Published : 18 Jan 2020 12:10 PM
Last Updated : 18 Jan 2020 12:10 PM

விதை முதல் விளைச்சல் வரை 18: பயிர் சாகுபடியில் சுற்றுச்சூழல் பராமரிப்பு

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

வேளாண்மை என்பது மனித வாழ்வுக்குப் பயனளிக்கக்கூடிய பயிர் சாகுபடியைக் குறிக்கிறது. மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் பலனளிக்கக்கூடிய இந்த வேளாண்மை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. இயற்கையோடு சார்ந்த பயிர் சாகுபடி ஒரு போதும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது.

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் கூறியதுபோல் பயிரிலிருந்து பெறப்படும் நுனிக்கதிர் வீட்டுக்கும் தண்டு மாட்டுக்கும். அடிப்பகுதி நிலத்துக்கும் என்று கூறியதைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் இதில் அடிப்பகுதியை நிலத்திலேயே விட்டுவிட்டால் மூடாக்காகவும் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் நிலத்தின் மாசற்ற நிலைக்கும் நில வளத்துக்கும் காரணமாக அமையும்.

முன்னர் இம்முறை பயிர் சாகுபடியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் அறுவடையின்போது நிலத்திலேயே, விளைவை இயந்திரந்தின் பயனால் அறுத்து அவ்விடத்திலேயே, விற்பனையும் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்அவ்விடத்திலேயே, மானாவாரி சாகுபடியென்றாலும் இறவை சாகுபடியென்றாலும் விளைவிக்கும் பின்னர் கிடைக்கும் கழிவை ஓரளவு விற்றும் மீதியை எரித்தும் விடுகின்றனர்.

நமது பகுதியில், மானாவாரிப் பகுதிகளின் பல்வேறு பயிர்களில் அறுவடை செய்த கதிர்களை கிராமப்புறச் சாலைகளில் இட்டுப் பிரித்து எடுப்பதையும் கழிவை சாலைகளின் ஒரத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் எரிப்பதையும் பார்க்க முடியும். இதுவே சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுவதாக அமைகிறது. இது சிறிய அளவே என்றாலும் வடமாநிலங்களில் பெருநகரங்களுக்கு அருகே சாகுபடியிடும் பயிர்களின் கழிவை, (வைக்கோலை, தட்டையை) எரிப்பது என்பது பெரிய அளவில் மாசு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தற்போது சட்டங்கள் இயற்றி இதைத் தடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில்தான் நாம் பண்ணைக் கழிவைப் பயன்படுத்தும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டி உள்ளது. எந்தவொரு பயிரை எடுத்துக்கொண்டாலும், சராசரியாக விளைச்சலில் 2 பங்கு முதல் 5 பங்கு வரை, பண்ணைக் கழிவு (தென்னை மற்றும் மரப் பயிர்கள் தவிர) விளைச்சலுக்குப் பிறகு கிடைக்கிறது. இது பேரளவு கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டாலும், அளவுக்கு மீறிய பண்ணைக் கழிவையும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்த முடியாத பண்ணைக் கழிவையும் எரித்துச் சாம்பலாக்க விழைகின்றனர். இத்தகைய பண்ணைக் கழிவை உரமாகவும் நிலத்தின் நீர்பிடிப்புத் திறனை அதிகரிக்க மூடாக்காகவும் பயன்படுத்தலாம்.

பயிர் அறுவடையான பின்பு விளைவைப் பிரித்தெடுத்த பின் களத்தின் கழிவு, கால்நடைகள் உட்கொள்ளாத பயிர்க் கழிவு (பருத்திமார், மிளகாய்மார், பூச்செடி போன்றவற்றின் கழிவு) ஆகியவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம். தற்போது சில இடங்களில் பண்ணைக் கழிவை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.

நிலத்திலேயே மறுசுழற்சிக்குப் பயன்படுத்துதல்

பண்ணையில் இருந்து பெறப்படும் கழிவில் எல்லாச் சத்துக்களும் அடக்கியுள்ளன. இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம். தற்போது பண்ணைக் கழிவைத் துகள்களாக அரைக்கும் இயந்திரம், பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்குவிக்கும்போது கழிவுகளின் அளவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கழிவை இயந்திரம் மூலம் சிறிய துகள்களாக்கிப் பின் மக்கச்செய்வது எளிது. இக்கழிவை விரைவில் மக்கச்செய்யும் பொருட்டு, வேஸ்ட் கம்போஸர் (கழிவை மக்கச்செய்யும் திரவம்) மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. இதில் விரைவில் பண்ணைக் கழிவை மக்கச்செய்யும் நுண்ணுயிர் அதிகம் உள்ளது.

கம்போஸ்டு குவியல் அமைப்பு முறை

உழவர்கள் தங்கள் நில அளவுக்குத் தகுந்தவாறு தேவையான அளவுகளில் தங்கள் நிலத்தின் கம்போஸ்டு குழி அமைத்துப் பண்ணைக் கழிவை உரமாக்கலாம். பொதுவாகக் குறைந்தது 4 அடி உயரத்துக்குப் பண்ணைக் கழிவை இட்டு, நிரப்ப வேண்டும். மக்கவைக்கும் இடத் தோ்வு நிழல் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும்.

வைக்கோல், காய்ந்த பயிர்க்கழிவு ஆகியவற்றை கரிமச்சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக்கழிவாகவும் அகத்தி, தக்கைப்பூண்டு இலைகள் ஆகியவற்றை பச்சைக் கழிவாகவும் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரப்பி, கழிவுகளை மக்கச்செய்யும் திரவக்கரைசல் (Waste decomposer) அல்லது அப்பண்ணையில் கிடைக்கும் பசுஞ்சாணத்தைத் தேவையான அளவு கரைத்து சுமார்40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டா் நீரில் கரைத்து அக்கரைசலைப் பயிர்க் கழிவின் மீது தெளித்து பராமரிக்க வேண்டும். குவியலை 15 நாட்கள் ஒருமுறை கிளறி விடுதலும், 70 சதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்தலும் அவசியம்.

முதிர்ந்த நிலையில் மக்கிய தொழு உரத்தைத் தரையில் பரப்பி ஒரு நாள் காயவைத்துப் பின் ஒரே அளவாக இருக்குமாறு 4 மி.மீ. சல்லடை கொண்டு சளித்து வைத்துக் கொண்டு பின்னர் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இவ்வாறு பண்ணைக் கழிவைக் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவது போக எஞ்சியவற்றை அதே நிலத்தில் மக்கவைத்துப் பயன்படுத்தலாம்; நீா்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்த மூடாக்காகப் பயன்படுத்தலாம்; கால்நடைகளுக்குப் பயன்படாத கழிவை எரிசக்திக்குப் பயன்படுத்தலாம். இவை சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்த வழிகள்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x