Last Updated : 05 Sep, 2015 01:39 PM

 

Published : 05 Sep 2015 01:39 PM
Last Updated : 05 Sep 2015 01:39 PM

ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்

பச்சை நிறத்தில் பூக்கும் ரோஜா மலர், ஆறு அடி உயரம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் டையூன் இடுலி மரம், உலகில் ஒன்று மட்டுமே எஞ்சியிருக்கும் வெர்னோனியா சேவாராயன்சிஸ் எனப்படும் அரிய மரம் என ஏராளமான அதிசயத் தாவரங்கள் ஏற்காட்டில் உள்ள மத்தியத் தாவர மதிப்பீட்டாய்வு அலுவலகத்தின் தாவரவியல் பூங்காவில் உள்ளன.

ஏற்காடு மலைப் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள இந்த ஆராய்ச்சிப் பூங்காவில் 1,100 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில் உலகில் அழியும் நிலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் 60-ம் அடக்கம். 180 வகை ஆர்கிட் தொற்றுத் தாவரங்களும் இங்கு உள்ளன. ஏற்காடு தாவரவியல் பூங்காவில் பல நூறு அதிசயத் தாவரங்கள் இருக்கின்றன.

"தாவரவியல் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பல அரிய தாவரங்களை இங்கே நேரடியாகப் பார்க்கலாம். வேறெங்கும் பார்க்க முடியாத பல தாவரங்களை மருந்தியல் கல்லூரி, சித்த மருத்துவம், வனவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் இங்கே பார்த்துச் செல்கிறார்கள்" என்கிறார் தாவரவியல் ஆர்வலரான ஏற்காடு இளங்கோ.

இந்தப் பூங்காவில் உள்ள சில அதிசயத் தாவரங்கள்:

மக்னோலியா கிராண்டிஃபுளோரா (Magnolia Grandiflora)

பூக்கும் தாவரங்கள் தோன்றிய காலத்தில் உருவான மர வகைகளில் ஒன்று மக்னோலியா கிராண்டிஃபுளோரா. சுமார் 9.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட இந்தத் தாவர இனத்தின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆராய்ந்தபோது டைனோசர் வாழ்ந்த காலத்தில், இந்தத் தாவர இனமும் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. டைனோசர்கள் பூமியிலிருந்து அழிந்துவிட்டாலும், இந்தத் தாவர இனம் அழியாமல் தப்பியிருக்கிறது.

வெர்னோனியா சேவாராயன்சிஸ் (Vernonia Shevaroyensis)

சூரியகாந்தி தாவரக் குடும்பத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் வெறும் 3 வகைகள் மட்டுமே மரமாக வளரக் கூடியவை. அவற்றில் ஒன்றுதான் வெர்னோனியா சேவாராயன்சிஸ் மரம். சேர்வராயன் மலையைப் பூர்வீகமாகக் கொண்டதால், இந்த மரத்துக்கு இப் பெயர் வந்தது.

ஏற்காடு மலைப் பகுதிகளில் இருந்த இந்த மரங்கள் அழிந்துவிட்டன. கடைசியாக ஏற்காடு காட்டுப் பகுதியில் இருந்த 2 தாய் மரங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இந்நிலையில் ஒரேயொரு தாய் மரம் மட்டும் ஏற்காடு தோட்டத்தில் வளர்க்கப்பட்டுவருகிறது. இந்த மர வகையில் உலகில் எஞ்சியுள்ள ஒரே மரம் இதுதான் என்கின்றனர் தாவரவியல் வல்லுநர்கள்.

நெப்பந்தஸ் காசியானா (Nepenthes Khasiana)

நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் குறைந்த மண்ணில் பூச்சியுண்ணும் தாவரங்கள் வளர்கின்றன. தாவர வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான இந்தச் சத்துகள் மண்ணிலிருந்து கிடைக்காததால் பூச்சிகளைச் சாப்பிட்டு, அவற்றின் உடலில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ் சத்துகளை இந்தத் தாவரங்கள் எடுத்துக்கொள்கின்றன.

பூச்சிகளைக் கவர்வதற்காக இந்தத் தாவரங்கள் உட்புறம் வண்ணங்களுடன் கவர்ச்சியான ஜாடியைக் கொண்டிருக்கும். இதனால் ஈர்க்கப்படும் பூச்சிகள் ஜாடியின் கழுத்துப் பகுதியில் வந்து அமர்ந்தால், அங்கு உள்ள தேன் மற்றும் வழுக்கும் பகுதி வழியாக வழுக்கிப் பூச்சிகள் ஜாடிக்குள் விழுந்துவிடும். ஜாடியின் அடியில் இருக்கும் பெப்சின் திரவத்தின் மூலம் பூச்சிகள் செரிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற பூச்சியுண்ணும் 60 தாவர இனங்கள் உலகில் உள்ளன. அவற்றில் நெப்பந்தஸ் காசியானா, மேகாலயா மாநிலத்தில் உள்ள காசி மலையில் மட்டும் வளரக் கூடியது. கடந்த 38 ஆண்டுகளாக ஏற்காடு தோட்டத்தில் மூன்று செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரிய பூச்சியுண்ணும் தாவரங்கள் என்ற சிறப்பும் இந்தத் தாவரங்களுக்கு உண்டு.

டையூன் இடுலி (Dioon edule)

உலகில் மிக மிக மெதுவாக வளரும் மரம் இது. மெக்சிகோ நாட்டின் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு மரம் ஆறு அடி ஆறு அங்குலம் வளர 1000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மெக்சிகோவிலிருந்து இதன் விதை கொண்டுவரப்பட்டு, ஏற்காடு தோட்டத்தில் 1990-ல் கன்று உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் சில அங்குல உயரம் மட்டுமே வளர்ந்துள்ள இந்தத் தாவரத்தின் அடிப்பாகம்கூட, இன்னமும் தரையைவிட்டு வெளியே வரவில்லை.

சைலோட்டம் நூடம் (Psilotum Nudum)

பரிணாம வளர்ச்சியின்போது தாவரங்களுக்குச் சைலம், புளோயம் குழல்கள் உருவானது மிக முக்கிய நிகழ்வு. அவ்வாறு முதன்முதலில் சைலம், புளோயம் குழல்கள் உருவான தாவரங்களில் 40 கோடி ஆண்டுகளுக்கும் முந்தைய சைலோட்டம் நூடம் தாவர வகையின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. நீரிலிருந்து நிலத்துக்கு வந்த தாவரங்களில் நிலத்தில் நிமிர்ந்து வளர்ந்த முதல் தாவரம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இவ்வாறு 40 கோடி ஆண்டுகளுக்கும் முன்பே பூமியில் வேரூன்றிய தாவர இனங்களில் சில இன்னும் உள்ளன. அவற்றில் ஒன்றான பெரணி வகை தாவரத்தைச் சேர்ந்தது சைலோட்டம் நூடம்.

பச்சை ரோஜா

தொடக்க காலத்தில் தாவரங்கள் அனைத்தும் பூக்காத தாவரங்களாகவே இருந்துள்ளன. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூக்கும் தாவரங்கள் தோன்றியுள்ளன. அந்தக் காலத்தில் தாவரங்களின் இலைகளே பூவிதழ்களாக மாற்றம் பெற்றுள்ளன. அதனால் பூக்கள் பச்சை நிறத்திலேயே இருக்கும். அதன் பின்னர் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் அயல் மகரந்தச் சேர்க்கைக்காகப் பூச்சிகளைக் கவரும் வகையில் பூக்கள் வண்ண மலர்களாக உருவாகியுள்ளன.

தொடக்க காலத்தில் உருவான பச்சை வண்ண மலர்களை நினைவுபடுத்தும் வகையில் பச்சை வண்ணத்தில் மலரும் ரோஜா இன்னும் உள்ளது. கலப்பினங்கள் மூலம் இன்று சுமார் 2,800 வகையான வண்ண ரோஜா வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பச்சை வண்ண ரோஜா மலரைப் பார்ப்பது கடினம். ஏற்காடு பூங்காவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பச்சை வண்ண ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. வாசமில்லா மலர் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

2 அடி ஆலமரம்

தாவரங்களின் வளர்ச்சியைத் தடுத்து, அவற்றைக் குட்டைத் தாவரங்களாக வளர்க்கும் முறை போன்சாய். உலகின் மிகப் பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ளது. 1,800 விழுதுகளுடன் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும், இந்த மரம் ஒரு காட்டைப்போலத் திகழ்கிறது.

அந்த மரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட ஆலமரக் கன்று 1965-ம் ஆண்டு ஏற்காடு பூங்காவில் நடப்பட்டது. போன்சாய் முறையில் வளர்க்கப்படும் இந்த மரம், 50 ஆண்டுகளில் வெறும் இரண்டு அடி மட்டுமே வளர்ந்துள்ளது. அந்த மரத்தில் விழுதுகள்கூட உள்ளன.

- ஏற்காடு இளங்கோ தொடர்புக்கு: yercaudelango@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x