Published : 27 Aug 2020 11:37 am

Updated : 27 Aug 2020 11:37 am

 

Published : 27 Aug 2020 11:37 AM
Last Updated : 27 Aug 2020 11:37 AM

அழிக்கப்படும் தமிழகப் புல்வெளிகள்: ஆபத்தில் காட்டுயிர்கள், உள்நாட்டுக் கால்நடைகள்

tamil-nadu-meadows

மு.மதிவாணன்

உலக நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 25% பகுதி வெவ்வேறு வகையான புல்வெளிகளால் மூடப்பட்டுள்ளன. புல்வெளி என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த சூழலியல் தொகுதி, பல்லுயிர் செறிந்தது, சூழலியல் சேவை நிறைந்ததும்கூட, காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு மிகவும் இன்றியமையாதது.

மலை உச்சிகள் முதல் சமவெளிகள்வரை எங்கெங்கும் புல்வெளி காணப்படுகிறது. கடுங்குளிர் துருவப்பகுதியான ஆர்க்டிக் தொடங்கி கடும் வெப்பம் நிலவும் பாலைவனங்கள்வரை அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் புல்வெளிகள் நிலைத்திருக்கின்றன. இந்தியாவில் இமயமலை, மேற்குத்தொடர்ச்சி மலை, கிழக்குத்தொடர்ச்சி மலை, தார் பாலைவனம் போன்ற பகுதிகள், சமவெளிப் பகுதிகளில் புல்வெளிகள் உள்ளன.


புல்வெளிகள் உருவாக பல நூறு ஆண்டுகள் தேவைப்படும். காலனி ஆட்சிக் காலம் தொடங்கி தற்போதுவரை புல்வெளிகள் துண்டாடப்படுவது தொடர்கதையாகிறது. குறிப்பாக, வறண்ட பகுதிகளில் உள்ள ஓரளவு வறண்ட புல்வெளிகள் (Semi-arid grasslands) மரம் பயிரிடுதல், தொழிற்சாலைகள், காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய மின்னுற்பத்தி, வீட்டு மனை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக வகை தொகை இல்லாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வகையான வறண்ட புல்வெளிகளைத்தான் சங்க இலக்கியங்கள் முல்லைத் திணை என வகைப்படுத்தியுள்ளன. ஆனால், ஆங்கிலேயர்கள் புல்வெளிகளைப் பயனற்ற தரிசு நிலம் என வகைப்படுத்தினார்கள். சங்க இலக்கிய வகைப்படுத்தலை மறந்து வெள்ளையர்களின் வகைப்படுத்தலை, இப்போதும் நாம் தொடர்வது அறிவுபூர்வமாக இல்லை.

காட்டுயிர்க் களஞ்சியம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் வறண்ட புல்வெளிகளில் நாங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டோம்.

வறண்ட புல்வெளிகளில் தனித்துவம் வாய்ந்த புற்கள், குறுஞ்செடிகள், குறுமரங்கள் காணப்படும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெண்வேலம் மரங்கள் குடைபோல் காட்சியளிக்கும். தனியார் வசமிருக்கும் வறண்ட புல்வெளிகளில் முள்ளுக்கிளுவை மரங்கள் உயிர்வேலியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. புல்வெளிகளில் தீ பரவல் அடிக்கடி நிகழும் என்பதால், இங்கு வளரும் புற்கள், குறுஞ்செடிகள் நெருப்புக்கு மடிந்தாலும் மண்ணுக்கு அடியில் இருக்கும் வேர், மற்ற உறுப்புகள் நெருப்பைத் தாங்கி உயிர்ப்புடன் இருந்து மழை விழுந்தவுடன், பச்சைப் பசேலேன்று மீண்டும் வளர்ந்து நிற்கும்.

அதேபோல் வறண்ட புல்வெளிப் பகுதிகளில் காணப்படும் மரங்களின் பட்டைகளும் நெருப்பைத் தாங்குவதற்கேற்பக் கடினமாக இருக்கும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வறண்ட புல்வெளிகளில் குளோரிஸ் வைட்டியானா, குரோட்டலேரியா குளோபஸா, ஜட்ரோபா மகேஸ்வரி, லிண்டர்னியா மினிமா, தேரியோஃபோனம் சிவகங்கனம் என பத்துக்கும் மேற்பட்ட ஓரிடவாழ் தாவர வகைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட தாவரச் சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளிமான், குள்ள நரி, நரி, முள்ளெலி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களைப் பதிவுசெய்திருக்கிறோம். 114 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட செதில் பல்லி (ஹெமிடாக்டைலஸ் ஸ்கேப்ரிசெப்ஸ்), புதிய வகை விசிறித் தொண்டை ஓணான் (சித்தானா மருதம் நெய்தல்) என 11 சிற்றினங்களைச் சார்ந்த ஊர்வன வகைகள் காணப்பட்டன. இன்னும் பல வகைத் தவளைகள், பூச்சிகளும் காணப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட சாண வண்டுகளும் பதிவு செய்யப்பட்டன. வானம்பாடி, கரிச்சான், கல்குருவி, பனங்காடை, பட்டைத்தலை வாத்து, கீச்சான் உட்பட 100-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 65 வகைப் பறவைகள் வறண்ட புல்வெளிகளை மட்டுமே நம்பி வாழக்கூடியவை.

‘நாரை விடும் தூ’தில் கூறப்பட்டுள்ள செங்கால் நாரைப் பறவையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ஆசியா, ரஷ்யா பகுதிகளிலிருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பூனைப் பருந்துகளுக்கு இப்புல்வெளிகள் இரை, தங்குமிடத்தை வழங்குகின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான காட்டுயிர்களின் புகலிடமாக வறண்ட புல்வெளிகள் விளங்குகின்றன.

முக்கியத்துவம்

புவி வெப்பமாதலுக்கு முதன்மைக் காரணமாக உள்ள கரியமில வாயுவின் சேமிப்புக் கிடங்காக வறண்ட புல்வெளிகள் திகழ்கின்றன.

வறண்ட புல்வெளிகளின் மண்ணுக்குள் இவ்வாயு சேமிக்கப்படுகிறது. மண்ணரிப்பைத் தடுக்கிற அரணாக வறண்ட புல்வெளிகள் விளங்குகின்றன. இவற்றுடன் பல்வேறு வகையான உயிரினங்களுக்கும் வறண்ட புல்வெளிகள் வாழ்வளிக்கின்றன. வறண்ட புல்வெளிகளிக்கு வரும் பூனைப்பருந்துகள் வேளாண்மைக்குத் தீமைசெய்யும் வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை முதன்மை உணவாகக் கொள்கின்றன.

முல்லைத் திணையின் முக்கியத் தொழில் மேய்ச்சல். எனவே, வறண்ட புல்வெளிகள் கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்கு அடிப்படையானவை. தமிழ்நாட்டில் காங்கயம், புலியக்குளம், மலைமாடு போன்ற நாட்டு மாட்டினங்கள், செவ்வாடு, மயிலம்பாடி, கீழக்கரிசல், வேம்பூர் போன்ற நாட்டு ரக ஆடுகள் ஆகியவற்றின் மேய்ச்சலுக்கு வறண்ட புல்வெளிகள் அவசியம். இப்புல்வெளிகள் அழியும் பட்சத்தில் உள்நாட்டுக் கால்நடை வகைகளும் அழிந்துவிடக்கூடும்.

பாதுகாப்புப் பிரச்சினைகள்

எந்த ஒரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அதற்குத் தெரிவு செய்யப்படும் இடம் வறண்ட புல்வெளியாகத்தான் இருக்கிறது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கல்வி நிலையங்கள், பசுமை எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் எனப் பல திட்டங்களுக்கு வறண்ட புல்வெளிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 1880 முதல் 2010 வரையிலான காலத்தில் சுமார் 2 கோடி ஹெக்டேர் புல்வெளிகளும், 2.6 கோடி ஹெக்டேர் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன, குறிப்பாகப் பசுமைப் புரட்சியின்போது பெருமளவு அழிவு நடந்தேறியுள்ளது. காடழிப்பு பேசப்படும் அளவுக்குப் புல்வெளிகளின் அழிவு பேசப்படுவதில்லை.

18 ஆம் நூற்றாண்டில் காலனி ஆட்சியின்போது அரசின் வருவாயைக் கருத்தில் கொண்டு நிலங்கள் வகைப்படுத்தப்பட்டன, காடுகளில் மரங்கள் கிடைப்பதாலும், விவசாய நிலங்களில் வரி வசூல்செய்ய முடியும் என்பதாலும் அவை உற்பத்தி நிலப்பரப்பாகக் கணக்கில் கொள்ளப்பட்டன. புல்வெளிகள், பாலைவனங்கள் போன்றவை பயனற்ற நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு இன்றளவும் அதுவே பின்பற்றப்பட்டுவருகிறது.

இக்காரணத்தால் புல்வெளிகள் மாற்றுப் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. வறண்ட புல்வெளிகளில் பெருமளவில் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. அதனால் அந்த சூழலியல் தொகுதியில் மாற்றம் நிகழ்கிறது, காற்றாலை விசிறிகளில் பருந்து வகைப் பறவைகள் அடிபட்டு இறக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ஓணான், பல்லிகள், பாம்புகள் போன்ற ஊர்வன வகைகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அழிவதற்குக் காரணம்

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையத்தில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் திருநெல்வேலி மாவட்டம் மானூர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் சூரிய ஒளித் தகடுகள் புல்வெளிகளில் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாவரங்கள், புற்கள், மற்ற உயிரினங்கள் வாழ இயலாது போகிறது.

தமிழ்நாட்டிலுள்ள வறண்ட புல்வெளிகளில், குறிப்பிடத்தக்க இடங்கள் கோயில் நிலங்கள். இவையும் தற்போது மாற்றுப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுவருகின்றன, குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில், மற்ற கோயில்கள் சார்ந்த சுமார் 4,000 ஏக்கர் நிலங்கள் தமிழ்நாடு காகிதம், செய்தித்தாள் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு தைல மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இது தவிர அயல் தாவரமான சீமைக்கருவேலம், உன்னிச்செடி பெரும்பாலான புல்வெளிகளை அபகரித்துள்ளன. இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சினைகளைப் புல்வெளிகள் சந்தித்துவருகின்றன.

தீர்வு

இந்தியாவில் உள்ள புல்வெளிகளில் 7% புல்வெளிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளுர் மக்கள் பங்களிப்புடன் வறண்ட புல்வெளிகளை மேலாண்மை செய்ய, நிர்வகிக்கத் திட்டங்கள் - கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். தமிழக வறண்ட புல்வெளிகளில் வாழ்ந்துவந்த சிவிங்கிபுலி ஏற்கெனவே அற்றுப்போய்விட்டது. தற்போது கானமயில் பறவை அழியும் தறுவாயில் உள்ளது.

வறண்ட புல்வெளிகளைக் காக்கத் தவறினால், மேலும் பல உயிரினங்கள் அற்றுப்போக நேரும். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கு வறண்ட புல்வெளிகள் அவசியம். வறண்ட புல்வெளிகள் அழியும்பட்சத்தில் அவற்றை நம்பி வாழும் மேய்ச்சல் சமூகம் மோசமான பாதிப்பைச் சந்திக்கும். விரைவாக அழிக்கப்பட்டும் அழிந்தும்வரும் வறண்ட புல்வெளிகளை மீட்டெடுத்து வளம்குன்றா வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது.

கட்டுரையாளர்: மு.மதிவாணன்,

தொடர்புக்கு: mathi@atree.org.


தவறவிடாதீர்!

Tamil Nadu meadowsGrasslandsதமிழகப் புல்வெளிகள்உள்நாட்டுக் கால்நடைகள்ஆபத்தில் காட்டுயிர்கள்Blogger specialEnvironment

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author