

தூய ஒளி பொருந்திய ரத்தினங்கள் பற்பல
ஆழங்காணாத கடல்களின் இருட் குகைகளில் அமைதியாக;
செக்கச் சிவந்த மலர்கள் பல பூக்கின்றன யாரும் காணாமல்
பாலைவனக் காற்றில் தம் இனிமையை வீணே வீசியபடி.
- ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே
இயற்கையின் எந்த ஓர் அம்சமும் மனிதர்கள் பார்த்துப் பயன்படுத்துவதற்காகவோ, வீணாகவோ இருப்பதில்லை. மேற்கண்ட பாடலில் ‘வீணே’ என்ற சொல்லை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், பெருமளவு அது உண்மையே. இன்னும் மனிதர்களின் வாசம் அதிகம் படாத இடங்களில் அழகிய மலர்கள் அதிக வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கின்றன. அழகிய தாவரங்கள், பறவைகள் இன்ன பிற உயிரினங்கள் தங்களுக்கே பிரத்யேகமான மனித மறைவுப் பகுதிகளில் உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத்தான் ‘வாழும் வைரங்கள்’ என்று சொல்கிறது பி.என்.எச். எஸ்-ஸும் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள ‘லிவிங் ஜுவல்ஸ் ஃப்ரம் தி இண்டியன் ஜங்கிள்’ என்ற அசத்தலான புத்தகம். இதில் அடங்கியிருக்கும் அற்புதமான ஓவியங்கள்தான் அப்படிச் சொல்ல வைக்கின்றன.
தாவரப் பொக்கிஷம்
அசோக் கோத்தாரியும் பி.எஃப். சாப்காரும் தொகுத்து 1996-ல் வெளியிட்ட ‘சாலிம் அலிஸ் இந்தியா’ என்ற புத்தகம் சாலிம் அலிக்குச் சிறப்பு செய்யும் விதத்தில் அழகான ஒளிப்படங்கள், ஓவியங்கள் போன்றவற்றுடன் அட்டகாசமான வடிவமைப்பில் வெளியானது. அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து வெளியான ‘டிரெஷர்ஸ் ஆஃப் இண்டியன் வைல்டுலைஃப்’ என்ற புத்தகமும் அப்படியே. இந்த வரிசையில் 2009-ம் ஆண்டு வெளியான புத்தகம்தான் ‘லிவிங் ஜுவல்ஸ் ஃப்ரம் தி இண்டியன் ஜங்கிள்’. ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’யின் (பி.என்.எச்.எஸ்) 125-ம் ஆண்டு நிறைவின் நினைவாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு ‘இமயமலைத் தாவரங்கள்’. முதல் இரண்டு புத்தகங்களிலும் பறவைகளும் புலியும் அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டதாக ஆதங்கம் வெளியானதைத் தொடர்ந்து, இந்தப் புத்தகத்தில் தாவரங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டதாகத் தொகுப்பாசிரியர்கள் முன்னுரையில் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும், மற்ற உயிரினங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.
ஆங்கிலேயர்களின் வரவு ஒரே நேரத்தில் இந்திய வனங்களின் அழிவு காலமாகவும் காட்டுயிர் அறிவுத் துறையின் பொற்காலமாகவும் அமைந்தது விநோதம்தான். ஒரு பக்கம் காடுகளையும் இயற்கை ஆதாரங்களையும் அழித்துக்கொண்டே, மறுபுறம் அவற்றைப் பற்றிய ஆவணப்படுத்தலையும் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய உயிரினங்களின் மீது அக்கறைகொண்டு செயல்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஒரு பக்கம் காட்டுயிர் அறிவுத் துறைக்கு ஆக்கம் சேர்த்தன என்றால், ஆங்கிலேய வேட்டையாடிகளின் பதிவுகளும் அவதானங்களும்கூட இந்த அறிவுத் துறைக்குப் பங்களித்திருக்கின்றன.
படரும் ஒளி
அப்படிப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்தியக் காட்டுயிர்களைப் பற்றி எழுதிய பதிவுகளையும், கூடவே கண்ணுக்கு விருந்தாக அவர்கள் தீட்டிய அற்புதமான காட்டுயிர் ஓவியங்களையும் தொகுத்து இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. தனது 13-ம் ஆட்சி ஆண்டை சிறப்பிக்க ஜஹாங்கீர் யானை வேட்டையாடியது, சிங்கத்திடமிருந்து தன் எஜமானனை யானையொன்று காப்பாற்றியது, தன்னைக் காயப்படுத்தியவரைக் குறிவைத்து அவர் ஏறிய மரத்தின் மீது கரடி ஒன்று ஆவேசமாகத் தாக்கியது என்று சுவாரஸ்யமான பல பகுதிகள் இந்தப் புத்தகத்தில் உண்டு.
கூடவே, துறைசார்ந்த குறிப்புகளும் நிறைய கிடைக்கின்றன. சற்றே இறுக்கத்தைத் தவிர்ப்பதற்காக ருட்யார்ட் கிப்ளிங்கின் கதைகளும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 17-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 20-ம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் காட்டுயிர் குறித்து எழுதப்பட்ட அரிதான புத்தகங்கள், பதிவுகள், அழகிய ஓவியங்கள் போன்றவற்றையும் இந்தப் புத்தகம் தாங்கியிருக்கிறது. இதைப் புரட்டிப் பார்க்க ஆரம்பிக்கும்போது, இதிலுள்ள ஜொலிக்கும் வைரங்களின் ஒளி நமது வீட்டுச் சுவர்களிலும் படர்வதுபோன்ற உணர்வு ஏற்படுவது நிச்சயம்.
லிவிங் ஜுவல்ஸ்
ஃப்ரம் தி இண்டியன் ஜங்கிள்
தொகுப்பாசிரியர்கள்: அசோக் கோத்தாரி, பி.எஃப். சாப்கார்
விலை: ரூ. 1,600
வெளியீடு: பி.என்.எச்.எஸ் (BNHS), ஆக்ஸ்ஃபோர்டு (Oxford)