ஆடிப் பட்டம் தேடி விதை: எளிமையான இயற்கை வழி நெல் சாகுபடி

ஆடிப் பட்டம் தேடி விதை: எளிமையான இயற்கை வழி நெல் சாகுபடி
Updated on
4 min read

பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் (CIKS) கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் பல்வேறு பண்புகளைக் கொண்டவை. ஆண்டு முழுவதும் பயிர் செய்யக்கூடிய பல நெல் ரகங்கள் நம் நாட்டில் உள்ளன. வறட்சி, வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு, பூச்சி, நோய்களைத் தாங்கி வளரும் தன்மை, மருத்துவக் குணங்கள், சிறப்பு ஊட்டச்சத்து கொண்ட ரகங்கள், குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்க ஏற்ற ரகங்கள் போன்ற பல காரணங்களுக்காகப் பாரம்பரிய ரகங்கள் விவசாயிகளால் இன்றும் பயிரிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், முறையான சந்தை இல்லாத காரணத்தால் இவை வேகமாக அழிந்து வருகின்றன. அழிந்து வரும் இந்த ரகங்களை மீட்டெடுத்து விதை உற்பத்தி செய்து விவசாயிகளைப் பெரிய அளவில் பயிரிடச் செய்து, சந்தைப்படுத்தும் பணியில் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 25 ஆண்டு அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒரு தகவல் களஞ்சியமாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலிருந்து ஒரு பகுதி உங்களுக்காக:

இயற்கைவழி நெல் சாகுபடி நுட்பங்கள்

மண் வகை: வண்டல் மண், மணல் கலந்த களிமண், களிமண் ஆகிய மண் வகைகள் நெற்பயிர் சாகுபடிக்கு உகந்தவை.

விதையளவு: நீர் வசதியுடைய இடங்களில் பயிர் செய்வதற்கு ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் விதையளவு:

· குறுகிய கால ரகம் (90-110 நாட்கள்) - 24-28 கிலோ

· மத்திய கால ரகம் (110-125 நாட்கள்) - 14-24 கிலோ

· நீண்ட கால ரகம் (125 நாட்களுக்கு மேல்) - 12-24 கிலோ

· செம்மை நெல் சாகுபடி - 2 - 3 கிலோ

· மானாவாரி அல்லது புழுதி, சேற்று விதைப்பு - 35-40 கிலோ

விதை நேர்த்தி

· தரமான விதைகளைப் பிரித்தெடுத்தல்.

· உப்புக் கரைசல் மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுத்தல்.

· நோய் எதிர்ப்புத் திறனுக்காக சூடோமோனாஸ், கோமியம் அல்லது வசம்புக் கரைசலில் விதை நேர்த்தி செய்தல்.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு ஏக்கர் நடவு செய்ய 6-8 சென்ட் நாற்றங்கால் தேவை. 6-8 முறை உழவு செய்து அடியுரமாக வேப்பிலைகளை இடவேண்டும். உயர் விளைச்சல் ரகம் எனில் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும். பிறகு முளைகட்டிய விதைகளை நாற்றங்காலில் விதைப்புச் செய்ய வேண்டும். நாற்றுப் பறிப்பதற்கு முன் 15-25 கிலோ ஜிப்சம் இடுவதன் மூலம் நாற்றின் வேர் அறுபடாமல் எடுக்கலாம்.

நடவு வயல் தயாரித்தல்

நடவு வயலில் பசுந்தாள் உர விதைகளை விதைத்து 45- 60 நாட்களில் மடக்கி உழவு செய்தல் வேண்டும். 6-8 முறை நிலத்தை நன்றாக உழுது சமப்படுத்துதல் வேண்டும்.

அடியுரம்

. தொழுவுரம்: 5-7 டன் / ஏக்கர்

· மக்கிய கோழிச் சாணம்: 2 டன் / ஏக்கர்

· மண்புழு உரம்: 2 டன் / ஏக்கர்

மேலே கூறப்பட்டுள்ள உரங்களில் ஏதாவது ஒன்றைக் கடைசி உழவின் போது நிலத்தில் இடவேண்டும்.

· 40-50 கிலோ வேப்பம் பிண்ணாக்கை அடியுரமாக இடவேண்டும்.

· அமிர்தக் கரைசலை நடவுக்கு முன் 10% என்ற அளவில் நிலத்தின்மேல் படுமாறு தெளிக்க வேண்டும் (அ) ஒரு ஏக்கருக்கு 300 - 500 லிட்டர் அமிர்தக் கரைசலை மடைவாயிலில் நீருடன் கலந்து விடவேண்டும்.

உயிர் உரங்கள் இடுதல்: இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ மணல் (அ) கம்போஸ்டுடன் கலந்து நிலத்தில் தூவி விடவேண்டும்.

நடவு: ஒரு குத்திற்கு 2-3 நாற்றுகள் மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்டும். செம்மை நெல் சாகுபடி முறையில் ஒரு குத்திற்கு ஒரு நாற்று மட்டும் வைத்து நடவு செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி

குறுகிய கால ரகம் : 15 x 10 செ.மீ.

மத்திய கால ரகம் : 20 x 15 செ.மீ.

நீண்ட கால ரகம் : 20 x 15 செ.மீ.

செம்மைநெல் சாகுபடி : 25 x 25 செ.மீ.

8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

அசோலா (அ) நீலப்பச்சைப் பாசி வளர்த்தல்

நடவு செய்த 5-10 நாட்களில் அசோலா (அ) நீலப்பச்சைப் பாசி இவற்றில் ஏதேனும் ஒரு வகையான விதையை நிலத்தில் தூவி பயிரோடு சேர்த்து வளர்க்க வேண்டும். விதைப்பு செய்ததிலிருந்து 25-வது நாள் ஒரு முறையும் 45-50வது நாள் ஒரு முறையும் வயலில் நீரை வடிகட்டிக் காலால் மிதித்து நிலத்திற்கு உரமாக்க வேண்டும்.

மேலுரம்

முதல் களை எடுத்தபின் 25 கிலோ வேப்பம் பிண்ணாக்கு (அ) கடலை பிண்ணாக்கை மேலுரமாக இடவேண்டும். 50-75 கிலோ மண்புழு உரம் (அ) 50 கிலோ எலும்புத் தூள் உரத்தை மேலுரமாக இடலாம். நடுத்தர மற்றும் நீண்ட கால ரகங்களுக்கு, பயிர் நடவு செய்வதிலிருந்து 50-60வது நாள் 25 கிலோ கடலைப் பிண்ணாக்கை மேலுரமாக இடவேண்டும்.

பஞ்சகவ்யா தெளித்தல்: மோட்டா ரகமாக இருந்தால் தூர் கட்டும் பருவத்தில் ஒரு முறையும், தண்டு உருளும் சமயத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். சன்ன ரகமாக இருந்தால் தண்டு உருளும் சமயத்தில் மட்டும் ஒரு முறை 3% தெளிக்க வேண்டும்.

இளநீர் அல்லது மோர்க் கரைசல் தெளித்தல்: தண்டு உருளும் சமயத்தில் பயிரில் ஒரே நேரத்தில் பூக்கள் மலர்வதற்குப் புளித்த மோர் கரைசல் 10% (அ) 3% இளநீர்க் கரைசலை ஒரு முறை தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய் நிர்வாகம்

வேப்பம் பிண்ணாக்கு மூட்டையை மடைவாயிலில் வைத்தல்: நாற்று நடவு செய்து பச்சை கட்டியவுடன் வேப்பம் பிண்ணாக்கை கோணிப்பைகளில் போட்டுக் கட்டி மடைவாயில்களில் வைக்க வேண்டும். பயிர் பால்பிடிக்கும் சமயம் வரை வைக்க வேண்டும்.

பறவைத் தாங்கி வைத்தல்

பயிர் பச்சைக் கட்டியவுடன் ஒரு ஏக்கருக்கு 10-12 இடங்களில் பறவைத் தாங்கி வைக்க வேண்டும். பறவைத் தாங்கியானது பயிரின் உயரத்தைவிட 2-3 அடி உயரமாக இருக்கவேண்டும். பயிரில் கதிர் வந்தவுடன் பறவைத் தாங்கிகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.

ஒட்டுண்ணி அட்டை கட்டுதல்: பயிர் நடவு செய்த 25-வது நாளிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணி அட்டைகளைப் பயிரில் கட்ட வேண்டும். (25, 40, 55-வது நாள்)

இனக்கவர்ச்சி பொறி வைத்தல்: மஞ்சள் தண்டு துளைப்பானின் ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர ஏக்கருக்கு 3 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். பயிரின் உயரத்தை விட 2 அடி உயரத்தில் வைக்க வேண்டும்.

விளக்குப் பொறி வைத்தல்: பயிர் பச்சை கட்டியவுடன் ஒரு ஏக்கருக்கு 3 இடங்களில் விளக்குப் பொறி அமைக்க வேண்டும். பயிரை விட 2-3 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: நெற்பயிருக்கு நீர் மறைய நீர் கட்டுதல் வேண்டும். வயலில் ஒரு அங்குல உயரத்திற்கு நீர் இருந்தால் போதுமானது.

அறுவடை: நெல் மணிகள் மஞ்சளாக மாறியவுடன் அறுவடை செய்யலாம்.

கட்டுரையாளர்கள் தொடர்புக்கு: ciksorg@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in