Published : 29 Feb 2020 10:58 am

Updated : 29 Feb 2020 10:58 am

 

Published : 29 Feb 2020 10:58 AM
Last Updated : 29 Feb 2020 10:58 AM

மண் புழு உரத்தால் மகுடம் சூடிய மனோன்மணி!

soil-worm-compost

பொ.ஜெயச்சந்திரன்

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவை அங்ககக் கழிவுகளை மட்கவைத்து பயிர்களுக்கு உரமாக்குகின்றன. இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், நோய்க் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்தும் விடுகின்றன.

மண்புழுக்களைச் சுற்றுப்புறச் சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில், அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றியமைக்கின்றன. மற்ற மட்கு உரங்களைவிட மண்புழு உரத்தில் சத்து அதிகம். மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா ஆகியவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.

சிறப்பு மிக்க மண்புழு உரத்தைத் தயார்செய்து பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் விற்றுத் தொழில் முனைவோராக விளங்கிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார் செ.மனோன்மணி.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குபட்ட வடகாடு அருகே உள்ள பள்ளத்திவிடுதிதான் இவரது ஊர். பல தலைமுறைகளாகவே விவசாயம்தான் இவரது குடும்பத் தொழில். “ஆரம்பத்தில் விவசாய வேலைகளில் கணவருக்கு உதவியாக இருந்தேன். திடீரென்று என் கணவர் இறந்து விட்டதால் முழுக் குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. முழுக்க விவசயாத்தை மட்டுமே நம்பி இருந்தேன்.

ஆனால், வருமானம் குறைந்த அளவு மட்டுமே கிடைத்தது. வருமானத்தை அதிகப்படுத்த விவசாயத் தொழில்நுட்பம் பற்றி அருகில் உள்ள உழவர்களிடம் கேட்டறிந்து சாகுபடி செய்தேன். பெரிதாக லாபம் எதுவும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரளவு குடும்பத்தை நடத்தப் பணம் கிடைத்தாலும், விவசாயச் செலவுகளுக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சரியான மழை பெய்யாமல் சாகுபடி இல்லாமல் போகும்போது, குடும்பத்தை நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கும்.

சில நேரம் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மூலமாகப் பல்வேறு பயிற்சிகளை எங்களுடைய ஊரில் நடத்தினார்கள். அதன் மூலமாக அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். 2000-ம்ஆண்டுக்குப் பிறகு வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடக்கும் அனைத்து விவசாயிகள் கருத்தரங்கு, பயிற்சிகளில் கலந்து கொண்டு அவர்களுடைய தெளிவான அறிவுரைகளைப் பெற்றேன். பயிர்கள் தொடர்பான நேரடிப் பயிற்சிளைக் கற்றுக் கொடுத்தார்கள்.

எவ்வளவு உரம் இட வேண்டும், எந்த மாதிரி பயிர் இடைவெளி விடவேண்டும் போன்றவற்றைக் களப்பயிற்சி வழி சொல்லிக் கொடுத்தனர். சாகுபடி தொடர்பாக எந்தச் சந்தேகம் இருந்தாலும் நிலையத்துக்குத் தொலைபேசினால் தீர்த்து வைப்பார்கள். அதற்கு மேலும் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றாலும் நேரடியாக என்னுடைய வயலுக்கு வந்து விளைச்சல் அதிகரிக்க ஏற்பாடு செய்வார்கள்” எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் மனோன்மணி.

இந்தப் பயிற்சிகளின் மூலம் மண்புழுவுரம் தயாரிப்பு பற்றி அவருக்குத் தெரியவந்திருக்கிறது. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவருக்கு வந்திருக்கிறது. இதற்காக அங்கே உள்ள பண்ணையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்கள் மு.ரா.லதா, பயிற்சியாளர் கே.சி.சிவபாலன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் கிராம வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் பள்ளத்திவிடுதி கிராமத்தைத் தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அவர்கள்தான் மனோன்மணியை மண்புழு உரத்தை விற்பனைசெய்ய ஊக்குவித்துள்ளனர். அத்துடன் விட்டுவிடாமல் மனோன்மணிக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அறிவியல் நிலையத்தில் வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்புக் கூட்டத்தை ஒருங்கிணைத்துத் தந்திருக்கிறார்கள்.

“மண்புழு உரம் தயாரித்து முதலில் எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்களுக்குக் கொடுத்தேன். கொஞ்ச, கொஞ்சமாக விஷயம் தெரிந்து தேவைப்படுகிறவர்கள் தொலைபேசி மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் கேட்டார்கள். மண் புழு விற்பனை மூலமாக எனக்கு உபரி வருமானம் கிடைக்கிறது” என்கிறார் மனோன்மணி.

1 டன் (1000 கிலோ) மண்புழு தயாரிக்க, மண்புழு படுக்கை - 1,400 ரூபாய், உயிர் மண்புழு - 200 ரூபாய், சலிக்கவும், பாக்கெட் போடவும் ஊதியம் - ரூ. 300. ஆக மொத்தம் ரூ.1900 மட்டுமே செலவாகிறது. ஆனால் 1 டன்னை ரூ. 7,000 முதல் ரூ. 8,000 ஆயிரம் வரை விற்க வாய்ப்புள்ளது என மனோன்மணி தெரிவிக்கிறார்.

தெலங்கானா சமூக தன்னார்வுத் தொண்டு நிறுவனத்தின் சிறந்த இயற்கைப் பெண் விவசாயி விருது, தொழில்முனைவோருக்கான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, டாடா நிறுவன விருது, வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சிறந்த பண்ணை அறிவியல் அமைப்பாளர் விருது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த விதை உற்பத்தியாளர் விருது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வெற்றிப் பெண்மணி விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

மனோன்மணி தொடர்புக்கு: 9943900325

மண் புழுSoil worm compostஉரம்மனோன்மணிசுற்றுப்புறச் சூழல்விவசாயத் தொழில்நுட்பம்விவசாயம்பயிற்சிகள்அறிவியல் நிலையம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author