

அசோக மரம் சிறந்த மருத்துவப் பண்பு நிறைந்தது. இதன் மருத்துவத் தன்மைகளை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பழங்குடி மக்கள்தான். பண்டைய மருத்துவத்தில் இது சரிபம், சுவரிலோத்ரம், சேந்து, சேலை, காகோளி, ஜோதிவிருட்சம் போன்ற பல பெயர்களால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகள் கண்டறிந்த மருத்துவப் பண்புகள் பின்பு ஆயுர்வேதத்திலும் (குறிப்பாகச் சரகச் சம்ஹிதை), சித்த மருத்துவத்திலும், இதர இந்திய மருத்துவ முறைகளிலும் உணரப்பட்டு, பயன்படுத்தப்பட்டன.
மருத்துவ அற்புதம்
அசோக மரத்தின் பட்டை, பூ, இலை ஆகிய மூன்றுமே மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன: சிறுநீர்க் குழாய் அடைப்புகளை நீக்க, சிறுநீரகக் கற்களைப் போக்க, குடல் புழுக்களை ஒழிக்க, ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுப்போக்கு, மூலநோய், வாயுக்கோளாறுகள் போன்ற உணவு மண்டலக் கோளாறுகளைப் போக்க, காயங்கள்-வீக்கங்கள் மறைய.
என்றாலும் அசோகத்தின் முக்கிய மருத்துவப் பயன் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்குவதுதான். வலுவற்ற கர்ப்பப்பை, கண்டமாலை, அரத்தவரி (பெரும்பாடு), கந்திப்புண், மாதவிடாய் பிரச்சினைகள், வெள்ளைத்திட்டு போன்றவற்றை நீக்குவது மட்டுமின்றி, கர்ப்பப்பை டானிக்காகச் செயல்பட்டு நன்கு கருத்தரிக்க உதவுகிறது. மேற்கூறப்பட்ட மருத்துவப் பயன்களுக்கும் காமதேவனான மன்மதனிடம் உள்ள ஐந்து மலர்க்கணைகளில் அசோக மலர் ஒன்றாகக் கருதப்படுவதற்கும் ஒரு முக்கியத் தொடர்பு உள்ளது.
காமன் தூது
காமனால் இந்த மலர் எய்யப்பட்டதால் "அசோகு (மகளிரிடம் காமத்) துயர் செய்யும்" (அறப்பளீசுர சதகம் 90:3) - அதிகக் காமக் கவர்ச்சியை ஊட்டும் எனப்படுகிறது. காமத்தின் விளைவு கருத்தரித்தல் என்பதாலும், அசோக மலரைப் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை சுத்தம் அடைந்து கருவை ஏற்கத் தயாராகும் என்பதாலும், காமனுக்கும் அசோக மலருக்கும் தொடர்புபடுத்தப்பட்டதாகக் கூறலாம்.
அசோகின் பட்டைகள், இலைகள், பூக்கள் போன்றவற்றில் காணப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் டேனின்கள், காட்டிசின்கள் போன்ற ஃபிளேவனாய்டுகள், ஸ்டீராய்டுகள், கேல்லிக் அமிலம், சேப்போனின்கள், கிளைக்கோசைடுகள், குவெர்சிட்டின்கள் போன்றவை. இவற்றில் எவை எந்தெந்த நோய்களுக்குத் தீர்வை தருகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக, கர்ப்பப்பையின் கோளாறுகளுக்கு. எனினும், இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் ஒன்றுசேர்ந்து கூட்டாகச் செயல்படக்கூடும்.
அழிவு அறுவடை
சிறந்த மருத்துவத் தாவரமாகத் திகழ்ந்துவந்தாலும், பல காலமாக இதன் மரப்பட்டைகள் ‘அழிவு அறுவடை' மூலம் அதிகமாக வெட்டப்பட்டு வந்துள்ளதாலும், ஒரு காலத்தில் மிகவும் பரவலாக இருந்த இந்த மரம், தற்போது மிகவும் அரிதாகவே காடுகளில் காணப்படுகிறது. கிழக்கு மலைத்தொடர் காடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்திய மூலிகைச் சந்தைகளுக்கு மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 2,000 மெட்ரிக் டன்களுக்கும் (டன் - ஆயிரம் கிலோ) அதிகமாக இதன் பட்டைகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் இயல்பாகக் காணப்படும், வளர்க்கப்படும் அசோக மரங்களால் இந்த அளவு பட்டைத் தேவையை நிச்சயமாக ஈடுகட்ட முடியாது. எனவே, மூலிகைச் சந்தைகளுக்கு வரும் மரப்பட்டைகள் பெரும்பாலும் வேறு மரங்களின் பட்டைகளால் பதிலீடு செய்யப்படுகின்றன அல்லது கலப்படம் செய்யப்படுகின்றன. அசோகு என்ற பெயரில் சந்தைக்கு வரும் மரப்பட்டைகளில் நெட்டிலிங்கம், சால் (Sal), நீர் (ஆற்று) வஞ்சி, மரவம் போன்ற மரங்களின் பட்டைகள் கலந்து காணப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
பாரம்பரிய இழப்பு
நல்ல கர்ப்பப்பை டானிக்காக செயல்படுவதால் அசோக மரம் நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தாவரம் என்பதில் சந்தேகமில்லை. எம்.எஸ். ராந்தாவா என்ற தாவரவியல் அறிஞர் குறிப்பிட்டிருப்பது போல "பாரம்பரிய இழப்புகளில் அசோக மரமும் ஒன்று"தான். இந்த மரத்தின் இழப்போடு, இந்த மரத்துடன் தொடர்புடைய பாரம்பரியக் கலாச்சாரங்களும் அழிந்துவிடுவது நிச்சயம். இந்தியாவின் பல மாநிலங்களில் அசோக மரம் ஆபத்தான நிலையில் உள்ள மரமாகவும், போற்றிப் பேண வேண்டிய மரமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பசுமையிலைக் காடுகளிலும், பகுதி பசுமையிலைக் காடுகளிலும் ஓர் இயல்பு அங்கமாகத் திகழும் இந்த மரம், அதன் இயல்பான சூழல்தொகுதியுடன் (Eco system) சேர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இயல்பான சூழலில்தான் மருத்துவத்தன்மை வாய்ந்த இதனுடைய வேதிப்பொருட்கள் உருவாக்கப்படும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. நம் பெண்களுக்காகவாவது இந்த மரம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.
(அடுத்த வாரம்: வளமும் வகைகளும் நிறைந்த மரம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in