Published : 09 May 2020 08:39 am

Updated : 09 May 2020 08:39 am

 

Published : 09 May 2020 08:39 AM
Last Updated : 09 May 2020 08:39 AM

மனித அலட்சியத்துக்கு கரோனா விடுக்கும் எச்சரிக்கை சமிக்ஞை

corona-virus

கார்த்திக் பாலசுப்பிரமணியன்

கரோனா வைரஸின் தீவிரப் பரவ லால் பலரும் சீன மக்களையும், அவர்க ளுடைய உணவுப் பழக்கங்களையும் தூற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் தாக்கும் வைரஸ்களின் உயிரியல் பண்புகளை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சீனாவின் வூகான் மாகாண நோய்த்தொற்றுப் பரவல் என்பது ஆயிரம் பிரச்சினைகளைக் கொண்ட ஒரு பெட்டியில் இருந்து, வெளியே தெரிய வந்துள்ள ஒரேயொரு பிரச்சினை மட்டுமே. இங்கு நாம் நினைவில்கொள்ள வேண்டியது, பெட்டி தானாகத் திறக்கவில்லை, பெட்டியைத் திறந்தது மனிதர்களான நாம்தான்!

விலங்குவழி நோய்தொற்று மனிதர்களுக்குப் புதிதல்ல! மனிதர்களுக்குத் தொற்றும் வைரஸ் நோய்களில் மூன்றில் இரண்டு பங்குத் தொற்று விலங்குகளிடம் இருந்து வருபவையே. விலங்குவழி நோய்த்தொற்றுகளில் (Zoonotic Disease) மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவையாக 1,415 நோய்க்கிருமிகள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் 62 சதவீதம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றை உண்டாக்கக்கூடியவை. இதில் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் என நுண்ணுயிர்களின் அனைத்துப் பிரிவுகளும் அடங்கும்.

இது போன்ற நோய்தொற்றுகளைப் பற்றி பல வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பழைய ஏற்பாட்டில் கொள்ளைநோய்ப் பரவலை பற்றிக் குறிப்புகள் உள்ளன. பொ.ஆ. (கி.பி.) பதினான்காம் நூற்றாண்டில் பரவிய 'கருப்புச் சாவு'-பிளேக் (Black Death) என்னும் கொள்ளைநோய் ஆசியாவில் தோன்றி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. இதுபோல் பல நோய்கள் மனிதர்களைத் தொற்றியுள்ளன. எய்ட்ஸ் (குரங்கினத்திடமிருந்து தொற்றியது), மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி-மெர்ஸ் (ஓட்டகத்திடமிருந்து தொற்றியது), நிபா (வௌவால்களிடமிருந்து தொற்றியது), தீவிர சுவாச நோய்க்குறி-சார்ஸ் (வௌவால்கள், மரநாய்களிடமிருந்து தொற்றியது), இசீக்கா (குரங்கினத்திடமிருந்து தொற்றியது), எபோலா (வௌவால்கள், காட்டுவிலங்குகளிடமிருந்து தொற்றியது).

மேற்கண்ட நோய்கள் அனைத்தும் விலங்குகள் மூலம் மனிதர்களுக்குத் தொற்றியிருந்தாலும், அந்த விலங்குகளிடமும் அவற்றின் சுற்றுப்புறத்தையும் நெருங்கிச் சென்றது என்னவோ மனிதர்கள்தான், அவையல்ல. எடுத்துக்காட்டாக வங்கதேசத்தில் ஏற்பட்ட நிபா வைரஸ் தொற்றுக்கு வெளவால்களின் எச்சம் பேரிச்சை மரத்தில் கட்டப்பட்டிருந்த கள் பானைகளில் சேர்ந்ததே காரணம். இந்த மரங்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வெளவால்கள் வந்து செல்கின்றன, வாழ்கின்றன. ஆனால், மனிதர்களான நாம் சில நூறு ஆண்டுகளாகத்தான் இந்த மரங்களிலிருந்து கள் எடுப்பதைக் கண்டறிந்து, வெளவால்களின் உணவு தேடுமிடம் - உறைவிடத்தில் புகுந்து அவற்றின் உணவை முதலில் பறித்துக்கொள்கிறோம். பிறகு வெளவால்களையே நோய்க்குக் காரணமாகக் குறைகூறுகிறோம்.

விநோதப் பரிணாமவளர்ச்சி

உலகெங்கும் வெளவால்கள் 130 வகையான வைரஸ்களுக்கு இடமளிக்கும் ஓம்புயிரிகளாக (hosts) உள்ளன. வெளவால்களை மட்டுமல்லாமல் பல விலங்குகளின் உடல்களில் வைரஸ்கள் இருந்தாலும், வெளவால்களிடம்தான் மிக அதிக வைரஸ் வகைகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த வைரஸ்களும் வெளவால்களும் சேர்ந்தே இணைவாழ் பரிணாம வளர்ச்சியை (Coevolution) அடைந்திருக்கலாம். பரிணாம வளர்ச்சியில் வெளவால்கள் ஒரு புதிரான விலங்கு. பாலூட்டிகளிலேயெ பறக்கும் தன்மைகொண்டது இது மட்டும்தான். அத்துடன் நோய்தாக்கும் வைரஸ்களை தன்னுடலில் கொண்டிருந்தாலும், அந்த கிருமிகள் ஓம்புயிரியின் மீது எந்த நோய்தாக்கத்தையும் ஏற்படுத்தாதவண்ணம் வெளவால்கள் பரிணாமவளர்ச்சி பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டாக, வெளவால்கள் பறக்கும்போது அவற்றின் உடலின் தட்பவெப்ப நிலை அதிகளவில் மாறுபடுகிறது. இதனால் வைரஸ் அவற்றை பாதிப்பதில்லை என்றும், இந்த வைரஸ்கள் தாக்காதவாறு வெளவால்களின் நோய் எதிர்ப்பாற்றல் தடுக்கிறது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இத்தகைய பண்புகளால் வெளவால்கள் நோய்த்தொற்றுகளின் தேக்கிகளாக மட்டுமே உள்ளன. ஆனால், அசாதாரண சூழ்நிலையில் இந்த வைரஸ்கள் தாங்கள் வாழும் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்துக்குத் தொற்றுகின்றன. இது வழிந்தோடும் தொற்று (Spillover infection) எனப்படுகிறது.

இது போன்ற நோய்த்தொற்றுகள் தீவிரமடைந்த தற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது: (1) ஓம்புயிரிகள் எவ்வாறு பரவியிருக்கின்றன, (2) ஓம்புயிரிகளின் அடர்த்தி, (3) நோய்கிருமியின் அடர்த்தி, (4) புதிய ஓம்புயிரின் நோய் எதிர்ப்பாற்றல், (5) புதிய ஓம்புயிரியின் மேல் நோயை ஏற்படுத்தத்தக்க தட்பவெப்ப நிலை என்று பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்த காரணங்கள் அனைத்தும் ஒன்றுசேரும் நிலையில்தான், தற்போது ஏற்பட்டுள்ள நாவல் கரோனா வைரஸ் போன்ற ஒரு கொள்ளைநோய் பரவுகிறது.

இந்த வைரஸும் வௌவால்களிடமிருந்து மரநாய்களுக்குச் சென்று, அவற்றிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பி உண்ணப்படும் இறைச்சிகளில் ஒன்று மரநாய். வூகான் நகரத்தின் இறைச்சிச் சந்தையில் வெளவால்களும் மரநாய்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் ஓர் விலங்கிடமிருந்து மற்றொரு விலங்குக்கு நோய் தொற்றி, பின் அதன் வழியாக மனிதர்களை வந்தடைந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். அதேநேரம் இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

அலங்கு

பொருளாதார வளர்ச்சி தந்த பலன்

கரோனா போன்ற விலங்குவழி நோய்த்தொற்று பரவ முதன்மைக் காரணம், பொருளாரதார வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழித்து மனிதப் பயன்பாட்டுக்காக மாற்றிவருவதுதான். காடுகளிடையே சாலைகளையும் ரயில் பாதைகளையும் அமைத்துக் காடுகளைத் துண்டாடிவருகிறோம். அத்துடன் சட்டத்துக்குப் புறம்பாக பல காட்டுயிர்கள் இறைச்சிக்காக, வளர்ப்புப் பிராணி சந்தைக்காகப் பிடிக்கப்படுகின்றன, வேட்டையாடப்படுகின்றன. மேற்கூறிய காரணங்கள் மனிதனுக்கும் காட்டுயிர்களுக்குமான இடைவெளியை குறைத்துக்கொண்டே போகிறது. குறையும் இந்த இடைவெளி காட்டுயிர்களிடமிருந்து மனிதனுக்கு பல கிருமிகள் தொற்ற வழிவகுக்கிறது. இப்படித் தொற்றும் கிருமிகளில் சில உயிர்கொல்லிகளாக உருவெடுக்கின்றன.

அதிவேகமாக வளர்ந்துவரும் மக்கள்தொகை காரணமாக மனிதர்கள் இயற்கையையும் காடுகளையும் அழித்துக்கொண்டே வருகிறார்கள். இப்படிக் காடுகளை அழித்து வேளாண் நிலங்களாக உருமாற்றி வருவதால், அந்த காடுகளில் வாழும் காட்டுயிர்கள் வாழிடத்தை இழக்கின்றன. வௌவால் போன்ற எளிதில் இடம்பெயரக்கூடிய காட்டுயிர்கள் மரங்கள், குகைகள் போன்ற வாழிடங்களை இழந்து, திருத்தப்பட்ட புதிய நிலப்பகுதிகளில் வாழத்தொடங்குகின்றன. இதனால் காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு குறைகிறது, நோய்த்தொற்றுகளும் பெருகுகின்றன. காடுகளை ஒட்டிய பகுதிகளில் மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகள் இந்த இடைவெளியை கணிசமாகக் குறைத்து, நோய்த்தொற்று வேகமாகப் பரவ வழிவகுக்கின்றன.

நம் கையில்தான் உள்ளது

மலேசியாவில் 1998-ல் ஏற்பட்ட நிபா வைரஸ் தொற்று, மேற்கண்ட நிகழ்வுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. காட்டை அழித்து உருவாக்கப்பட்ட விளைநிலத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழுவத்தில் வாழ்ந்த வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்கு நோய்தொற்று பரவியது. பிறகு, தொழுவத்தில் வேலைசெய்பவருக்குப் பரவியது. 1998-99-களில் எற்பட்ட இந்த நோய்ப் பரவலில் 100-க்கும் மேற்பட்டபவர்கள் பலியானார்கள். இந்த இடத்தில் நூறு உயிர்கள் பலியாகக் காரணம் வௌவால்களா, காடுகளை அழித்த மனிதர்களா? நோய்த்தொற்று பரவ மனிதர்களே திட்டவட்டமான காரணமாக இருந்தும்கூட, வௌவால்கள் மீது செளகரியமாக பழியை சுமத்திவிடுகிறோம். இதைப் போன்ற நோய்கள் மனிதர்களை மட்டும் குறிவைத்துத் தாக்குவது இல்லை. பறவைகளும் பல காட்டுயிர்களும் இது போன்ற கொள்ளைநோய்களால் தாக்கப்பட்டு கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றன. மனிதர்களை மட்டுமே மையமாகக் கொண்ட சுயநலம் மிகுந்த நம் கண்களுக்கு, இதெல்லாம் பொருட்டாகத் தெரிவதில்லை.

வௌவால்களின் மீது ஆயிரக்கணக்கான வைரஸ் வகைகள் வாழ்ந்துகொண்டுள்ளன. இன்றுவரை வெறும் ஏழு வைரஸ் வகைகளால் ஏற்பட்டிருக்கும் நோய்களை மட்டுமே நாம் பார்த்துள்ளோம். எஞ்சியுள்ள வைரஸ் வகைகளால் ஏற்படும் நோய்களைப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் மனிதர்களான நம் கையில்தான் உள்ளது.

கட்டுரையாளர், புனே அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: diatomist@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


மனித அலட்சியம்கரோனாசமிக்ஞைஎச்சரிக்கைகொரோனாபரிணாமவளர்ச்சிவெளவால்பொருளாதார வளர்ச்சிவரலாற்றுக் குறிப்புகள்Corona virusCoronaCovid19விலங்குவழி நோய்த்தொற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author