

‘கனவு காணுங்கள். அது தூக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது, அது உங்களைத் தூங்கவிடாமல் செய்யும் கனவாக இருக்க வேண்டும்' என்று வளரும் தலைமுறையின் லட்சியத்துக்கு இலக்கணத்தை வகுத்துக்கொடுத்தவர் அப்துல் கலாம். வளர்ச்சியையே தனது கனவாக வைத்துக்கொண்டிருந்தவர்.
பசுமைச் சிந்தனையாளர்களால் அவருடைய வளர்ச்சிக் கொள்கை விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், வளர்ச்சி பற்றிய அவருடைய பார்வை, அவருடைய இறுதிக் காலத்தில் ‘நிலைபெறு வளர்ச்சி'யை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீர் வளம் பெருக்குவோம்
பொதுவாக ஆயுதங்களின் அபிமானியாக அவர் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அரியலூர் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற இயற்கைவழி வேளாண்மைக் கருத்தரங்கில் உரையாற்றினார். இன்றைய ‘வளர்ச்சி' நாயகர்கள் கருத்தில்கொள்ள வேண்டிய உரை அது. அவர் ஆற்றிய கொள்கை சார்ந்த உரைகளில், இதுவே இறுதி உரை என்று கருதுகிறேன். கடந்த ஜூலை 17 அன்று, நிலைபெறு வளர்ச்சி பற்றி உரையாற்றிய பத்து நாட்களுக்குப் பிறகு. நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
அன்றைய தினம் முற்போக்கு இயற்கைவழி உழவர்களுக்கு விருது அளித்து உரையாற்றினார். அவருடைய உரையில் தண்ணீரைப் பாதுகாப்பதன் மூலம், உழவர்களுக்குப் பெரும் உதவி புரிய முடியும் என்ற கருத்து அழுத்தம் பெற்றிருந்தது. குறிப்பாக நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற 40,000 ஏரி, குளங்களைக் காத்து, நீர் வளத்தைப் பெருக்க வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்தினார்.
நீடித்த வேளாண்மை
இயற்கை வழி வேளாண்மையை வெகுவாகப் பாராட்டிவிட்டு, ஆராய்ச்சி அடிப்படையில் மாணவர்களுக்கும் அதைக் கற்றுத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வேளாண்மையே நாட்டின் அடிக்கட்டுமானம் என்றும், அது நீடித்து நிலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இயற்கைவழி வேளாண்மையை நீடித்த வேளாண்மை என்று குறிப்பிட்டதுடன், இதை இரண்டாம் பசுமைப் புரட்சி என்றும் அவர் குறிப்பிடுகிறார். பசுமைப் புரட்சி என்றாலே அச்சப்படும் உழவர்களுக்கு இந்தச் சொல்லாடல் அச்சமூட்டுவதாக இருந்தாலும், அதிலுள்ள நுட்பமான நீடித்த வளர்ச்சிக்கான ஊன்றுகோலைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இயற்கை வேளாண்மையில் ரசாயனங்களின் தீமைகளை நீக்க வேண்டும் என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
உழவர்களை வளர்ப்போம்!
அது மட்டுமல்லாமல் எதையும் தெளிவாகக் குறிப்பிடும் பாங்கைக் கொண்ட கலாம் விதை, உரத்தைப் பற்றி பேசும்போது, மரபீனி மாற்ற விதைகளைக் குறிப்பிடவில்லை. ஏனென்றால், நீடித்த வேளாண்மைக்கு அது மிகப் பெரிய அழிவை உண்டாக்கும் என்பதை அறிந்து, அதை அவர் பரிந்துரைக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சூழலியலை அழிக்காத வளர்ச்சி வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
இதுவரை வந்த வேளாண் கொள்கைகள் யாவும், வேளாண்மையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்தவை. உழவர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் வரவில்லை. உழவர்களை வளர்க்க வேண்டுமென கலாம் வலியுறுத்துகிறார்.
‘விவசாயப் பெருமக்களே நீங்கள் வளம் பெற்று வாழ்ந்தால்தான், இந்த நாடு வளம் பெறும். எனவே உங்கள் வளத்துக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று, பெருவாழ்வு பெற உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்' என்று தனது கடைசி உரையை முடித்தார். அப்படியே பூதவுடலிலிருந்தும் விடைபெற்றுக்கொண்டார்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com