

ப. ஜெகநாதன்
சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளனவா? அதற்குக் கைபேசிக் கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமா?
சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை; அவை உலகெங்கும் பரவியுள்ளன. நகரமயமாதல், இனப்பெருக்கக் காலங்களில் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவு (பூச்சி புழுக்கள்) கிடைக்காத காரணங்களால், சில இடங்களில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை குறைந்தும், அற்றும் போயிருக்கலாம். ஆனால், கைபேசிக் கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகளால் இவை அழிந்துவருகின்றன என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.
ஆந்தை, கூகை இனப் பறவைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழகத்துக்கு வருபவையா?
கூகை அல்லது வெண்ணாந்தை, தலை உச்சியில் கொத்தாகச் சிறகுகள் கொண்டு கொம்பு போலக் காட்சியளிக்கும் கொம்பன் ஆந்தை உள்ளிட்டவை வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்ததாக அவ்வப்போது செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின்றன; இது தவறான தகவல். உலகின் பல பகுதிகளில் பரவலாகத் தென்படும் பறவைகளுள் ஒன்று கூகை. Short-eared Owl (Asio flammeus) என்ற ஒரேயொரு ஆந்தை வகை மட்டுமே தென்னிந்தியாவுக்கு வலசை வருகிறது. நம்மூரில் காணும் ஏனைய ஆந்தை வகைகள் இங்கு வசிப்பவையே.
பாறுக் கழுகுகளை (பிணந்தின்னிக் கழுகுகள்) தவறான கருத்துகளின் பிரதிநிதியாக, தீய எண்ணங்களின் உருவகமாகச் சித்தரிப்பது சரியா?
பாறுக் கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனம். இறந்த கால்நடைகள், யானை, மான், காட்டெருது உள்ளிட்ட காட்டுயிர்களின் சடலங்களை உண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க இவை உதவுகின்றன. கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் வலிநீக்கி மருந்தான டைக்ளோபீனாக் (Diclofenac), அவை இறந்த பிறகும் அவற்றின் உடலில் தங்கிவிடுகிறது.
இறந்த கால்நடைகளை உண்ணும் பாறுக் கழுகுகளுக்கு இந்த மருந்து நஞ்சாகிறது. தற்போது நீலகிரியின் மாயாறு பகுதியில் பாறுக் கழுகுகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. அங்குள்ள பூர்வக்குடியினர் இந்தப் பறவைகளைத் தங்களுடைய மூதாதையர்களாக மதிக்கின்றனர். ஆனால், அந்தப் பகுதிகளில் குடியேறிய மக்கள், இவற்றைக் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர். அழிந்துவரும் ஒரு பறவையினத்தைப் பற்றி, தவறான கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடம் பரப்புவது முறையற்றது.
மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா? அதற்கான காரணம் என்ன? அவை விளைநிலத்தில் பயிர்களைச்சேதப்படுத்துவதை நிறுத்துவது எப்படி?
மயில்கள் இதற்குமுன் தென்படாத இடங்களிலும் இப்போது இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரப்பதம் மிக்க வாழிடங்களில் மழையளவு குறைந்து, வறண்டு போனதால் அந்த இடங்களில் மயில்கள் வசிக்க ஏதுவான சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் மயில்கள் இப்போது பரவியுள்ளன. கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் மேற்சொன்ன முடிவுகள் தெரியவந்தன. இது தமிழகத்தின் சில இடங்களுக்கும் பொருந்தக்கூடும்.
மயில்கள் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் தவிர்க்க முடியாது. மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகள் என்று நம்பப்படும் இடங்களில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவது, பயிர்களின் விவரங்கள், சேதத்தின் அளவு எவ்வளவு, எப்போது ஏற்படுகிறது ஆகிய தகவல்களை முதலில் அறிய வேண்டும்.
மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் இரைகொல்லி உயிரினங்களின் எண்ணிக்கை, பரவலைக் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம். விளைநிலங்களுக்கு ஆண்டுதோறும் மயில்கள் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. எப்போது இப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த வேளையில் பயிர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு (Protected Areas) வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் இருந்தால், அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம். உழவர்களும் தங்கள் பங்குக்குப் பயிர்களைக் காப்பீடு செய்ய முயல வேண்டும்.
சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா? மயில் கறி எண்ணெய் மூட்டு வலியைப் போக்குமா? இணை சேராமலேயே மயில் முட்டையிடுமா? ஆந்தை அலறினால் கெட்ட சகுனமா? கழுகு கூட்டில் உள்ள குச்சிக்கு மந்திரசக்தி உண்டா? கழுகு வயதானவுடன் அதன் அலகை உடைத்து மீண்டும் வளர்த்துக்கொள்ளுமா? பச்சைக்கிளிகளால் நம் எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? அன்னம் பாலையும் நீரையும் பிரித்துக் குடிக்குமா?
இவை அனைத்துக்கும் ஒரே பதிலைக் கூற முடியாது. ஆனால், இவை போன்ற மூடநம்பிக்கைகள் எதற்கும் எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பது மட்டும் உறுதி.
கட்டுரையாளர், எழுத்தாளர்-காட்டுயிர் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: jegan@ncf-india.org