

கூவம் என்ற ஒற்றை சொல், கன்னியாகுமரியில்கூடக் கொஞ்சம் கெட்ட வாடையோடுதான் நினைவுகூரப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லோரது மனதிலும் 'தமிழகத்தின் மிகப் பெரிய சாக்கடை' என்ற அடையாளத்துடனே கூவம் எட்டி பார்க்கிறது. இந்தியாவின் மிக மோசமாக மாசுபட்ட ஆறு கூவம் என்கின்றன இணையத் தகவல்கள்.
சென்னையிலேயே கூவத்தைப் பற்றி ஓர் இனம் புரியாத வெறுப்பு நிலவுகிறது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஓடும் அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை கூவம் என்றே பலரும் தவறாக நம்புகிறார்கள்.
மூடநம்பிக்கை
இவையெல்லாமே எவ்வளவு பெரிய மூடநம்பிக்கைகள் என்பதைப் புரியவைத்து, கூவத்தின் பல்வேறு பரிமாணங்களை உணர்த்தியுள்ளது அதன் 72 மீட்டர் தொலைவுக்கும் நடைப்பயணம் மேற்கொண்ட கலைஞர்கள் குழு. "கூவம் என்கிற ஆற்றை நோக்கி மக்களை வரவழைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய அடிப்படை நோக்கம்," என்கிறார் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒளிப்படக் கலைஞருமான ப. மாதவன். முன்னதாகக் காந்தி மேற்கொண்ட தண்டி உப்புச் சத்தியாகிரக நடைப்பயணப் பாதையிலும், இதுபோன்ற நடைப்பயணத்தை மேற்கொண்டவர் இவர்.
பரிமாணங்கள்
தண்ணீரே இல்லாத கூவத்தின் மூலநதி, இடையே தண்ணீர் சுழித்து ஓடுமிடம், சென்னைக்குள் நுழையும்வரை ஆறாக இருக்கும் கூவம், சென்னை மண்ணைத் தொட்டவுடன் கழிவுநீர் கால்வாயாகப் பெறும் உருமாற்றம் என எல்லாவற்றையும் இக்குழு பதிவு செய்திருக்கிறது. இந்தப் பயணத்தில் கூவத்தின் பல்வேறு பரிமாணங்களை மிகவும் நெருக்கமாக உணர்ந்துகொண்ட இக்குழு, அந்த அனுபவத்தைக் காட்சி அனுபவமாக வெளியிட இருக்கிறது.
நகரத்தில் எல்லாமே அவசரகதியில் நடந்தேறுகின்றன. எதையோ துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இயல்பாக, பயணத்தின் போக்கில் சென்றிருக்கிறது ஒளிப்படக் கலைஞர்கள், ஆவணப் பட இயக்குநர், கேமராமேன், சமூக ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர் அடங்கிய இந்தக் குழு. கிடைத்ததைச் சாப்பிட்டு, வாய்ப்புள்ள இடத்தில் இளைப்பாறி - உறங்கி, எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டு இந்த நீண்ட பயணத்தை முடித்திருக்கிறார்கள்.
உணர்வுபூர்வமான உறவு
கூவம் என்பது அடிப்படையில் ஒரு ஆறு. வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளில் மிகக் குறுகியதும்கூட. சென்னை மாநகரில் கூவத்துக்கும் மக்களுக்கும் இடையே ஒரு கற்பனைச் சுவர் இருக்கிறது. தீண்டப்படாத இடம் என்ற நம்பிக்கையுடன், அந்தக் கற்பனைச் சுவரைத் தாண்டி பெரும்பாலோர் கூவத்துக்கு வருவதில்லை.
பாரம்பரியமாக நதிக்கும் மனிதக் குலத்துக்குமான உறவு மிகவும் உணர்வுபூர்வமானது. ஆனால், சென்னை மாநகரம் மற்ற விஷயங்களைப் போலவே, கூவத்தை விட்டும் விலகி நிற்கிறது. அதை இந்த நடைப்பயண அனுபவம் மாற்றும் என்கிறார் ‘வாக் அலாங் தி ரிவர்' என்ற பயணத்தை ஒன்பது நாட்களில் நிறைவு செய்த களைப்பு வெளியே தெரியாமல் பேசும் மாதவன்.
இருவித உணர்வு
“கூவத்தை நான் ஒரு நதியாகவே பார்க்கிறேன். ஒரு நதிக்கும் எளிய மனிதர்களுக்கும் உள்ள உறவு ரத்த உறவைப் போன்றது, நீண்ட பாரம்பரியம் கொண்டது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே கூவத்தை நான் பார்க்கிறேன்.
இதற்கு முன் யாரும் கூவம் நதியில் இதுபோல நடந்தது இல்லை என்று சொல்லி வரவேற்று உபசரித்தவர்கள், இலவசமாக டீ கொடுத்த டீக்கடைக்காரர் எனப் பலரைச் சந்தித்தோம். கூவம் பாயத் தொடங்கும் கிராமங்களில், நதியுடன் அப்பகுதி மக்கள் தங்களை உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். அன்புடன் வரவேற்று, தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொண்டார்கள்.
அதேநேரம் ‘இங்கே பக்கத்தில் ஓடுறது கூவம் தானே?' என்று கேட்டால், கோபப்பட்ட மக்களையும் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணம் சீர்கெட்டிருக்கும் கூவம் ஆறும், அதற்குப் பக்கத்தில் வாழ நேர்ந்துவிட்டதே என்ற அவர்களுடைய இயலாமையும்தான்.” என்று ஏற்ற இறக்கம் கொண்ட ஒரு நதியின் போக்கைப் போலச் சொல்கிறார் மாதவன்.
கலவையான அனுபவம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் தொடங்கும் இடத்தில் ஒரு சிற்றணை. அங்கே தண்ணீரே இல்லை. இதுவா ஒரு நதி பிறக்கும் இடம் என்ற ஆச்சரியத்துடன், அங்கே நாலு மணி நேரம் செலவழித்திருக்கிறார்கள். அங்கே சூழ்ந்திருந்த வெறுமை, குழுவினர் மீதும் படர்ந்திருக்கிறது. அதேபோல கிளைநதி மூலம் தண்ணீர் பாய்ந்து ஓடிய இடங்களில் உள்ளூர் குழந்தைகளுடன் குழுவினரும் மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்துக் குளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி இந்தப் பயணம் எல்லாம் கலந்த ஒரு அனுபவமாக இருந்திருக்கிறது.
கொண்டாடப்பட வேண்டும்
"எந்த இடத்தில் கூவம் குப்பையும் கூளமுமாகக் கழிவுகளுடன் காயப்பட்டு, ஊனமடைந்திருந்ததோ, அங்கே எங்கள் பயணமும் எளிமையாக இருக்கவில்லை.
நகரத்தில் கூவம் நதியை ‘சீ, இதெல்லாம் குப்பை, சாக்கடை' என்று நினைக்கும் தன்மை இருக்கிறது. தங்களுக்கும் கூவத்தில் உள்ள குப்பை, கழிவுநீருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல, நகரவாசிகள் நதியிலிருந்து விலகி நின்று பார்க்கும் பார்வை இருக்கிறது.
கூவம் என்ற நதியை மையமாக வைத்து, சர்வதேசக் கலைஞர்களின் பங்களிப்புடன் 2016 ஜனவரி மாதம் ஒரு பெரிய கலை விழாவை நடத்த இருக்கிறோம். அதன் தொடக் கமாகத்தான் இந்த நடைப் பயணத்தை மேற்கொண்டோம்.
கூவத்தின் நிஜ முகத்தை அந்த விழா உலகுக்குச் சொல்லும். கூவம் கொண்டாடப்பட வேண்டிய இடம் என்பது புரியும்", புதிய பார்வையுடன் நிறைவு செய்கிறார் மாதவன்.
கூவம் நடைப்பயணக் குழு
ஒளிப்படக் கலைஞர் ப. மாதவன், சமூக வலைதள டிசைனர் அருண் காந்தி, சமூக ஆராய்ச்சியாளர் சாரா ரம்யா, ஆவணப்பட இயக்குநர் குமரன், எழுத்தாளர் தவ முதல்வன், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சுமித் மஹர், ஒளிப்படக் கலைஞர்கள் அஜித் பதோரியா, கென்ராய் ரோட்ரிக்ஸ், சுரேந்திர சௌராசியா, ஆவணப் படக் குழுவினர் கார்த்திக், புங்கராஜ், அஸ்கர் அலி, சித்தார்த் சக்தி.