

இந்திய அளவில் கோழி வளர்ப்பில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கோழிகளின் எண்ணிக்கை 12.08 கோடியாக அதிகரித்துள்ளது. 2012 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 11.73 கோடியாக இருந்தது.
இதற்கு அடுத்த படியாக ஆந்திரப்பிரதேசம் 10.79 கோடியுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த தெலங்கானா 8 கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் மொத்த கோழிகளின் எண்ணிக்கை 85.18 கோடியாக உள்ளது. 2012-ல் கணக்கெடுப்புக்குப் பின், கடந்த ஆண்டுதான் கால்நடைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீங்குகிறது
கடந்த சில மாதங்களுக்குமுன் இந்திய அளவில் வெங்காயத்துக்குத் தீவிரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இந்திய வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதியும் செய்யப்பட்டது.
இப்போது வெங்காயத் தட்டுப்பாடு நீங்கி விலையும் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கெளபா ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 28.4 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தியானது. மாா்ச் மாதத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வெங்காயம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப் படுவதாக மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார். இது தொடர்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிடும். அதைத் தொடர்ந்து வெங்காய ஏற்றுமதிக்கான அனுமதி அமலுக்கு வரும்.