ஆராய்ச்சியாளரை உருவாக்கிய ஆமை
தனது பரீட்சை ஒன்றைத் தவிர்ப்பதற்காகக் கடற்கரையில் ஒரு நாள் இரவில் உலவிக்கொண்டிருந்தார் கார்த்திக் சங்கர். அந்த இரவு அவரது வாழ்க்கையையே திருப்பிப்போடும் என்று அவருக்குத் தெரியாது. அப்போது ஒரு பங்குனி ஆமை (Olive Ridley Turtle) தாழ்வான கடல் பகுதியில் இருந்து சற்றே உயரமான கரையை நோக்கிக் கஷ்டப்பட்டு ஏறிவந்தது. பிறகு ஒரு குழியைத் தோண்டி முட்டைகளை இட்டுவிட்டுக் கடலுக்குத் திரும்பியது.
லட்சக்கணக்கான ஆண்டுகளாகப் பங்குனி ஆமைகள் இதைச் செய்து வருகின்றன. ஆனால், கார்த்திக் சங்கரின் வாழ்க்கையில் அந்தக் குறிப்பிட்ட ஆமை திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆமை முட்டையிட்ட அந்த நிகழ்வால் கார்த்திக் கவரப்பட்டார். உலகின் சூழலியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வித்து அவரது மனதில் விழுந்தது.
ஆச்சரிய அனுபவங்கள்
1980-களில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் படிக்க ஆரம்பித்தபோது சூழலியல், காட்டுயிர்கள் மீது அவருடைய ஆர்வம் அதிகமானது. இருளர்களுடன் சேர்ந்து பாம்பு பிடிக்கவெல்லாம் சென்று வந்திருக்கிறார். "அந்த நேரத்தில்தான் சில ஆர்வலர்கள் இணைந்து கடல் ஆமை பாதுகாப்பு மாணவர் அமைப்பை (SSTCN- Students Sea Turtle Conservation Network) உருவாக்கி இருந்தோம். அந்த அமைப்பின் களச் செயல்பாடுகளில் நான் முன்னணியில் இருந்தேன். இந்த ஆர்வம்தான், பின்னாளில் கடல் ஆமைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய என்னைத் தூண்டியது.
கடல் ஆமை பாதுகாப்பு மாணவர் அமைப்பில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் காலாகாலத்துக்கும் அழியாதவை. நான் பார்த்த முதல் கடல் ஆமை, முதல் கடல் ஆமை குஞ்சு, கடல் ஆமை முட்டையிட்ட குழிகளில் ஒவ்வொரு முறை மண்ணுக்குள் கையை விட்டுத் தேடும்போதும், கையில் கதகதப்பான முட்டைகள் தட்டுப்படும் தருணத்தில் மனம் உற்சாகத்தில் மிதக்கும்" என்கிறார் கார்த்திக் சங்கர்.
அதன் பிறகு பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் சூழலியல் அறிவியல் மையத்தில் 1998-ல் பிஎச்.டி முடித்தார். நீலகிரியில் உள்ள சிறு பாலூட்டிகள்தான், அந்த ஆராய்ச்சியின் கருப்பொருள். அதற்குப் பிறகு போஸ்ட் டாக்டோரல் ஆய்வுக்காகப் பங்குனி ஆமைகளை ஆராய்ச்சி செய்தபோதுதான், பரிணாம வளர்ச்சி, சூழலியல் மீது அவருக்குத் தீவிர ஆர்வம் பிறந்தது.
பணிகள்
"கடல் ஆமைகள் லட்சக்கணக்கில் சங்கமிக்கும் ஒரிசாவில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணி புரிந்துவருகிறேன். அந்தப் பகுதியில் கடல் ஆமைகள் பெருமளவு இறப்பதைத் தடுப்பதற்குத் தீர்வு காண, பலரும் இணைந்து முயற்சித்துவருகிறோம். பங்குனி ஆமைகளைப் பாதுகாக்கவும், அதேநேரம் உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முயற்சிக்கிறோம். இதற்காகக் கடல் ஆமை செயல்பாட்டு குழு என்ற அமைப்பை உருவாக்கினோம். கடல் ஆமைகளின் தற்போதைய நிலை, அவற்றுக்கு உள்ள ஆபத்துகள், பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பயிற்சி தருவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வேலைகளை அந்த அமைப்பு செய்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் கடல் ஆமைகளைப் பற்றிய தகவல்களை வழங்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி இருக்கிறோம் (www.seaturtlesofindia.org)" என்று தனது தற்போதைய பணிகள் குறித்து விவரிக்கிறார் கார்த்திக்.
தான் படித்த பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் சூழலியல் அறிவியல் மையத்தில் தற்போது துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் கார்த்திக், சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளையின் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் தலைவர். மதிப்புமிக்க ஐ.யு.சி.என்.-எஸ்.எஸ்.சி. கடல் ஆமை நிபுணர் குழு, நீர்நிலவாழ்வி நிபுணர் குழுக்களில் உறுப்பினர், சூழலியல் பாதுகாப்பு சார்ந்த 3 இதழ்களின் ஆசிரியராக இருக்கிறார்.
மக்கள் பங்கேற்பு
"ஆமைகளைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்திருந்தாலும், நான் ஒரு சூழலியலாளர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். எனது மாணவர்கள் தாவரங்கள், முதுகெலும்பற்ற கடல் உயிரினங்கள், மீன்கள், பறவைகள் சார்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரம் ஆராய்ச்சியாளர்களால் மட்டும் எல்லாவற்றையும் பாதுகாத்துவிட முடியாது. நமது இயற்கைவளங்களைக் கூட்டு அதிகாரம் மூலம் கண்காணிக்கவும் புதிதாக உருவாக்கவும் உள்ளூர் மக்கள் பங்கேற்கத் தூண்டும் தக்ஷின் என்ற அறக்கட்டளையை (www.dakshin.org) சக சூழலியலாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளேன்" என்று நிதர்சன நிலைமையை எடுத்துரைக்கிறார்.
நீங்கள் நிபுணராக
சென்னை பாம்புப் பண்ணையும் முதலைப் பண்ணையும் எப்படி முந்தைய தலைமுறை இளைஞர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களாக மாற வழிகாட்டினவோ, அதேபோலக் கடல் ஆமை பாதுகாப்பு மாணவர் அமைப்பும் பலருக்கும் வழிகாட்டி இருக்கிறது. "தொடக்க நிலையிலிருந்து அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவரும் எனக்கு, அந்த அமைப்பின் வளர்ச்சியும், அதன் வீச்சும் ஆச்சரியத்தைத் தருகின்றன.
நீங்களும் ஒரு காட்டுயிர் அல்லது ஊர்வன நிபுணராக வேண்டுமென்று ஆசைப்பட்டால், அதற்கான அடிப்படைத் தேவை முழுக்கமுழுக்கக் கள அனுபவம் தான். அதேநேரம் களத்தில் பணிபுரியும் அமைப்புகளின் செயல்பாடுகளை நீங்கள் புரிந்துகொள்ளச் சூழலியல், பரிணாமவியல் கேள்விகளும் உங்கள் மனதில் உருக்கொள்ள வேண்டும்" என்கிறார் கார்த்திக்.
- கார்த்திக் சங்கர் தொடர்புக்கு: kshanker@gmail.com
ஆமை பாதுகாப்பில் 40 ஆண்டுகள்
சென்னை கடற்கரைக்கு நூற்றுக்கணக்கில் வரும் பங்குனி ஆமைகள், தற்போதும் முட்டையிட்டுச் செல்கின்றன.
இவை ஆண்டுதோறும் டிசம்பர் - மார்ச் மாதக் காலத்தில் முட்டையிடுகின்றன. பங்குனி மாதத்தில் அதிக முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருவதால், இவை பங்குனி ஆமைகள் என்று பெயர் பெற்றன.
இந்த ஆமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1971-ல் இருந்து கடல் ஆமை பாதுகாப்பு மாணவர் அமைப்பு (Students Sea Turtle Conservation Network - SSTCN) செயல்பட்டுவருகிறது. பிரபல ஊர்வன நிபுணர் ரோமுலஸ் விட்டேகர் இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார். கடல் ஆமையைப் பாதுகாக்கும் இந்தத் திட்டம் நாட்டிலேயே முதன்மையானது. நீண்டகாலம் நடைபெற்று வரும் இயற்கை-உயிரினப் பாதுகாப்பு இயக்கங்களில் ஒன்றும்கூட.
திருவண்ணாமலையில் வசிக்கும் ஆசிரியர் அருண், சென்னையைச் சேர்ந்த அகிலா பாலு ஆகியோர் தற்போது ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.
ஆமை முட்டையிடும் பருவக் காலம் முழுவதும், இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் தினசரி ஆமை பாதுகாப்பு நடையை மேற்கொள்கின்றனர். பாதுகாப்பற்ற பகுதிகளில் உள்ள முட்டைகளைச் சேகரித்துப் பொரிப்பகத்தில் வைக்கிறார்கள். சராசரியாக 45 நாட்கள் ஆன பின் குஞ்சு பொரிக்கும். அவற்றைக் கடலில் விடுகிறார்கள்.
இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ள: அகிலா பாலு 99403 00200, அருண் 97898 64166, மின்னஞ்சல்: sstcnchennai@gmail.com
