

அருண்
இன்றைக்கு மனிதர்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சிக்கல், அவர்களால் தூண்டப்பட்ட காலநிலை நெருக்கடிதான். இதை எதிர்கொள்வதற்கு அரசியல்வாதிகள் தீர்க்கமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இளம் காலநிலைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் உலகம் முழுக்கத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உலகின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த ‘தி கார்டியன்’, காலநிலை நெருக்கடி சார்ந்து அதன் அறிவியல், வரலாறு, அரசியல், எதிர்கொள்ளல் ஆகியவை குறித்து தொடர்ந்து எழுதிவருகிறது. காலநிலை நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்தும் சொல்லாடலைக் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தி அதைப் பரவலாக்கியது; கார்பன் தடத்தைக் குறைத்து, 2030-ம் ஆண்டுக்குள் தங்கள் கார்பன் உமிழ்வு அளவைப் பூஜ்யத்துக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த அக்டோபர் மாதம் அந்த இதழ் அறிவித்திருந்தது. இப்படிக் காலநிலை நெருக்கடி சார்ந்த கார்டியன் இதழின் முன்னெடுப்புகள் உலக அளவில் ஊடக நிறுவனங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், புதைபடிவ எரிபொருள் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்களை இனி பிரசுரிக்கப் போவதில்லை என்று கடந்த வாரம் கார்டியன் நாளிதழ் அறிவித்துள்ளது ஊடக உலகில் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நாளிதழ்கள் இன்றைக்கும் விளம்பரங்களைத் தங்கள் நிதி ஆதாரங்களில் முதன்மையாகக் கொண்டிருக்கும் வேளையில், கார்டியனின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
காலநிலை நெருக்கடியின் விளைவுகளை உலகின் மிகச் சிறந்த செய்தியாளர்களைக் கொண்டு பதிவுசெய்துவரும் நிலையில், காலநிலை சீரழிவுக்குப் பங்களிக்கும் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பிரசுரிக்கும் முரணைக் களையும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, கார்டியனின் அச்சு - இணையம் ஆகியவற்றில் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வந்திருப்பது பாராட்டத்தக்கது.