Published : 07 Mar 2020 10:29 AM
Last Updated : 07 Mar 2020 10:29 AM

பசுமை எனது வாழ்வுரிமை 22: விதை சத்தியாகிரகப் போராட்டங்கள்

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

நவதான்யா என்ற சொல்லின் பொருள் ஒன்பது வகை தானிய விதைகள் என்பதாகும். இந்தச் சொல் உயிரிய - பண்பாட்டுப் பன்மை நிலைக்கான (Diversity) மறைமுகமாகக் குறியீடாகிறது.

நவதான்யா என்ற பெயரைத் தாங்கியுள்ள, இந்தியாவில் அமைந்துள்ள, அரசு சாரா நிறுவனத்தின் (NGO) முக்கியக் குறிக்கோள்கள் உயிர்ப் பன்மையையும் (Biodiversity) இயற்கையையும் பாதுகாத்துப் பேணுதல், கரிம வேளாண்மையை (Organic farming) ஊக்குவித்தல், உழவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல். இவையனைத்தையும்விட முக்கியமாக விதை சேமிப்பு, பரிமாற்றம், பேணுதல் போன்றவை.

இந்தியா முழுவதும் பரவியுள்ள விதைப் பாதுகாவலர்கள் - கரிம உணவுப் பொருள் உற்பத்தியாளர்களின் வலையமைப்பை நவதான்யா உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இதுவரை 111 சமுதாய விதை வங்கிகளை இந்தியா முழுவதும் உருவாக்க உதவியுள்ளது, 5,00,000-க்கும் அதிகமான உழவர்களுக்கு விதை - உணவு உரிமைகளிலும், முறைப்படுத்தப்பட்ட (Sustainable) வேளாண்மையிலும் பயிற்சி அளித்துள்ளது. இவற்றைத் தவிர கரிம-வேளாண் பொருட்களின் நியாயமான வணிக வலையமைப்பையும், நேரடி சந்தைப்படுத்துதலையும் (Marketing) உருவாக்கியுள்ளது.

ஒத்துழையாமைப் போராட்டம்

நவதான்யாவின் விதை சத்தியாகிரகப் போராட்டங்கள் 1992 பிப்ரவரியில் தொடங்கின. அப்போது இந்த அமைப்பு GATT (General Agreement on Tariffs and Trade – வணிக - சுங்கக் கட்டணங்கள் தொடர்பான பொது உடன்பாடு) - வேளாண்மை பற்றிய ஒரு தேசிய மாநாட்டைக் கர்நாடகத்தின் கர்நாடக ராஜ்ய உழவர்கள் சங்கம் (Rajya Ryota Sangha - KRRS) என்ற அமைப்போடு இணைந்து நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹோஸ்பேட்டில் உழவர்கள் பங்கேற்ற பெரிய ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன.

இந்தப் போராட்டத்தின்போது நியாயமற்ற, அறிவு-சார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights, IPR), விதைக் காப்புரிமைகள் போன்றவை உழவர்களுக்கு எதிரானவை என்றும், இந்திய மரபு வேளாண்மையை இவை பெரிதும் பாதிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டம் உண்மையை வலியுறுத்தி காந்திய வழியில் - நியாயமற்ற விஷயங்களுக்கு எதிரான ஒரு ஒத்துழையாமைப் போராட்டமாக நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து இதே கருத்துகளை வலியுறுத்தி மார்ச் 1993-ல் ஒரு ஊர்வலமும் போராட்டமும் டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில்

நவதான்யா இயக்கத்தின் சார்பிலும், பாரதீய கிசான் யூனியன் சார்பிலும் நடைபெற்றது. பிறகு 1993 அக்டோபரில் விதை சத்தியாகிரகத்தின் (பிஜா சத்தியாகிரகா) ஓராண்டு நிறைவு விழா பெங்களூருவின் கப்பன் பூங்கா பகுதியில் நடைபெற்றது; இதில் 5,00,000 உழவர்களும் (இவர்களில் சிலர் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள்), உழவர்களின் உரிமை சார்ந்தும் முறைப்படுத்தப்பட்ட வேளாண்மையிலும் ஈடுபட்டிருந்த அறிவியல் அறிஞர்களும் பங்கேற்றனர்.

நவதான்யா அமைப்பு அதனுடைய வலையமைப்பான 'Diverse Women for Diversity' என்ற அமைப்புடனும், அதனுடைய பன்னாட்டுக் கூட்டமைப்பான 'International Forum on Globalization' என்பதனுடனும் இணைந்து நவம்பர் 30, 1999-ல் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தக நிறுவன எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு விதை சத்தியாகிரகத்தை வலியுறுத்தியது.

(தொடரும்)

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x