

‘எங்கே பிரச்சினை இருக்கிறதோ, அங்கே இருந்துதான் அதற்கான தீர்வும் கிடைக்கும்' என்று சொல்லப்படுவதுண்டு. அதன்படி, பருவநிலை மாற்றப் பாதிப்புகளைச் சமாளிக்கும் விதமாகத் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஒரு பக்கம், ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் மண் வளம் சீரழிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம், பருவநிலை மாற்றங்களால் உலகின் பல இடங்களில் பருவம் தப்பி மழை பெய்கிறது. அதற்குத் தமிழகமும் சாட்சியமாக இருந்துவருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் பருவ நிலை மாற்றத்தின் பல்வேறு பின்விளைவுகளான மழைப்பொழிவில் மாறுபாடு, நிலத்தடி நீர்வளம் குறைதல் போன்றவை நாடு முழுக்க எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து ‘பருவ நிலை மாற்றப் பாதிப்பு வரைபடம்' ஒன்றை, ‘மானாவாரி விவசாயத்துக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம்' 2013-ம் ஆண்டு வெளியிட்டது.
இயற்கைத் தீர்வு
அதில் தேசிய அளவில் பருவநிலை மாற்றத்தால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிற மாவட்டமாக, தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் 28-வது இடத்தில் இருந்தது. ஆனால், மாநில அளவில் அதுதான் முதலிடத்தில் இருந்தது.
இதற்குத் தீர்வாகப் பெரம்பலூர் மாவட்டம் தேர்வு செய்த வழி ‘இயற்கை வேளாண்மை'. கடந்த மூன்று மாதங்களாக, சென்னையைச் சேர்ந்த ‘பாமர ஆட்சியியல் கூடம்' எனும் அமைப்பு பெரம்பலூரில் இயற்கைவழி வேளாண்மையில் நாட்டுப் பருத்தி மற்றும் சிறுதானியங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
நாட்டுப் பருத்தியும் வரகும்
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. சரவணன் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:
“தமிழக அரசின் திட்ட ஆணையம் சுகாதாரம், கல்வி, வறட்சி, தொழில்மயமாக்கம், வறுமை ஆகிய 5 காரணங்களின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பூர் ஒன்றியத்தை, மிகவும் பின் தங்கிய ஒன்றியமாக அறிவித்திருந்தது.
அந்த ஒன்றியத்தில் என்னென்ன வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன, விதைப்பு முறை, அதற்கான காரணங்கள், அங்கு விளைச்சலை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தி, அங்கே இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கலாம் என்று முடிவு செய்தோம்.
அதன்படி, வேப்பூர் ஒன்றிய மக்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, 20 தன்னார்வ விவசாயிகளைத் தேர்வு செய்தோம். அவர்களில் சிலர் நாட்டுப் பருத்தியையும், தற்போது ஆடிப்பட்டம் என்பதால் சிலர் சிறுதானியமான வரகையும் விதைத்துள்ளனர். இன்னும் சிலர் சாமை, துவரை, இருங்கு சோளம், மாப்பிள்ளை சம்பா போன்றவற்றையும் விதைத்துள்ளனர். சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
பருவநிலை போர்
இந்தப் பகுதி முழுக்க மானாவாரி விவசாயம்தான் நடைபெறுகிறது. எனவே, குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும் சிறுதானியங்களைச் சாகுபடி செய்யலாம். மேலும், சிறுதானியங்களை விளைவிக்க அடி உரம் மட்டும் போதும். இதர உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ அல்லது சிறப்பு பராமரிப்போ தேவையில்லை. இதனால் விவசாயிகளுக்குச் சாகுபடிச் செலவு குறையும்.
எங்களுடைய முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் வளர்ச்சித் திட்டமும், தர்மபுரி சிட்டிலிங்கி பகுதியைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பும்', பொள்ளாச்சியில் இயற்கை வேளாண்மை மூலமாகப் பருத்தி விளைவிக்கும் மணி சின்னசாமி போன்றவர்களும், திருவண்ணாமலையில் உள்ள தமிழக அரசின் ‘சிறுதானிய மகத்துவ மையம்' போன்ற அமைப்புகள் பயிற்சி வழங்குதல், உயர் ரக விதை வழங்குதல் எனப் பல விதங்களில் உதவி செய்துள்ளன.
இந்த முயற்சி வெற்றியடையும்பட்சத்தில், இதுபோன்ற வழிமுறைகளை மற்ற மாவட்டங்களிலும் பின்பற்றலாம்" என்றார்.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்பப் பயிர் செய்தால்தான், இனி விவசாயம் தழைக்கும் என்று பருவநிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதைப் பின்பற்றி எல்லா மக்களும் விழித்துக்கொண்டால், விவசாயம் தழைக்கும்!
மத்திய அறிக்கை
இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக அரசு சார்ந்த முயற்சிகள் பெருகி வருகின்றன. ‘தற்போதிருக்கும் விவசாயப் பிரச்சினைகள், விஷத்தன்மை கொண்ட உணவுகள், நிலத்தடி நீர் குறைதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், நாம் உடனடியாக இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டும்' என்று நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை, இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழு, "ரசாயனப் பயன்பாடு சார்ந்த விவசாயத்தின் பின்விளைவுகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு, இயற்கை வேளாண்மை சார்ந்த கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்," என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய ரசாயனம் சார்ந்த பொருட்களின் அளவு மண்ணில் 4:2:1 என்கிற விகிதத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்குத் தேசிய அளவில் இந்த ரசாயனங்களின் சராசரி விகிதம் மண்ணில் 7:3:1 ஆக உள்ளது. இதனால் விளைச்சல் குறைந்திருப்பதுடன், மண்வளமும் கெட்டுப் போயிருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
- சரவணன், தொடர்புக்கு: 9751237734