

கு.வி. கிருஷ்ணமூர்த்தி
மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்போம் இயக்கத்தின் அனைத்துக் குழுக்களும் இணைந்து பின்வரும் செயல்களை மேற்கொண்டன:
1) இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அரசின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெறுதல்; 2) செயல் குழுக்களையும் அரசுசாரா நிறுவனங்களையும் ஒன்று திரட்டி, அவற்றின் ஆதரவைப் பெறுதல்; 3) பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் போன்றோரின் ஆதரவைத் திரட்டுதல்; 4) இயக்கம் பற்றி விளம்பரப்படுத்துதல்; 5) மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழ்நாடுவரை மேற்கொள்ளப்படும் நடைப்பயணத்தைக் கண்காணித்தல்; 6) நடைப்பயணத்துக்குப் பின்பு நிறைவுக் கூட்டத்தை நடத்துதல்.
மேற்கூறப்பட்ட முயற்சிகளின் விளைவாக 1987 நவம்பர் முதல் 1988 பிப்ரவரிவரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. நடைப்பயணம் 100 நாள் நிகழ்வாக அமைந்தது. இதில் 95 நாட்கள் பயணமும் 5 நாட்கள் மாநாடும் கூட்டமும் கோவாவில் நடைபெற்றன.
உற்சாகமும் விழிப்புணர்வும்
பயணம் இரண்டு குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது: ஒன்று வடக்கிலுள்ள நவாபூரில் தொடங்கி தெற்கு நோக்கியும், மற்றொன்று தெற்கிலுள்ள கன்னியாகுமரியில் தொடங்கி வடக்கு நோக்கியும் பயணம் மேற்கொண்டன. இந்தப் பயணங்களின்போது 160 நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான தனிமனிதர்களும் பங்கேற்றனர். பயணம் நெடுகிலும் 600 கூட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டன.
இவை பெரும் உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தின. இந்தப் பயணமும் அதன் நோக்கங்களும் ஊடகங்களிலும் வட்டார, பிராந்திய, தேசிய, பன்னாட்டு அளவில் தோன்றின. முடிவில் நடந்த 5 நாட்கள் மாநாட்டில், 3 நாட்களுக்கு அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன, 2 நாட்கள் ‘மேற்கு மலைத்தொடரைக் காப்பாற்றுதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் 700 பயணிகள் பங்கேற்றனர்.
குன்றிய உற்சாகம்
துரதிருஷ்டவசமாக, இந்த உற்சாகம் அதற்குப் பிறகு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல்மேற்கு மலைத்தொடரின் 5 மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர். இதில் நிலப் பயன்பாட்டுப் பாங்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஆற்றல் நுகர்வு, பழங்குடி மக்களுடைய பிரச்சினைகள், மனிதர் – காட்டுயிர் எதிர்கொள்ளல், சுரங்கங்கள், சூழலியல் சுற்றுலா, நீர் ஆதாரங்களின் பேணல், அரசு செயல்திட்டங்கள் போன்ற மேற்குத் தொடர்ச்சிமலை சார்ந்த தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2012 டிசம்பர் மாதத்தில் இந்த இயக்கத்தின் 25-ம் ஆண்டு விழா மகாராஷ்டிரத்தில் உள்ள மகாபலேஸ்வரில் கொண்டாடப்பட்டது; 2017 ஜூலை மாதத்தில் 30-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
மற்றோர் இயக்கம்
மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் Keystone Foundation அறக்கட்டளை மூலம் மற்றோர் இயக்கம் 2010-ல் தொடங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷின் உந்துதலால் உருவான இயக்கம் இது. இந்த இயக்கத்தின் கூட்டம் 2010-ல் கோத்தகிரியில் உள்ள அமைப்பின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த இயக்கத்தின் நோக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாநிலங்களின் 51 மாவட்டங்களில், அபாயத்தில் உள்ள சூழலியல் பகுதிகளை அடையாளம் கண்டு, அந்த ஆபத்துகளை நீக்கத் தகுந்த நடவடிக்கை எடுப்பதே. முதலில் குறிப்பிட்ட இயக்கத்தின் பெரும்பாலான நோக்கங்களை இந்த இயக்கமும் வலியுறுத்தியது. இதற்காக ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட இயக்கங்களின் விளைவாக மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியலை ஆய்வுசெய்ய 2010-ல் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவும், 2012-ல்கஸ்தூரி ரங்கன் தலைமையில் ஒரு குழுவும் உருவாக்கப்பட்டன.
காட்கில் குழு இந்த மலைத் தொடரின் 64 சதவீதப் பகுதிகளில் சூழலியல் பெரிதும் சீர்கெட்டுள்ளது என்றும் கஸ்தூரி ரங்கன் குழு 37 சதவீதம் மட்டுமே சீர்கெட்டுள்ளது என்றும் மாறுப்பட்ட கருத்துகளை வெளியிட்டன.
இந்த இரண்டு குழுக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாப்பது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத் துள்ளன. அரசு எடுக்க உள்ள நல்ல முடிவுக்காக மக்கள் தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in