Published : 31 Oct 2020 03:13 am

Updated : 31 Oct 2020 09:46 am

 

Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 09:46 AM

நூல் முகம்: ‘பாம்பு மனிதன்’ ரோமுலஸும் ‘ஷ்யூர் மேன்’ நடேசனும்

book-review

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை அடுத்துள்ள ‘பாம்புப் பண்ணை’யைப் பற்றி அறியாதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். அதையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள புகழ்பெற்ற‘ சென்னை முதலைப் பண்ணை’யையும் நிறுவியவர் ரோமுலஸ் விட்டேகர். ‘Snakeman: The Story of a Naturalist’ என்கிற அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஸாய் விட்டேகர் எழுதியது. அந்த நூல் மூத்த மொழிபெயர்ப்பாளர் கமலாலயனின் மொழிபெயர்ப்பில் ‘பாம்பு மனிதன்: ரோமுலஸ் விட்டேகர்’ (வானதி பதிப்பகம்) என்கிற தலைப்பில் அண்மையில் வெளியாகியுள்ளது.

ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறு என்று இந்த நூலைச் சொல்ல முடியாது. இயற்கை வரலாற்று நூல் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அதிலும், தமிழகத்தை மையமாகக்கொண்டு பணியாற்றிய உலகறிந்த ஓர் அறிஞரின் வரலாறு இது. தமிழகப் பழங்குடிகளான இருளர்களுடன் உறவாடி, மாநில-தேசிய-சர்வதேச அளவில் இயற்கைச் சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்திய ஒருவரைப் பற்றிய நூல் தமிழில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் புதியதோர் உலகைத் திறந்து காட்டும் இந்த நூலிலிருந்து ஒரு பகுதி:


சென்னையில் ரோமுலஸ் முதன் முதலில் சந்தித்த இருளர் பழங்குடியின நண்பர் நடேசன்; அவர் ரோமுலஸின் மிக நெருங்கிய நண்பரானார். அனுபவம் வாய்ந்த பாம்பு வேட்டைக்காரராக அவர் இருந்தார். அவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பாறைகள் நிறைந்த, புதர்கள் அடர்ந்த குன்றுகளில், மலைகளில் ஒன்றாக அலைந்து கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் வாழும் எல்லா வகைப் பாம்பு களையும் பற்றிய தனது கேள்விகளுக்கும் நடேசனால் பதில் சொல்ல முடிகிறது என்பதை ரோமுலஸ் விரைவிலேயே கண்டுணர்ந்தார். அங்கேயிருந்த கல்விப்புல நபர்களாலோ, உள்ளூர் இயற்கையியல் வல்லுநர்களாலோ அவ்வாறு பதில் சொல்ல முடிந்திருக்கவில்லை.

நடேசனுக்கு மிகப் பிடித்தமான ஆங்கில வார்த்தை, ‘ஷ்யூர், மேன்!’. பிறகு அவருடைய பட்டப்பெயரே ‘ஷ்யூர் மேன்’ என்றாகிவிட்டது. பாம்புகளைத் தேடி அவர்கள் மேற்கொள்ளும் தேடலின்போது, இயற்கை வரலாற்றுச் செய்திகள் அடங்கிய களஞ்சியத்தைத் திறந்து காட்டுவதுபோல் அவர் சொல்லும் விஷயங்கள் ரோமுலஸுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிப்பவையாக இருந்தன.

பாம்புக் கடி

சென்னை பாம்புப் பண்ணை கிண்டிக்கு இடம் மாறுவதற்கு முன், சேலையூரில் சிறிய இடத்தில் 1969-ல் தொடங்கப்பட்டது. அப்போது சுற்றுப்புற கிராமங்களில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்புப் பண்ணைக்கு வந்தனர். பாம்பு கடித்ததுமே நஞ்சு முறிவு மருந்தைச் செலுத்தியாக வேண்டிய நிலையில், அன்றைக்கு அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் மருத்துவமனை இருந்தது.

போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் பாம்புக் கடிக்கு ஆளான சிலர் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் பாம்புப் பண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய கண்கள் சுழன்றுகொண்டிருக்கும்; வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும். அவர்களை ஆபத்தில்லாத தண்ணீர்ப்பாம்போ சாரைப்பாம்போ கடித்திருக்கக்கூடும். அவர்களுக்கு வழங்க வேண்டிய ஒரே சிகிச்சை, ஓங்கி ஓர் அறை; உரத்த குரலில் சரமாரியான திட்டு; வேண்டுமெனில் ஓர் ஆஸ்பிரின் மாத்திரை. இவையே போதும். ஆனால், கட்டுவரியன் (கட்டுவிரியனா? எது சரியோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்) பாம்புக்கடியால் தீவிரமான பாதிப்புடன் அடிக்கடி பலர் வந்தார்கள்.

கிராமப்புற இந்தியாவில், மக்கள் குடிசைகளுக்கு வெளியே இரவில் தரையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்போது தான் கட்டுவரியன் பாம்புக்கடி அடிக்கடி நிகழ்கிறது. அந்த நேரத்தில் கட்டு வரியன்கள் தமது இரையைத் தேடி ஊர்ந்துகொண்டிருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் நபர், தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது தெரியாமலேயே பாம்பின் மீது உடல் பட நேரலாம்; அப்படி நேரும்போது பாம்புகள் அவர்களைக் கடித்துவிடுகின்றன. இரவுத் தூக்கத்தின்போது என்ன நடந்தது என்றே தெரியாமல், இவர்களில் பலர் சில மணி நேரத்துக்குப் பின் இறந்துபோகவும் செய்வர். கட்டுவரியன் பாம்பு கடித்திருக்கிறது என்பதற்கான திட்டவட்டமான, உடல் செயலிழக்கும் நிலைக்குப் போகும் அறிகுறிகள் பெரும்பாலும் கடைசி நேரத்தில்தான் வெளிப்படையாகத் தெரியவரும். எனவே, மருத்துவமனைக்குப் போகு மளவுக்குப் போதிய நேரம் அப்போது இருக்காது.

ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு விவசாயியின் உரத்த அழைப்பைக் கேட்டு ரோமுலஸ் கண்விழித்தார். அந்த விவசாயியின் மகள், இரவில் தன்னை ஏதோ கடித்தது என்று கூறியதாகவும் அவள் தன்னுணர்வு இல்லாமல் இருப்ப தாகவும் அவர் சொன்னதோடு “அது ஒன்றும் அவ்வளவு தீவிரமானதல்ல; சில மாத்திரைகள் போட்டுக்கொண்டால் சரியாகிவிடும். அவள் ரொம்பப் பதற்றமாக இருப்பாள். ஒரு தேனீ கடித்தால்கூட இப்படித்தான் தன்னுணர்வு இழந்து விடுவாள்” என்றார். அவரின் இந்த நம்பிக்கைமிக்க கூற்று ராமின் பணியை இரட்டிப்புக் கடினமானதாக்கியது. அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த விவசாயியின் வயலுக்கு விரைந்தனர். அங்கே போய்ப் பார்த்தபோது அந்தப் பெண் இறந்துபோயிருந்தாள். உண்மையில், கட்டுவரியன் பாம்புகள் படிப்படியாக ஆபத்தை உண்டாக்கும் ஆட்கொல்லிகள்.

சொக்கலிங்கத்தின் மருந்து

அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான இருளர்கள், மருத்துவமனைகளையும் நஞ்சு முறிவு மருந்தையும் பயனற்றவை என்று நிராகரித்துக்கொண்டிருந்தார்கள். சொக்கலிங்கம் என்ற இருளர் பாம்பு பிடிப்பவர், பாம்புக்கடிகளுக்கு அளிக்கும் மூலிகை சிகிச்சை முறைகளால் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். அதோடு அவரே பத்து முறை நல்லபாம்புக் கடிக்கு ஆளாகித் தப்பியவர். ஆனால், நஞ்சு முறிவு மருந்து வேலை செய்யும் விதத்தைக் கண்ட பிறகு, தனது சிகிச்சை முறைகள் மரணம் விளைவிக்காத, தீவிரமற்ற பாம்புக்கடிகளால் பாதிக்கப்படுபவர்கள் விஷயத்திலேயே பெரிதும் பயனளிப்பவையாக இருக்கக்கூடும் என்று ஒப்புக்கொண்டார்.

சுருட்டைவிரியன் பாம்புக்கடிக்கு அவர் பயன்படுத்திவந்த மருந்து மிகுந்த ஆர்வத்திற்குரியதாக இருந்தது. விரிவான மருத்துவ அறிவியல் சோதனைகளுக்கு அது தகுதியுடையதாயிருந்தது. காரணம், அந்த மருந்தைப் பல தீவிரமான பாம்புக்கடிகளுக்கு நிவாரணமளிக்கும் விதத்தில் வெற்றிகரமாக அவர் பயன்படுத்தி வந்தார். இந்தக் கூற்று அறிவியல்பூர்வமான சமுதாயத்திற்கு, தவறான நம்பிக்கைவாதமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இருளர்கள் அறிவியல் அறிவுடைய வர்களே; அவர்களின் மருந்துகள், மருத்துவ முறைகளைக் கிராமங்களில் சாதாரணமாகப் புழங்கும் போலியான மோசடிக்காரர்களின் மருந்துகளோடும் முறைகளோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

சுருட்டைவிரியனின் நஞ்சி லிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் வகையில், தனது மகன் காளியை நஞ்சு முறிவு ஆற்றல் கொண்டவராக மாற்றும் செயல்முறையில் சொக்கலிங்கம் ஈடுபட்டிருந்தார். மூலிகை மருந்துக் கலவை ஒன்றை, ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முந்தைய இரவு உட்கொள்ளுமாறு ஆறு மாதங்களுக்கு அவர் தன் மகனுக்குக் கொடுத்துவந்தார். அவருடைய மூத்த மகன் ராஜேந்திரனும் ஏற்கெனவே நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் கொண்டவராக மாற்றப்பட்டிருந்தார்; மூன்று முறை சுருட்டைவிரியன் பாம்புக்கடிகளுக்கு ஆளானாலும் அவர் பாதிக்கப்படவில்லை.

நடேசனின் நம்பிக்கை

நடேசன் இந்த விஷயத்தில் கடுமையான நிலைப்பாடு கொண்டவராயிருந்தார். தான் ஒருபோதும் நஞ்சு முறிவு மருந்தை உட்கொள்ளப்போவதில்லை என்று அவர் உறுதிமொழியே எடுத்துக்கொண்டவர். இந்த நம்பிக்கை அவரை மரணத்தின் வாயிலிலேயே கொண்டுபோய்த் தள்ளியது.

தன்னுடைய அண்டை வீட்டுக்காரரின் திருமணத்தைக் கொண்டாடும் பொருட்டு, பாம்புகளைக் கையாளுவதில் தனக்கிருக்கும் நிபுணத்துவத் திறனைக் காட்டும் விதத்தில், மிகுந்த ஆரவாரத்துடனும் முழு போதையிலும் நடேசன் ஒருமுறை தெருவில் இறங்கினார். ஒரு நல்லபாம்பை அவர் வெளியே எடுத்துவந்தார். சைக்கிள் ஒன்றின் ஹேண்டில்பாரில் அந்தப் பாம்பை வைத்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வந்தார். சில நொடிகள் வரை எல்லாமே சரியாகவும் நன்றாகவும்தான் இருந்தது. பார்வையாளர்களிடம் இருந்து வாழ்த்தொலிகளும் கைதட்டல்களும் எழுந்தன.

அதன் பிறகு பதற்றத்தில் அச்சமடைந்திருந்த அந்தப் பாம்பு சட்டென அவரின் கட்டைவிரலில் கடுமையாகக் கடித்துவிட்டது. ரோமுலஸின் வீட்டுக்கு வருவதற்குள், தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நவகுஞ்சி மூலிகை மருந்தை அதிக அளவில் நடேசன் உட்கொண்டிருந்தார். இருந்தும், பக்கவாதத்தின் முதல் அறிகுறிகள் அப்போதே தோன்றிவிட்டிருந்தன. அவருடைய கண்ணிமைகள் கனத்த சுமையால் அழுத்தப்படுவதைப் போலச் சுருங்கின. அவருடைய பேச்சு குழறிக்குழறி வந்தது. மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது அவருக்கு.

முறைப்படி மருத்துவம் பயிலாதவர் என்ற முறையில் நடேசனுக்கு நஞ்சு முறிவு மருந்தை ரோமுலஸ் செலுத்துவது சட்ட விரோதமானதுதான்; ஆனால், ஒரு டாக்டரை அழைத்துவந்து சிகிச்சை தரும் அளவுக்கு நேர அவகாசம் அப்போது இல்லை. நஞ்சு முறிவு மருந்து வீட்டில் இருப்பிலிருந்தது. அங்கு மரண அமைதி நிலவியது. ஷ்யூர்மேனைக் காப்பாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டதோ என்ற ஐயம் அங்கிருந்தவர்களை அலைக்கழித்தது. நடேசனுக்கு ஊசி மூலம் நஞ்சு முறிவு மருந்து செலுத்தப்பட்டு இருபது நொடிகளுக்குப் பிறகு அவரின் நரம்புகளில் அந்த மருந்து வினையாற்றத் தொடங்கியது. பாம்புக் கடிவாயின் மேல் போடப்பட்டிருந்த கட்டு படிப்படியாகத் தளர்ந்து வந்தது.

நடேசன் எழுந்து உட்கார்ந்தார். “கொஞ்ச நாளைக்கு நல்லபாம்புகளிடமிருந்து விலகியே இருக்கிறேன்” என்று மெல்ல அவர் முனகினார். “அதற்குப் பதிலாக அந்த சரக்கு நஞ்சிலிருந்து விலகி இருக்கலாமே?” என்று நடேசனுக்கு ரோமுலஸ் சொன்ன ஆலோசனை கண்டுகொள்ளப்படவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு நடேசன் மரணமடைந்தார்.

நடேசனின் மறைவு மேலும் ஒரு சகாப்தத்தின் முடிவைப் போல் இருந்தது. ரோமுலஸ் - நடேசன் இடையே மிகப்பெரிய பண்பாட்டு இடைவெளி நிலவியது என்றபோதிலும், அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகவே இருந்துவந்தனர். காட்டு வாழ்க்கை மீது இருவருக்குமே இருந்த பரஸ்பர ஆர்வக்கவர்ச்சி அவர்களை ஒன்றுசேர்த்தது. தென்னிந்தியாவின் ஒவ்வொரு முதன்மைக் காட்டிலும் ரோமுலஸ் மேற்கொண்ட பயணத்தின்போது நடேசன் உடன் இருந்திருக்கிறார். பாம்புப் பண்ணைக்காக விதவிதமான ஆர்வமூட்டும் பாம்பு இனங்களை இருவரும் கண்டறிந்து சேகரித்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

‘பாம்பு மனிதன்’ ரோமுலஸும் ‘ஷ்யூர் மேன்’ நடேசனும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x