Published : 13 Jun 2020 12:02 pm

Updated : 13 Jun 2020 17:03 pm

 

Published : 13 Jun 2020 12:02 PM
Last Updated : 13 Jun 2020 05:03 PM

கேரள யானை பலி... என்ன செய்திருக்க வேண்டும்?

kerala-elephant-murder

கேரளத்தில் கருவுற்றிருந்த ஒரு காட்டு யானை பலியான செய்தி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த யானை இறந்த சோகத்திலும் ஆறுதல் தருவது, அக்கறை கொண்டு ஆயிரக்கணக்கானோர் தமது கண்டனத்தைத் தெரிவித்ததுதான். பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவிய கண்டனங்களின் விளைவாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது. மத்திய வனத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. கேரள முதல்வர் தலையிட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

இது ஒருவகையில் இயற்கை ஆர்வலர்களுக்கு கிடைத்த வெற்றிதான். ஆனால், இதை ஒரு யானையின் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது. இதற்கு முன்பும் இதே முறையில் யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் பலியாகியுள்ளன.


முதலில், இந்த சோகம் நிகழ்ந்த பின்னணியை அறிந்துகொள்வோம்.

அன்னாசிப் பழத்தில் பட்டாசு வைத்துக் கொடுத்துள்ளார்கள் என்று ஒரு செய்தி பரவியது. பட்டாசு அப்படி வெடிக்காது என்பதை அறியாதவர்களால், பரப்பப்பட்ட செய்தி அது. யானை மரணிக்கக் காரணமாக இருந்தது 'அவுட்டுக்காய்' எனப்படும், ஒருவகை நாட்டு வெடிகுண்டு. இதனைப் பெரும்பாலும் காட்டுப்பன்றிகளைக் கொல்லப் பயன்படுத்துகின்றனர். வெடிப்பந்தில் கொழுப்பைத் தடவியோ அல்லது பழங்களில் வைத்தோ பன்றிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் எறிந்துவிடுவார்கள். பன்றிகள் தமது உணவு என எண்ணி அவற்றை உண்ணும்போது வெடித்து வாய், தாடைப் பகுதி சிதறி உடனேயோ அல்லது சில மணி நேரத்திலோ பலியாகிவிடும். இது ஒரு குரூர வேட்டை முறை.

பன்றிகளுக்கு வைக்கப்பட்டதைச் சாப்பிட்ட யானைகள், காட்டு மாடுகள், மான்கள், கரடிகள் போன்ற விலங்குகளும் படுகாயமுற்று இறந்துள்ளன. ஆடு, மாடுகளும் கொல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் காடுகளை ஒட்டியுள்ள எல்லா கிராமங்களிலும் இத்தகைய வேட்டை முறை இருந்துள்ளது. பல இடங்களில் இப்போதும் தொடர்கிறது. இந்த அவுட்டுக்காய் எனப்படும் சவுட்டுவெடி வெடித்ததால்தான், படுகாயமுற்று உணவு உண்ண முடியாமல் கேரளத்தில் அந்த யானை இறந்துள்ளது. தனது வலியையும் வேதனையையும் குறைத்துக்கொள்ள ஆற்றில் அது இறங்கி இருக்கலாம். அந்த யானை கருவுற்று இருந்தது என்ற செய்தியே எல்லோருக்கும் கூடுதல் வருத்தத்தைத் தந்தது. இந்த கொடூரச் செயலை செய்தவர்கள், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகே இப்படி அவுட்டுக்காய் வெடித்து பரிதாபமாக யானைகள் இறந்த நிகழ்வுகள் உண்டு. ஆனால், அப்போது இவ்வளவு பெரிய கவனம் கிடைக்கவில்லை. காட்டு விலங்குகள் இப்படிக் கொல்லப்படாமல் இருக்க நீண்டகால செயல்திட்டம் தேவைப்படுகிறது.

சின்னத்தம்பி, விநாயகன்

யானைகள் காட்டை விட்டு வெளியே வரும்போதுதான் அவுட்டுக்காய், மின்வேலி போன்றவற்றால் கொல்லப்படுகின்றன. யானைகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும் விளைநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும்போதும், அங்குள்ள மக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அவர்கள் அதை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்றனர். அதன் உச்சமாக யானைகளைப் பிடிக்கச் சொல்லி போராட்டம் நடத்துகின்றனர். கோவையின் தடாகம் பகுதியில் இரண்டு யானைகளைப் பிடிக்க வலியுறுத்தி, சென்னையில் உள்ள வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

அதன் விளைவாக சின்னத்தம்பி, விநாயகன் என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டிருந்த யானைகள் பிடிக்கப்பட்டு ஆனைமலை, முதுமலை ஆகிய இடங்களில் விடப்பட்டன. ஆனைமலைக் காட்டில் விடப்பட்ட சின்னத்தம்பி 50 கிலோ மீட்டர் பயணித்து காட்டைவிட்டு வெளியே வந்து, மீண்டும் விளைநிலங்களில் மேய ஆரம்பித்தது. அதன் விளைவாக மீண்டும் பிடிக்கப்பட்டு முகாமில் வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டுள்ளது. இப்படித் தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது கேரள யானை பலியானதற்கு எழுந்த கண்டனங்கள் போலவே, சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்ட போதும் எதிர்ப்பு எழுந்தது.

காட்டைப் பிளந்தோம்

இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியது, யானைகள் இப்படி பாதிப்புக்கு உள்ளாவதற்கு அடிப்படைக் காரணம் என்ன. அவை காட்டுக்கு வெளியே மனிதக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் விளை நிலங்களுக்கும் வருவதுதான். அவ்வாறு வருவதை முற்றிலும் தடுக்க முடியாது. வன நிலம் என்று நாம் வரையறுத்த எல்லைகளை யானைகள் அறியாது. ஆனாலும் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருவதை பெரும்பாலும் அவை தவிர்த்துவிடுகின்றன.

பெருத்த உடல் கொண்ட யானைகளுக்கு நிறைய உணவு தேவைப்படுகிறது. எனவே, அவற்றிற்கு பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. அதனால் யானைகள் ஆண்டுதோறும் நீண்ட தொலைவு வலசை செல்கின்றன. அவற்றின் வாழ்விடத்தை முறையாக மேலாண்மை செய்யாமல், யானைகள் காட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்க இயலாது.

ஒரு காலத்தில் பரந்த வாழ்விடங்களில் வாழ்ந்த யானைகளை, இப்போது நாம் வரையறுத்த எல்லைகளுக்குள் வாழ நாம் நிர்பந்தித்து வருகிறோம். அந்தக் குறுகிய காடுகளும் பல்வேறு வகையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து தேக்கடி செல்லும் மலைப்பாதையில் மாபெரும் குழாய்கள் பொருத்தப்பட்டிருப்பதை பலர் பார்த்திருப்போம். மின்சாரம் உற்பத்தி செய்ய அமைக்கப்பட்ட 'பென் ஸ்டாக்' எனப்படும் குழாய்கள் அவை. நாம் மனிதத் தேவைகளையே முதன்மைப்படுத்துகிறோம். ஆனால் அந்த குழாய்களோ, ஒரு முயல்கூடக் கடந்து போக முடியாத அளவு காட்டை இரண்டாகப் பிளந்துவிட்டன.

அதேபோல் வால்பாறைக்குப் போகும்போது காண்டூர் கால்வாய் எனப்படும் சமமட்டக் கால்வாயை பார்த்திருக்கலாம். விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் மாபெரும் நீர் மேலாண்மை திட்டம் அது. ஆனால் அந்தக் கால்வாயும் காட்டை இரண்டாகப் பிளந்துவிட்டது. எந்த விலங்கும் அதனைக் கடந்து போக முடியாது. இப்படி நம்மால் அமைக்கப்பட்ட அணைக்கட்டுகள், கால்வாய்கள், குழாய்கள், சாலைகள் என யானைகள் வாழ்ந்த காடு பெரும் சேதத்திற்கு உள்ளாகிவிட்டது.

உணவும் தண்ணீரும்

மிச்சமிருக்கும் காடுகளின் தரமும் யானைகள் வாழத் தகுதி உடையனவாக இல்லை. நமது காடுகளில் காலங்காலமாய் இருந்த தாவர வகைகள் இப்போது இல்லை. 1980 ஆம் ஆண்டு 'இந்தியக் காடுகள் பாதுகாப்புச் சட்டம்' ஏற்படுத்தப்படும் வரை, மரத் தேவைக்காக காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டன. அதனால் யானைகள் விரும்பி உண்ணும் மர வகைகள் பலவும் குறைந்து போயின.

யானைகளின் உணவு குறைந்துபோக மற்றுமொரு முக்கியக் காரணம், நமது காடுகளில் மண்டிக்கிடக்கும் அந்நியத் தாவரமான லாண்டானா கமாரா எனப்படும் உன்னிச்செடி. யானைகள் அறுபது விழுக்காட்டுக்கு மேல் புற்களையே உண்கின்றன. ஆனால், புற்கள் வளர முடியாத அளவு இந்த களைச்செடிகள் பரவிவிட்டன. அதேபோல் சீமைக்கருவையும் யானைகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்திருக்கும் மற்றொரு அந்நியத் தாவரமே.

உணவைப் போலவே தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது. பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விளைவாக மழை அளவு குறைந்து போனதால், காட்டில் பல நீர்நிலைகளில் கோடையில் தண்ணீர் இல்லாமல் போய்விடுகிறது. எனவே குடிநீருக்காக, உணவுக்காக யானைகள் காட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

எப்படித் தடுப்பது?

இவை தவிர யானைகள் காலங்காலமாய் போய்வந்த வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுவிட்டதால் வேறு வழியின்றி விளைநிலங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் வந்துவிடுகின்றன. விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டுப் பழகிய யானைகள், திரும்பத் திரும்ப அவற்றைத் தேடிவர ஆரம்பிக்கின்றன. காடு, விளைநிலம் போன்றவற்றை ஒரு யானையால் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்? எல்லாவற்றையும் உணவாகவே அவை கருதுகின்றன. ஆனால், விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வன விலங்குகள் மீது கோபமும் வெறுப்பும் கொள்கின்றனர்.

யானைகள் இப்படி மனிதக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் விளைநிலங்களுக்கும் வருவதைத் தடுக்க வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சூரிய மின்வேலிகள் அமைக்கப்பட்டன. அகழிகள் வெட்டப்பட்டன, யானைத் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டன, தேவைப்படும் இடங்களுக்கு கும்கி யானைகள் கொண்டுவரப் பட்டன. புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. வால்பாறை போன்ற இடங்களில் யானைகளின் நடமாட்டத்தை அறிவிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. இப்படிப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நிலைமை சீராகவில்லை.

எனவே, செய்யவேண்டிய முதன்மையான செயல்பாடுகளைக் கண்டறிந்து, அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானை மேலாண்மை விரிவான திட்டம்

* முதலாவதாக, காட்டின் தரத்தை மேம்படுத்துவது அவசியம். காட்டில் மண்டிக்கிடக்கும் உன்னிச் செடி, சீமைக்கருவை போன்ற களைச் செடிகளை அகற்ற அறிவியல்பூர்வமான தொடர் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அதற்குத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

* யானைகள் விரும்பி உண்ணும் மரவகைகளை வளர்த்தெடுக்க சிறப்புத் திட்டங்கள் தேவை. தாவர உண்ணிகள் நிறைந்துள்ள காடுகளில் மரங்களை வளர்த்தெடுப்பது எளிதான செயல் இல்லை. அதை சாத்தியப்படுத்தும் வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

* தேவையான இடங்களில் புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

* பல கோடி செலவழித்து வெட்டப்பட்ட அகழிகள் பராமரிப்பின்றி உள்ளன. அவற்றை முறையாகப் பராமரித்தால் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதை பெருமளவில் தடுக்க இயலும்.

* தேவையான இடங்களில் யானைகளைக் கட்டுப்படுத்தும் படை கூடுதலாக அமைக்கப்பட வேண்டும். அந்தப் படைக்கு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட வேண்டும். ஊருக்குள் வரும் யானைகளை மேலாண்மை செய்ய, மாவட்ட வன அலுவலர்களுக்குப் போதிய அவசர நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

* காட்டிலுள்ள அனைத்து யானைகளும் மனித வாழ்விடங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஒரு சில யானைகள் வந்து பயிர் மேயப் பழகினால், மற்ற யானைகளும் வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, தொடர்ச்சியாக வெளியே வரும் யானைகளைக் கண்டறிய ஆய்வு தேவை. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட யானைகளைத் தொடர்ந்து கண்காணிக்க 'ரேடியோ காலர்' போன்ற அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அந்த முயற்சி சில நேரம் தோல்வியடைந்தாலும், இன்னும் மேம்பட்ட அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆய்வைத் தொடர வேண்டும்.

* யானைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையிலும் இன்னும் மேம்பட்ட அறிவியல் பின்னணி தேவைப்படுகிறது. அதற்கான கூடுதல் கவனம் செலுத்த அறிவியலாளர்களுக்கு போதிய ஆதரவு தரப்பட வேண்டும்.

* காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களில் எவ்விதத் தடையும் ஏற்படாமல் இருக்க சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது. நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அத்தகு சட்டம் விரைந்து இயற்றப்பட வேண்டும்.

* எந்தக் காரணம் கொண்டும் காடுகளில் புதிய சாலைகள், கட்டிடங்கள், சுரங்கங்கள், அணைக்கட்டுகள் என காட்டுயிர்களின் வாழ்விடங்களைச் சிதைக்கும் எவ்விதப் பணிகளும் இனி நடைபெறாது எனும் கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

* முதுமலை - பந்திப்பூர் சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுவதைப் போல் யானைகள் வாழும் பிற காட்டுப் பகுதிகளிலும் இரவு நேரப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும்..

* காட்டுச் சாலைகளில் யானைகள் கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைத்தல், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல், காடுகளில் அமைக்கப்பட்டுள்ள பெருங்குழாய்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றில் யானைகள் கடந்து செல்ல அமைப்புகளை உருவாக்குதல் போன்றவை யானைகளின் வாழிடத்தை மேம்படுத்தும். வனத் துறை அல்லாத பிற அரசுத் துறைகளின் பங்கும் இதில் முக்கியமானது.

* காட்டு விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காலம் தாழ்த்தாமல் சந்தை விலைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இழப்பீடு பெறும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

* காடுகளை ஒட்டி வாழும் மக்களும் யானைகளின் நிலையை அறிந்து, அவற்றின் மீது வெறுப்பு கொள்ளாமல் புரிந்துகொள்ள முயல வேண்டும். யானைகளும் மக்களும் பாதிப்பு அடையாத வகையிலான தீர்வுக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

* வால்பாறை, கூடலூர் போன்ற பகுதிகள் காலங்காலமாக யானைகளின் வாழிடம். அங்கு யானைகள் வராமல் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து காட்டில் வாழும் பழங்குடிகளின் மனநிலையுடன், அப்பகுதிகளில் வாழாமல் தவிர்ப்பதே சரியான தீர்வாக இருக்கும்.

* இதுவரை யானைகளே வந்திராத பல இடங்களிலும் யானைகள் நடமாடத் தொடங்கியுள்ளன. அந்த இடங்களில் வாழும் மக்களுக்கு யானைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். களப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.

* கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கிய செய்தி ஏதோ ஒரு வகையில் காயம்பட்டுவிட்ட யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதைப் பற்றியது. போதிய கால்நடை மருத்துவர்கள் வனத்துறைக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கால்நடை மருத்துவத் துறை மருத்துவர்களே வனத் துறைக்கு தற்காலிக துறை மாறுதலாக அனுப்பப்படுகின்றனர். இப்போது வனத் துறையில் பணியாற்ற கால்நடை மருத்துவத் துறையில் இருக்கும் மருத்துவர்கள் தயங்குகின்றனர். ஏனெனில் இங்கு பணியாற்றும் மருத்துவர்களைப் பற்றி, மருத்துவம் பற்றிய புரிதல் இல்லாத சிலர் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்வதுதான். அவற்றில் பல உண்மைக்கு புறம்பானவை. இதனால் அந்த மருத்துவர்கள் மன அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிக்கலான சூழலில் யானைகளுக்கு மருத்துவம் அளிக்கவே தயங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் .

அரசு செய்ய வேண்டியவை

யானைகளைப் பாதுகாக்க 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் யானைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி யானைக் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது 32 யானைக் காப்பகங்கள் உள்ளன.

ஆனால் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிக் காப்பகங்கள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் சட்டப் பாதுகாப்பும் நிதி ஒதுக்கீடும் யானைக் காப்பகங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் சுமார் 30,000 யானைகள் உள்ளன. அவை சுமார் 70,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள காட்டுப் பகுதியை தமது வாழிடமாகக் கொண்டுள்ளன. அந்தக் காடுகள் தொடர்ச்சியானவை அல்ல. சிறு சிறு துண்டுகளாக உள்ளன. அவற்றில் 8 பகுதிகள் மட்டுமே 1,000 யானைகளுக்கு மேல் வாழத் தகுதி உடையவையாக உள்ளன. எனவே, யானைகளின் வாழிடத்தை மேலாண்மை செய்வது எளிதானதல்ல.

ஆனால், யானைகளைப் பாதுகாக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை மிகக் குறைவு. கடந்த ஆண்டு புலிக் காப்பகங்களுக்கு மத்திய அரசு ரூ. 320 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், யானைக் காப்பகங்களுக்கு ரூ. 31 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகள் வாழும் காட்டை மேலாண்மை செய்யவும் மனித - யானை முரண்களைக் களையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. அதை ஒதுக்க அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். யானைக் காப்பகங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.

கேரள யானையின் மரணத்துக்காக அனுதாபமும் கண்டனமும் தெரிவித்த அனைவரும், யானைகள் சார்ந்த மற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வைக் காணத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

- 'ஓசை' காளிதாசன்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: pasumaiosai@gmail.com

தவறவிடாதீர்!

Kerala elephant murderகேரள யானைKerala elephantஎன்ன செய்திருக்க வேண்டும்'ஓசை' காளிதாசன்காட்டு யானைசோகப் பின்னணிபட்டாசுஅன்னாசிப் பழம்யானை மேலாண்மைகும்கி யானையானை பாதுகாப்புயானை வாழிடம்Blogger special

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

four-out-of-a-hundred

நூறில் நால்வர்

இணைப்பிதழ்கள்

More From this Author

x