Last Updated : 06 May, 2014 01:26 PM

 

Published : 06 May 2014 01:26 PM
Last Updated : 06 May 2014 01:26 PM

பசுமை நோபல் அங்கீகாரம்: உயிரைப் பணயம் வைத்த போராளி

இந்தியாவின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் உள்ள கரே கிராமத்தில் ஒவ்வொரு நாள் காலையும் அரை மணிநேரத்துக்கு நிலம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அது நிலநடுக்கம் அல்ல. தினசரி நிலம் நடுங்குவது எப்படி நிலநடுக்கமாக இருக்க முடியும்?

அருகிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஜிண்டால் நிறுவன ஊழியர்கள் ஒவ்வொரு முறை வெடி வைத்துத் தகர்க்கும்போதும் அரை மணி நேரத்துக்கு அதிர்ந்து பிறகு அமைதியாகிறது நிலம். தொடர்ந்து கரும் தூசுப்புகை மேல் எழுந்து சூரியனை மறைத்து வானமும் கறுத்துவிடுகிறது. ஒரு நிலக்கரிச் சுரங்கத்துக்கே அரை மணி நேரத்துக்கு நிலம் அதிர்கிறது என்றால், இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

இதைப் பற்றித் தீவிர அக்கறை கொண்ட ரமேஷ் அகர்வால் (60), கரே கிராமம் அருகே ஜிண்டால் இரும்பு மின் ஆலை, இரண்டாவது நிலக்கரிச் சுரங்கத்தை 2012-ல் திறக்க அனுமதி கோரியதற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.

வெற்றிக்குக் கிடைத்த பரிசு

மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது சிறிய கடைக்குள் நுழைந்த ஒரு நபர் "நீ ரொம்ப பேசுகிறாய்" என்று கூறிவிட்டு, துப்பாக்கியை நீட்டி அவருடைய வலது காலில் இரண்டு முறை சுட்டான். பிறகு பைக்கில் ஏறிப் பறந்துவிட்டான்.

அவர் சுடப்பட்ட பிறகு, சுட்டது தாங்கள்தான் என்று ஜிண்டால் இரும்பு, மின் ஆலையின் பாதுகாவலர்கள் தாங்களாகவே அறிவித்துக்கொண்டார்கள். ஆனால், ரமேஷ் சுடப்பட்டதற்கும் ஜிண்டால் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

தனி நபர் ராணுவம்

இப்படி உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையக்கூடிய அரசியல் பலம் மிகுந்த கனிமச் சுரங்கம், மின் ஆலைகளின் நில ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனி நபர் ராணுவம் போலப் பத்தாண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவருகிறார் ரமேஷ் அகர்வால். பெருநிறுவனங்களுக்கு எதிரான மூன்று வழக்குகளில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். ஏழு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

“இந்தப் போராட்டத்தை நான் தொடங்கியபோது, தாக்குதலுக்கு உள்ளாவேன் என்று தெரியாமல் இல்லை. ஆனால், இதற்காகவெல்லாம் அஞ்சி ஓடிவிட மாட்டேன்" - அமைதியாகப் பேசும் ரமேஷ் அகர்வால், தற்போது ராய்கரில் வாழ்ந்துவருகிறார். அவருடைய தொடையில் உடைந்துள்ள எலும்பை இணைக்கப் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

மிரட்டிப் பணம் பறித்ததாகவும், அவதூறு செய்ததாகவும் போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் ரமேஷ் அகர்வால் 72 நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிகாரத்தை எதிர்த்து

“அதிகாரம் மிக்கவர்களை எதிர்த்து மோத முடியாது என்று மக்கள் பொதுவாக நம்புகிறார்கள். ஆனால், சில வழக்குகளில் நாம் வெற்றிபெற ஆரம்பித்துவிட்டால், முதலில் தங்களையும் பிறகு இந்த நாட்டையும் மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள்.

கனிமச் சுரங்கம் தோண்டுவது சுற்றுச்சூழலைச் சீர்கெடச் செய்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் அழித்துவிடும்” அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன.

அவரது வார்த்தைகளை உறுதிப்படுத்துவது போல உள்ளன, இந்தப் பகுதியில் உள்ள ஒரே அலோபதி மருத்துவரான ஹரிஹர் பட்டேலின் கூற்று. "இந்தப் பகுதியில் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள், தோல் சிதைவு, உடல் உணர்விழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன."

கோல்ட்மேன் பரிசு

ரமேஷ் அகர்வாலின் 10 ஆண்டு தளராத போராட்டம் இன்றைக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை நோபல்' என்றழைக்கப்படும் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்ற ஆறு பேரில் அவரும் ஒருவர்.

1990-ல் ரிச்சர்ட், ரோதா கோல்மான் ஆகிய இருவரும் இணைந்து இந்த விருதை உருவாக்கினர். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தீவு நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த அடித்தட்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 லட்சம் வழங்கப்படும்.

எது வளர்ச்சி?

இவ்வளவு மதிப்பு மிக்க விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், சத்தீஸ்கரில்கூட என்னை யாருக்கும் பெரிதாகத் தெரியாமல் இருப்பதும், உதவி கிடைக்காமல் இருப்பதும் வருத்தத்தைத் தருகிறது என்கிறார் ரமேஷ்.

"வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கான வரையறையைத் திருத்தி எழுதியாக வேண்டும். இப்போது நடைபெறும் வளர்ச்சி நடவடிக்கைகள் சிறிய கூட்டத்துக்குத்தான் பயன்படுகின்றன, எது பெரும் மக்கள் கூட்டத்துக்குப் பயன்படுகிறதோ, அதுதான் உண்மையான வளர்ச்சி.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறினால், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். வேலை இருக்காது, பணம் இருக்காது, விவசாய நிலங்கள் இருக்காது, காடுகள் இருக்காது. கடைசியில் அவர்கள் ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு அடுத்தவரைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்" என்கிறார் ரமேஷ் அகர்வால்.

மனிதனை மனிதன் சாப்பிடப் போகும் அந்தத் தருணத்தைத் தன்னால் முடிந்த அளவு தள்ளிப்போடுவதற்கான உத்வேகம் வார்த்தைகளில் மட்டுமல்லாமல், ரமேஷின் செயலிலும் இருப்பதை நன்கு உணர முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x