

மோசமான அனுபவத்திலிருந்து கிடைக்கும் படிப்பினையால், அடுத்தவரை அந்த மோசமான அனுபவத்திலிருந்து தடுக்கும்போது ஒருவருடைய வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக மாறுகிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் திருப்பூர் 'நன்மை' இயற்கை அங்காடியை (காங்கேயம் சாலையில்) செயல்படுத்திவரும் ஆனந்தகுமார்.
இவரும் இவருடைய மனைவி செல்வி ஆனந்தகுமாரும் குழந்தைகளின் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்காத பலகாரங்களை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்கின்றனர். இயற்கை அங்காடியைத் தொடங்கியதற்கான காரணம், அங்காடியின் சிறப்புகள் குறித்து ஆனந்தகுமார் பகிர்ந்துகொண்டது:
தேடினோம் வந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதுதான், ஆரோக்கியத்துக்கான எங்களுடைய தேடல் தொடங்கியது. நம்மாழ்வார் அய்யா மூலம் பாரம்பரிய உணவு, விவசாய முறைகள் மற்றும் தற்போதைய உணவு அரசியல் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அதற்குப் பிறகு நம்மாழ்வாரிடமும், வேறு சில இயற்கை விவசாயிகளிடமும் பயிற்சி எடுத்துக்கொண்டோம். வேதியுரங்களும் பூச்சிக்கொல்லிகளும் நம் நிலத்தையும் மக்களையும் மலடாக்கி வருகின்றன என்னும் தெளிவு ஏற்பட்டது.
நம் குழந்தைகளுக்குச் சொகுசு வீடு, கார், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைத் தர நினைக்கும் நாம், அவர்களுக்கு நல்ல உணவைக் கொடுக்கும் கடமையிலிருந்து தவறக் கூடாது என நினைத்தோம். இந்த எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கவே இந்த இயற்கை அங்காடியைத் தொடங்கினோம் என்கிறார் ஆனந்தகுமார்.
அங்காடியின் சிறப்புகள்
பாரம்பரிய அரிசி ரகங்கள், தானியங்கள், அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
நேரடியாக இயற்கை விவசாயிகளிட மிருந்தும் விவசாய கூட்டுறவு அமைப்புகளிடமிருந்தும் மட்டுமே கொள் முதல் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுக்கப்படுகிறது.
மதிப்பு கூட்டப்பட்ட எந்த உணவுப்பொருளிலும் மைதா, வெள்ளைச் சர்க்கரை, பதப்படுத்தும் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.
செக்கில் ஆட்டிய எண்ணெய் வகையைப் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிப்பது இல்லை. வாடிக்கையாளர்கள் பாத்திரங்களைக் கொண்டுவந்து வாங்கிச் செல்கின்றனர்.
உணவுப் பொருட்கள்தான் என்றில்லை, கடையின் பெயர் பலகையில்கூட ஃபிளெக்ஸ் பயன்படுத்தவில்லை. மூங்கில் தட்டியில் உள்ளூர் ஓவியர்களைக் கொண்டு கடையின் பெயர்ப்பலகை வரையப்பட்டுள்ளது.
நன்மை இயற்கை அங்காடி, திருப்பூர்
தொடர்புக்கு: 99944 11234.
செல்வி - ஆனந்தகுமார்