

அபி
குழந்தைகளின் உடல்நலம், சுற்றுச்சூழல், எதிர்காலம் ஆகியவற்றுக்கு உலகில் உள்ள நாடுகளில் ஒன்றுகூடி அடிப்படைப் பாதுகாப்பை வழங்கவில்லை என்று குழந்தைகள் - வளரிளம் பருவத்தினருக்கான உடல்நல நிபுணர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பணக்கார நாடுகளின் வரம்பற்ற கரியமில வாயு வெளியேற்றம் உலகிலுள்ள குழந்தைகளின் உடல்நலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. என்றாலும், ஏழை நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சுகாதார-வாழ்க்கைச் சூழலை இன்னும் மேம்பட்ட வகையில் வழங்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம், யுனிசெஃப், லான்செட் மருத்துவ ஆய்விதழ் ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் - வளரிளம் பருவத்தினரின் உடல்நலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழல் அந்த வளர்ச்சியைத் தடுத்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் என்று அஞ்சப்படுகிறது. மிகக் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வாழும் ஐந்து வயதுக்குக் குறைவான சுமார் 25 கோடிக் குழந்தைகள், வளர்ச்சி ஆற்றலை முழுமையாக எட்டமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால், காலநிலை நெருக்கடி, வணிக அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது.
‘உலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்?’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தைகளுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 131-ம் இடம்!