பசுமை எனது வாழ்வுரிமை 19: மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கங்கள்!

பசுமை எனது வாழ்வுரிமை 19: மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கங்கள்!
Updated on
2 min read

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் முக்கிய மலைப் பகுதிகளில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை. இது வடக்கே தபதி ஆற்றுப் பகுதியில் தொடங்கி தெற்கே கன்னியாகுமரிவரை ஏறத்தாழ 1,600 கி.மீ-க்கு நீள்கிறது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த 35 சிற்றினச் செழுமைப் பகுதிகளில் (Hotspots) இதுவும் ஒன்று. சிற்றினச் செழுமைப் பகுதி என்பது உலகில் வேறெங்கும் இல்லாத ஓரிடத்துக்கே உரிய (endemic) சிற்றினங்களைக் கொண்ட ஒரு பகுதி.

ஏறத்தாழ 5 கோடி ஆண்டுகள் பழமையான இந்த மலைப் பகுதியில், 120,00 உயிர்ச் சிற்றினங்கள் வாழ்கின்றன. இவற்றில் 4,500 பூக்கும் தாவர வகைகள், 500 பறவை வகைகள், 120 பாலூட்டி வகைகள், 160 ஊர்வன வகைகள், 70 தவளை வகைகள், 800 மீன் வகைகள் போன்றவற்றின் சிற்றினங்களும் பல ஆயிரம் இதர உயிரினங்களும் உள்ளன. 1,500-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களும் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கு மனித இனம் 12,000 முதல் 15,000 ஆண்டுகளுக்கு முன்புதான் நுழைந்தது.

முக்கிய மலை

ஒரு காலகட்டத்தில் அழியாக் காடுகளைக் கொண்டிருந்த இந்த மலைப் பகுதி, இன்று மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இயற்கைத் தாவரத் தொகுதிகளைக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. சீரிய முறையில், உடனடியாக, பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்திய இயற்கைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி முதன்மையானது.

மேற்கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது ‘மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்போம்’ இயக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது; இந்தியாவின் சூழல் பாதுகாப்புச் செயலூக்க நிகழ்வுகளில், இந்த இயக்கம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

அமைதிக் கழகம்

1985 அக்டோபர் மாதத்தில் அமைதிக் கழகம் (Peaceful society) என்ற அமைப்பு, சூழலியல் பற்றிய தேசிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சிதைவுகளைத் தடுப்பதில் அதிக கவனம்செலுத்தவும், தகுந்த சூழலியல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளவும், பழங்குடி மக்களின்-சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மலைத்தொடரின் முழு நீளத்துக்கும் நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான செயல்-ஒருங்கிணைப்பு முகவராக அமைதிக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த அமைப்புக்குள்ளேயே இரண்டு ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியையும் மற்றொன்று தெற்குப் பகுதியையும் ஒருங்கிணைப்பு செய்யப் பணிக்கப்பட்டன.

தனிக் குழுக்கள்

தேசிய ஆய்வுக் குழு ஒன்று பேராசிரியர் கே.சி. மல்ஹோத்ரா தலைமையில் உருவாக்கப்பட்டது; அமைதிக் கழகத்தின் குமார் கலானந்த் மணி, மைய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். இரண்டு ஒருங்கிணைப்புக் குழுக்களுக்குள் இரண்டு குழுக்கள் செயல்களை மேற்பார்வையிட உருவாக்கப்பட்டன: நடைப்பயணக் குழு, களச் செயல்பாட்டுக் குழு. இவை முறையே பயணத்தையும் இயக்கச் செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்தன. இவற்றைத் தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையைக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது.

(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in