாகப் பறவை களை மையப்படுத்திய கவிதைத் தொகுப்பை (‘கொண்டலாத்தி’ (ஆசை)), பறவைகளின் வண்ணப்படங்களுடன் ‘க்ரியா’ வெளியிட்டுள்ளது.
நஷ்டம் யாருக்கு?
இந்திய-தமிழக சிலந்திகள் குறித்து கே. விஜயலட்சுமி, பிரெஸ்டன் அய்மாஸ் எழுதிய ‘SPIDERS: An Introduction’ என்கிற அறிமுகப் புத்தகத்தை 1993இல் ‘க்ரியா’ வெளியிட்டது. இப்போதுவரை அதன் முதல் பதிப்பே விற்றுத் தீரவில்லை. ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ (தமிழில்: என். சிவராமன்) அணு உலைகளின் ஆபத்து பற்றி விலாவாரியாகப் பேசுகிறது. ஆனால், அந்த நாவல் தமிழில் வெளியாகியிருப்பதே, அந்தத் துறை சார்ந்து செயல்பட்டுவரும் பலருக்கும் தெரியாது. ஒரு புத்தகம் விற்பனையாகாததைப் பற்றி ராமகிருஷ்ணன் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. அதேநேரம், உருவாக்கிய புத்தகத்தின் உள்ளடக்க, வெளியீட்டுத் தரத்தில் என்றைக்கும் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. புத்தகம் விற்காததால் ஏற்படும் நஷ்டம் தமிழ்ச் சமூகத்துக்கும் வாசகர்களுக்குமானது என்கிற எண்ணம் கொண்டவர்.
சமூகப்பணி குறித்த பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கும் ராமகிருஷ்ணன், மேலே குறிப்பிட்டது போன்ற பல்வேறு துறை சார்ந்த தவிர்க்க முடியாத படைப்புகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு நேரடியாக அறிமுகமாகாத துறையாக இருந்தாலும், அந்தத் துறை சார்ந்த விற்பன்னரைத் தேடிக் கண்டறிந்து எழுதவைப்பார். அந்தப் புத்தகத்தை இறுதிசெய்வதற்கு எடிட்டர் ஒருவரைக் கண்டுபிடித்து திருத்தங்களைக் கேட்பார். மேற்கண்ட புத்தகங்கள் வெளியாவதிலும், அவை எப்படி வெளியாக வேண்டும் என்பதிலும் தீர்க்கமான பார்வை, அந்தப் புத்தகங்களின் அவசியம், அவற்றில் முதலீடு செய்யும் துணிச்சல் ஆகியவற்றை அவர் கொண்டிருந்தார்.
அறிவியல் தரம்
ஓர் சொல்லை இடமறிந்தும் தேவையறிந்தும் பயன்படுத்துவதற்கு ‘க்ரியா’வின் தற்காலத் தமிழ் அகராதி உதவுகிறது என்றால், ‘க்ரியா’வின் நூல்களில் உறுதிசெய்யப்படும் அறிவியல் தரம் மற்ற பதிப்பகங்கள் பின்பற்றுவதற்கான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. தகவல் பிழைகளையோ அறிவியல் கருத்துக்கு முரணான தன்மையையோ அந்தப் புத்தகங்களில் காண முடியாது. அறிவியல் தமிழ் மொழியறிவை, மொழிநடையைக் கட்டமைத்ததில் ‘க்ரியா’வின் புத்தகங்கள் பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றன.
ஒரு மொழியை நாம் எவ்வளவு வேகமாக நவீனப்படுத்திக்கொண்டிருக்கிறோம், அல்லது கால ஓட்டத்துடன் சேர்ந்து முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிற தெளிவும் பிடிமானமும் ஒரு சமூகத்துக்கு அவசியம். மருத்துவம், சுற்றுச்சூழல், காட்டுயிர் நூல்கள் மூலம் அந்தப் பிடிமானத்தை தந்ததில் ‘க்ரியா’வின் பங்கு குறிப்பிடத்தக்கது.
புத்தகங்களையும் மனிதர்களுக்கு இணையாக உயிர்ப்புடையவையாக மதித்தவர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். அவருடைய மறைவுக்குப் பிறகாவது, நவீன காலத் தமிழின் வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள் உரிய மதிப்புடன் கொண்டுவரப்பட்டால், அதுவே அவர் இவ்வளவு காலம் கடைப்பிடித்துவந்த கோட்பாடுகளுக்கான வெற்றியாக அமையும்.
கட்டுரையாளர், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in