Published : 15 Feb 2020 12:07 PM
Last Updated : 15 Feb 2020 12:07 PM

மாடியிலும் மரம் வளர்க்கலாம்

மாடியில் தோட்டம் அமைத்திருப்பதைப் பற்றி ‘மாடியில் ஒரு பசுங்காடு’ என்ற தலைப்பில் எழுதிய அனுபவக் கட்டுரையைப் படித்துவிட்டு வாசகர்கள் பலர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டிருந்தனர். பெரும்பாலானோர் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவதாகவும் அதற்கான வழிமுறைகளையும் கேட்டு எழுதியிருந்தனர். மாடியிலோ வீட்டைச் சுற்றியோ தோட்டம் அமைக்க மூலப் பொருட்களுக்கு இணையாக நமக்குப் பொறுமையும் வேண்டும். நாம் நட்டதும் ரோஜா அன்றே பூத்து விடாது.

விதைகளைப் பொறுத்தவரை பாரம்பரிய விதைகளைப் பயிரிடுவதுதான் சிறந்தது. அவை எங்கே கிடைக்கும் என்று பலரும் கேட்டிருந்தனர். இயற்கை முறையில் பயிரிடும் உழவர்களிடமிருந்து விதைகளைப் பெறலாம். பாரம்பரிய விதைகளை விநியோகிக்கும் முகநூல், வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. அவற்றைத் தொடர்புகொண்டும் பெறலாம். சென்னையில் வணிக நோக்கமில்லாமல் செயல்படும் நிறுவனங்களையும் அணுகலாம்.

பாரம்பரிய விதைத் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களிலும் காய்கறிச் சந்தைகளிலும் தரமான விதைகள் கிடைக்கும். சாயமேற்றப்பட்ட கலப்பின விதைகளை அவற்றின் பளபளப்பை வைத்தே கண்டறியலாம். நேர்த்தியான வடிவத்தில் பளபளப்புடனும் அடர் நிறத்துடனும் இருப்பவை பாரம்பரிய விதைகள் அல்ல. இந்த வகை விதைகளைப் பயிரிட்டால் மகசூல் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து கிடைக்கும் விதைகள் முளைக்காது. அதனால், நம்பிக்கையான நபர்களிடமிருந்து விதைகளைப் பெறுவது நல்லது.

மாற்றி நடுவது நல்லது

சில வகைச் செடிகள் ஒரு முறை மட்டுமே மகசூல் தரும். வெண்டைக்காய், நாட்டுக் கத்தரி போன்றவை ஒன்றரை ஆண்டுகள் வரை காய்க்கும். இந்த வகைச் செடிகளில் காய்களைப் பறித்த அன்று அந்த இழப்பைச் சமன்செய்யும் வகையில் செடிக்குக் கட்டாயம் உரமிட வேண்டும்.

சில செடிகள் ஒரு முறை அறுவடை செய்து முடித்ததுமே வளர்ச்சி குன்றிவிடும். அதனால், அறுவடை முடிந்ததும் அவற்றை எடுத்துவிட்டு வேறு செடிகளை நடலாம். அவரை, பாகல் போன்றவையும் ஒரு பருவம் மட்டுமே காய்க்கும். காய்த்து முடித்ததும் செடிகளை மாற்றலாமே தவிர தொட்டி மண்ணை மாற்றக் கூடாது. காரணம், உரம் போடப்போட மண் வளமாக மாறிவிடும். சிலர் அந்த வளமான மண்ணை எடுத்துவிட்டுப் புது மண்ணை நிரப்புவார்கள், இது தவறு.

“செடிகளை முறைப்படி நட வேண்டும். கத்தரி, வெண்டை போன்ற பெரிய செடிகளை ஒரு தொட்டியில் நட்டால் அவற்றின் அடியில் மல்லி, புதினா போன்ற சிறு செடிகளை நட வேண்டும். ஒரு விதையிலைத் தாவரங்களையும் இரு விதையிலைத் தாவரங்களையும் ஒரே தொட்டியில் சேர்த்தோ மாற்றி மாற்றியோ பயிரிட வேண்டும். அதாவது ஒரு முறை அவரையைப் பயிரிட்டால் மறுமுறை அந்தத் தொட்டியில் கிழங்கு வகைகளைப் பயிரிடலாம். காய்கறி செடிகளுக்குப் பக்கத்தில் பூந்தொட்டிகளை வைக்க வேண்டும். பூக்களில் தேனெடுக்க வண்டினங்கள் வரும். அவை பக்கத்துச் செடிகளிலும் உட்காரும்.

இதன் மூலம் இயற்கை மகரந்தச் சேர்க்கை நடைபெறும்; சூழல் அமைப்பு காக்கப்படும்” என்கிறார் சென்னை கிரீன் கம்யூன் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில்குமார். இந்த நிறுவனத்திடமிருந்தும் பாரம்பரிய விதைகளைப் பெறலாம் (தொடர்புக்கு:greencommunechennai.com/http://chennaigreencommune.org/)

மாடியில் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்கள் ஒரு தொட்டியில் தேங்காய் நார்க் கழிவை (cocopith) 60 சதவீதமும் செம்மண் 20 சதவீதமும் மக்கிய எரு (காய்ந்த மாட்டுச்சாணம்) 10 சதவீதமும் மண்புழுஉரம்/வீட்டுக் கழிவு உரத்தை 10 சதவீதமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

100 மி.லி. பஞ்சகவ்யம், 100 மி.லி. அமிர்தக் கரைசல் இரண்டையும் பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தொட்டியில் இருக்கும் மண் கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்தால் செடி வளர்ப்பதற்கான செறிவூட்டப்பட்ட பயிர்வளப்பு மண் தயார். இந்த மண்ணில் நாம் விரும்புகிற விதையை நடலாம்.

தழைக்க உதவும் உரம்

செடி வளரத் தொடங்கியதும் அதற்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்க வேண்டும். சிலர் தண்ணீரை மட்டும் ஊற்றிவிட்டு செடி ஏன் இன்னும் பூக்கவில்லை, காய்க்கவில்லை எனக் குறைபட்டுக்கொள்வர். நுண்ணூட்டம் கிடைத்தால்தானே பயிர் வளரும்? ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம், மண்புழு உரம், பழ உரம், மீன் உரம், இலை, தழைகளிலிருந்து பெறப்படும் அங்கக உரம், சாம்பல் உரம் போன்றவற்றைச் செடிகளுக்கு இட வேண்டும்.

காய்கறிக் கழிவுகளும் செடிகளுக்கு உரமாகப் பயன்படும். சிலர் சாணம், காய்கறிக் கழிவு போன்றவற்றை நேரடியாகச் செடியில் கொட்டிவிடுவார்கள். இப்படிச் செய்வதால் அந்தப் பொருட்களின் சூடு செடியைப் பாதிக்கும். அதனால், காய்கறிக் கழிவை உரமாக்கி அதன் பின்னரே செடிகளுக்கு இட வேண்டும்.

காய்கறிக் கழிவை உரமாக்குவதற்கு என கிடைக்கும் தொட்டியைப் பயன்படுத்தலாம். இல்லையெனில் வாயகண்ட தொட்டியில் காய்கறிக் கழிவு, காய்ந்த சருகு போன்றவற்றை ஒரு அடுக்காகவும் அதன் மீது உலர்வான மண்ணை ஒரு அடுக்காகவும் மாறி மாறி கொட்ட வேண்டும்.

பத்திருபது நாட்களுக்குள் அது மக்கி, உரமாகிவிடும். மண் இல்லையென்றால் காகிதத்தைத் சிறு சிறு துண்டுகளாக்கிப் போடலாம். இப்படிச் செய்வதால் வாடை வீசாது. அடியில் இருப்பதுதான் முதலில் மக்கும் என்பதால் பத்து நாட்களில் வேறு தொட்டியில் இதைத் தலைகீழாகக் கொட்டி, மேலே இருக்கும் உரத்தைப் பயன்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் வெங்காயத்தையும் எலுமிச்சையையும் நேரடியாகச் செடிகளுக்குப் போடக் கூடாது. தயிரைக் கீழே ஊற்றாமல் அதனுடன் வெல்லம் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். தேங்காய்த் தண்ணீரையும் செடிகளுக்கு ஊற்றலாம்.

இயற்கைப் பூச்சி விரட்டி

பூச்சித் தாக்குதலிலிருந்து செடிகளைக் காப்பது அவசியம். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால் பூச்சிகள் வரத்தான் செய்யும். வேம்பு, துளசி, நொச்சி, நுணா, எருக்கு, தும்பை, ஊமத்தை ஆகியவற்றில் ஏதேனும் ஐந்து வகை இலைகளை எடுத்து அவற்றை கோமியத்தில் பத்து நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அந்தக் கரைசலை ஒன்றுக்குப் பத்து என்ற வீதத்தில் தண்ணீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இலையின் அடியிலும் தெளிக்க வேண்டும். காரணம், பெரும்பாலான பூச்சிகள் இலையின் அடியில்தான் தங்கும். இதை வாரம் ஒரு முறை அடிக்கலாம்.

உடனடியாகப் பூச்சி விரட்டி தேவைப்படுகிறவர்கள் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அதையும் ஒன்றுக்குப் பத்து என்ற வீதத்தில் தண்ணீரில் கரைத்துச் செடிகளுக்குத் தெளிக்கலாம். வேப்பெண்ணெய், புங்க எண்ணெய் ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்தும் தெளிக்கலாம்.

“பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி கீரையை ஆய்ந்த பிறகு இருக்கும் தண்டுப் பகுதியை நன்றாக அரைத்து அந்தக் கரைசலையும் செடிகளுக்கு ஊற்றலாம். சாம்பல் பூச்சி விரட்டியும் நல்ல பலன் தரும். வரட்டியில் வேம்பு, நொச்சி, எருக்கு இலைகளை வைத்துப் புகைபோட்டால் வீட்டுக்குள் பூச்சிகள் அண்டாது. அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்துத் தண்ணீரில் கரைத்துச் செடிகளுக்குத் தெளிக்கலாம்” என்கிறார் செந்தில்குமார்.

மாடியில் பூச்செடிகள், காய்கறிச் செடிகளை மட்டுமல்ல; மரங்களையும் வளர்க்கலாம். பெரிய தொட்டிகளில் முருங்கை, வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளி, சீத்தா, மாதுளை போன்ற மரங்களை வளர்க்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் மாடியில் பப்பாளி நட்டு 50 கிலோ வரை மகசூல் எடுத்திருக்கிறார்.

காரணம், சரியான பராமரிப்புதான். போதுமான தண்ணீர் ஊற்றுவதுடன் உரமிடுதல், நுண்ணூட்டம் அளித்தல், பூச்சித் தாக்குதலிருந்து காத்தல், காய்ந்த இலைகளையும் பகுதிகளையும் நீக்கிப் பராமரித்தல் போன்றவற்றைச் சரியாகச் செய்தால் மாடியில் பசுங்காடு சாத்தியமே.

தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x