Published : 21 Mar 2020 11:02 am

Updated : 21 Mar 2020 11:02 am

 

Published : 21 Mar 2020 11:02 AM
Last Updated : 21 Mar 2020 11:02 AM

சிட்டுக்குருவிக்கு உருகுகிறோம்; கானமயிலைத் தொலைத்துவிட்டோம்!

sparrow

ஆதி வள்ளியப்பன்

‘நம்மைச் சுற்றிப் பறந்து திரிந்த சிட்டுக்குருவியொன்று, இப்படி அநியாயமாகக் காணாமல் போய்விட்டதே…’ என்ற பரிவுணர்வுடன் தொடங்கி ‘சிட்டுக்குருவியைக் காப்போம், பூமியை மீட்போம்’ என்ற பிரகடனத்துடன் முடிகிறது அந்தப் பதிவு.


மார்ச் 20. உங்களில் பறவை ஆர்வலர்கள் சிலரும், இயற்கை ஆர்வலர்கள் சிலரும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ‘சிட்டுக்குருவிகள் நாளு’க்காக மேற்கண்டது போன்ற ஒரு செய்தியை அல்லது படத்தை உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருக்கலாம்.

நம்மில் பலரும் வருத்தப் படுவதுபோல் சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டனவா?

இல்லவேயில்லை என்கிறது சமீபத்தில் வெளியான ‘இந்தியப் பறவைகளின் நிலை, 2020’ (https://www.stateofindiasbirds.in/) என்ற நாடு தழுவிய அறிவியல்பூர்வ அறிக்கை. பொதுமக்களும் பறவை ஆர்வலர்களும், மக்கள் அறிவியல் முறையில் சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் இந்தியப் பறவைகளின் நிலை குறித்துத் தொகுக்கப்பட்ட முதல் அறிக்கை இது. சில நகர்ப் பகுதிகளில் எண்ணிக்கை குறைந்திருக்கலாமே ஒழிய, கடந்த 25 ஆண்டுகளாகச் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் பெரிதாகச் சரிவில்லை என்பதே அறிவியல் ஆராய்ச்சிகள் முன்வைக்கும் உண்மை.

ஆனால், நாம் என்ன நம்பிக்கொண்டிருக்கிறோம்? ‘சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன. அதற்கு செல்போன் கோபுரங்கள்தாம் காரணம்’ என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறோம். ஆனால், அதேநேரம் கானமயில் அல்லது கானல்மயில் (Great Indian Bustard) என்ற பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா?

புகழ்பெற்ற பறவை

ஔவையார் பாடிச் சென்றாரே ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்று, அந்தக் கானமயில் பறவை ஒரு காலத்தில் தமிழகத்திலும் வாழ்ந்தது. 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மூதுரையில் மேற்கண்ட வரி இடம்பெற்றிருக்கிறது. ஆனால், 20-ம் நூற்றாண்டுக்குள் கானமயிலைத் தொலைத்துவிட்டோம். இன்றைக்குத் தென்னிந்தியாவில் அந்தப் பறவை அருகிப்போனதற்கு, இயற்கைப் புல்வெளிப் பகுதிகள் துடைத்தழிக்கப்பட்டதுதான் முதன்மைக் காரணம்.

இந்தியாவின் தேசியப் பறவையாகப் பரிந்துரைக்கப்பட்ட பறவை கானமயில். அப்போது அதிக எண்ணிக்கையில் இல்லாதிருந்தபோதும், இந்தியாவுக்கே உரிய பறவை என்பதால் கவனம் பெற்றிருந்தது. அதேநேரம் மயில் பிரபலமாக இருந்ததன் காரணமாகவும், Bustard என்ற பெயர் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட வாய்ப்பு இருந்ததன் காரணமாகவும், கானமயில் அந்த அந்தஸ்தை இழந்தது. இன்றைக்கோ அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

புல்வெளியும் எடையும்

நீண்ட வெள்ளைக் கழுத்து, பழுப்பு நிற உடலைக் கொண்ட இந்தப் பறவை புல்வெளிகளிலும் புதர்க்காடுகளிலும் வாழக்கூடியது. பறக்கக்கூடிய பறவைகளில் உலகிலேயே எடை மிகுந்தது இந்தப் பறவை. கானமயில் ஆண் பறவைகள் 15 கிலோ எடைவரை வளரக்கூடியவை.

1972-ல் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்வரை இந்தப் பறவை அதிகம் வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்தது. வேட்டையே இதன் அழிவுக்கு முக்கியக் காரணம். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை 1,500-2,000 கானமயில்கள் இந்தியாவின் 11 மாநிலங்களில் இருந்தன.

என்ன காரணம்?

கடந்த 30 ஆண்டுகளில் 75 சதவீதக் கானமயில்கள் அழிந்துவிட்டன. குஜராத், ராஜஸ்தான் திறந்தவெளிப் பகுதிகளில் அமைக்கப்பட்ட உயரழுத்த மின் கம்பிகளே இந்தப் பறவைகளின் சமீபத்திய அழிவுக்கு முதன்மைக் காரணம். பல பறவை வகைகளால் தொலைவிலிருக்கும் மெல்லிய கோடு போன்ற மின்கம்பிகளைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் போவதால், அவற்றில் சிக்கி இறக்கின்றன.

நாடு முழுவதும் நீர்மின் திட்டங்கள் பரவலானதால், கானமயில் வாழ்ந்த புல்வெளிகள் பெருமளவு அழிக்கப்பட்டன.

அத்துடன், இந்தப் பறவை தரையில் முட்டையிடுவதால் தெருநாய் போன்றவை இவற்றின் முட்டைகளை உண்டுவிடுகின்றன. இந்த அம்சங்கள் காரணமாகச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அதிக ஆபத்தைச் சந்திக்கும் 100 உயிரினங்கள் பட்டியலில் கானமயில் சேர்க்கப்பட்டது.

தத்தளிக்கும் பறவை

நம் வாழ்நாளில் நம் கண் முன்னாலேயே ஒரு பறவை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கதைதான், கானமயில்களின் கதை. இன்றைக்கு இந்த உலகத்தில் எப்படியாவது தப்பிப் பிழைத்துவிட மனிதர்களின் உதவியை எதிர்பார்த்து இந்த அரிய பறவை பரிதவித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு வெறும் 150 கானமயில்களே நாட்டில் எஞ்சியிருக்கின்றன. மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் அவை வாழ்கின்றன. பெரும்பாலான கானமயில்கள் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் வசிக்கின்றன.

முயற்சி கைகூடுமா?

இந்தப் பின்னணியில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள ‘பாலைவனத் தேசியப் பூங்கா’வில் கானமயில்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, இங்கு ஓர் அடைப்பிட இனப்பெருக்கக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய காட்டுயிர் நிறுவனம், ராஜஸ்தான் மாநில அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அபுதாபியின் ‘சர்வதேச ஹூபரா பாதுகாப்பு நிதி’ ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த அடைப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 9 முட்டைகள் இங்கு பொரிந்திருக்கின்றன. இதுபோல 30 முட்டைகள் பொரிந்தவுடன் கானமயில் குஞ்சுகளைக் கவனமாக வளர்த்தெடுத்து, அவற்றின் வாழிடங்களில் மீண்டும் கொண்டுவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல் அடைப்பிடத்தில் வைத்து அரிய உயிரினங்களைக் காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஓர் உயிரினம் பூண்டோடு அழிந்துபோவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறை உலகெங்கும் உண்டு. கானமயிலைக் காக்கும் இந்த முயற்சி அவசியமானது என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரம், அடைப்பிடத்தில் வளர்க்கப்படும் கானமயில் குஞ்சுகள், வளர்ந்த பிறகு வாழ்வதற்கு இயற்கைப் புல்வெளிகள் அவசியம். அந்த வாழிடங்களைத் தக்கவைக்கவோ/மீளமைக்கவோ இல்லையென்றால், கானமயிலைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சிகளும் எதிர்காலத்தில் அர்த்தமற்றே போகும். புல்வெளிகளைக் காப்பாற்றுவதற்கு அரசிடம் பல திட்டங்கள் இருந்தாலும், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் சரியாக இல்லையென்றால் கானமயில்கள் உலகை விட்டு அடியோடு அழிவதை தடுத்துநிறுத்த முடியாது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


சிட்டுக்குருவிகானமயில்Sparrowஇந்தியப் பறவைகள்புகழ்பெற்ற பறவைபுல்வெளிதத்தளிக்கும் பறவைஅரிய உயிரினங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x