மரபணு மாற்ற உணவுக்கு முடிவு?

மரபணு மாற்ற உணவுக்கு முடிவு?
Updated on
1 min read

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பட்டினியைப் போக்கும் என்று பரப்புரை செய்யப்பட்டுவரும் வேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை விதிக்க ரஷ்யா அதிரடியாக முடிவு செய்துள்ளது.

"எக்காரணத்தைக் கொண்டும் உணவுப் பொருட்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்த மாட்டோம்" என்று அந்நாட்டுத் துணைப் பிரதமர் அர்காடி த்வார்கோவிச் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தடை செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட பல துறைகளில் மரபணு மாற்றம் குறித்த சாதக - பாதக அம்சங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றார்.

இதற்கு முன்பு பிரதமர் திமித்ரி மெத்வதேவ், "மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை மோசமான விஷயமாகப் பார்க்கத் தேவையில்லை. ஆனால், அதை நாட்டின் உணவு உற்பத்தியில் பயன்படுத்த மாட்டோம்" என்று கடந்த ஆண்டு கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ரஷ்ய அரசின் தரவுகளின்படி கடந்த 10 வருடங்களில் நாட்டின் உணவு உற்பத்தியில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 0.01 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தற்சமயம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட 57 உணவுப் பொருட்கள் அங்கே புழக்கத்தில் உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு தொழில்நுட்பங்களைப் பெறும் இந்தியா, இந்த யோசனையையும் நல்ல முன்னுதாரணமாகப் பின்பற்றலாமே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in