Published : 11 Jan 2020 12:31 pm

Updated : 11 Jan 2020 12:31 pm

 

Published : 11 Jan 2020 12:31 PM
Last Updated : 11 Jan 2020 12:31 PM

பசுமை இலக்கியம்: வாசகரின் தேடல் மேம்பட்டுவிட்டது - சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

interview-with-ecology-writer-nakkeeran

ஆதி வள்ளியப்பன்

நூல் ஒன்று வெளியாகி, ஓரிரு மாதங்களுக்குள் இரண்டாம் பதிப்பு காண்பது தமிழில் அபூர்வம். அந்தப் பெருமையைச் சூழலியல் நூலொன்று சமீபத்தில் பெற்றிருக்கிறது. வெளியான நாள் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூல் அறிமுக-விமர்சனக் கூட்டங்கள் இந்த நூலுக்காகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அந்த நூல் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘நீர் எழுத்து'.

நம் வாழ்க்கைக்கும் பண்பாட்டுக்கும் அடிப்படையாக அமைந்த நீரை, சமூகம் – வரலாறு – பொருளாதாரம் – அரசியல் - சூழலியல் எனப் பல்வேறு தளங்கள் சார்ந்து தனித்த பார்வையை ‘நீர் எழுத்து’ முன்வைக்கிறது. ஓர் மழைக்காட்டின் அழிவைப் பேசக்கூடிய அவருடைய புகழ்பெற்ற படைப்பான ‘காடோடி’ நாவலின் புதிய பதிப்பும் வெளியாகியுள்ளது. இரண்டு நூல்களையும் காடோடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் எழுத்தாளர் நக்கீரனுடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

எந்தப் புள்ளியில் ‘நீர் எழுத்து’ போன்ற விரிவானதொரு நூலை எழுத வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியது?

பற்றாக்குறையும் வறட்சியும் ஏற்படும்போது மட்டும் பேசப்படும் விஷயமாக நீர்ப் பிரச்சினை இருக்கிறது. நடப்புச் சிக்கல் சற்றே மட்டுப்பட்டவுடன், நீரைப் பற்றிய விவாதங்கள் நின்றுவிடுகின்றன. ஆனால், தமிழ்ப் பண்பாடு நீர்மேல் கட்டப்பட்டதுதான். அதன் காரணமாக நீரைக் குறித்து அனைத்துத் தளங்களிலும் பேசும் ‘நீர் குறித்த பைபிள்’ போன்றதொரு நூலைத் தமிழில் தேடினேன்.

ஆனால், அப்படிப்பட்ட நூல் எதுவும் கிடைக்கவில்லை. நீரின் இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழக வரலாற்றை நாமே பேசினால் என்ன என்று தோன்றியது. அதையொட்டி விரிவாகத் தேடத் தொடங்கியதன் விளைவே இந்த நூல். இது ஓர் மக்கள் ஆவணமாக அமைய வேண்டும் என்ற திட்டத்துடன்தான் எழுதினேன்; கல்விப்புலப் பாணியில் எழுதவில்லை. எதிர்காலத்தில் இந்த நூலைக் காட்சி ஊடகங்கள் வழியாகவும் எடுத்துச்செல்லும் திட்டமிருக்கிறது.

இவ்வளவு விரிவான நூலை எழுதியதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றி நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த நூலை எழுதியபோது நீங்கள் எதிர்கொண்ட முக்கியச் சவால்கள் என்னென்ன?

நீரைக் குறித்து சூழலியல்-அறிவியல்பூர்வமாக எழுத நினைத்ததால், தரவுகளைத் தேடுவது கடினமாக இருந்தது. பழ. கோமதிநாயகம், கொடுமுடி சண்முகம் போன்றோர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவை நீர் சார்ந்த கட்டுமானங்கள் பற்றியே அதிகம் பேசுகின்றன. அத்துடன் ஆவணங்களில் உள்ள தமிழர்களின் பண்டைய கட்டுமானங்களை நேரில் தேடிச்சென்றபோது, பெரும்பாலான கட்டுமானங்கள் உரிய பராமரிப்பின்றி முற்றிலும் அழிந்துவிட்டிருந்தன.

பருவநிலை குறித்த தமிழரின் மரபறிவு குறித்துக் கண்டறிவதும், அது குறித்துப் பேசக்கூடிய நபர்களைத் தேடுவதும் கடினமாக இருந்தது. தமிழகத்தில் நீர் சார்ந்த தகவல்களைத் தேடுவதற்காகப் பல தரப்பினரையும் நேரில் சந்தித்தேன். நம்மைவிட மிகக் குறைந்த அளவில், கிடைக்கும் நீரைக்கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்ள ராஜஸ்தானில் உள்ள பழங்குடிகளைத் தேடிச் சென்றேன்.

ஒற்றை ஆளாக அனைத்து விதமான தரவுச் சேகரிப்புகளிலும் ஈடுபட்டதால் பணிச்சுமை அதிகரித்தது; பொருளாதாரச் சிக்கல்களையும் சேர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த அம்சங்களில் ஆதரவு இருந்திருந்தால், இன்னும் விரிவாகச் செயல்பட்டிருக்க முடியும்.

நூலின் இறுதியில் தமிழக நீர்க்கொள்கைக்கான பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறீர்கள். இன்றைய நிலையில் நீர் சார்ந்து அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் திசையைத் திருப்பும் வகையில் ஓர் அணையை கரிகாலன் கட்டியிருக்கிறார். அதற்கு 1800 ஆண்டுகளுக்குப் பிறகு—ஆங்கிலேயர் காலத்தில் ஆர்தர் காட்டன்— அதன் மேல் ஓர் அணையைக் கட்ட முடிகிற அளவுக்கு, கரிகாலன் கட்டிய கல்லணை ஆதாரமாக அமைந்திருக்கிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் முக்கொம்பில் கட்டப்பட்ட மேலணை என்ன நிலைமையில் இருக்கிறது, அதன் பலம்-பலவீனம் என்ன என்பது பற்றிய குறைந்தபட்சப் புரிதல்கூட இல்லாத நிலைதான் இன்றைய அரசு நிர்வாகம்-ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது.

நீர் மேலாண்மை அறிவு என்று பார்க்கும்போது, இன்றைய அரசு நிர்வாகம்-ஆட்சியாளர்கள் உடனடித் தீர்வை நோக்கியே ஓடுகிறார்கள். நீண்டகால நோக்கில் திட்டமிடுவதோ செயல்படுவதோ இல்லை. என்னுடைய நூலில் நீர் மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கும் நீண்டகாலத் திட்டங்களைப் பற்றியே விவாதித்திருக்கிறேன். அக்கறையுள்ள நண்பர்கள் மூலம் ‘நீர் எழுத்து’ நூல் அரசு உயரதிகாரிகள் சிலரின் கைகளுக்குச் சென்றுள்ளது. அங்கும் மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்.

‘காடோடி’ நாவலின் புதிய பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அதன் முந்தைய பதிப்புகள் உங்களுக்குத் தந்த எதிர்வினைகள் என்ன?

‘காடோடி’ நாவல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நூல் புதிய வாசகர்களை அதிகமாக ஈர்த்தது. தொண்ணூறுகளின் குழந்தைகளின், புத்தாயிரத்தின் குழந்தைகள் வாசிப்பின் பக்கம் வருவதில்லை என்று சொல்கிறோம். ஆனால், அவர்களிடம் இருந்தே நாவலுக்கு அதிக எதிர்வினைகள் வந்தன; அவர்களில் பாதிப் பேர் பெண்கள். இயற்கை, சூழலியல் சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் இந்தத் தலைமுறையிடம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.

சூழலியல் தொடர்பாக நீங்கள் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பசுமை இலக்கியம் கண்டுள்ள வளர்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பசுமை இலக்கியம் சார்ந்த ஆர்வம் குறிப்பிட்ட காலத்துடன் மங்கிவிடப் போவதில்லை. தாங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு இத்தனை காலம் பொருளாதார, அரசியல் காரணங்களையே மக்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் தொடங்கும் மூலப்புள்ளி சூழலியல்தான் என்ற புரிதல் அதிகரித்துவிட்டது.

அந்த அடிப்படையைக் காப்பாற்ற வேண்டும் எனச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரம் வலதுசாரி-அடிப்படைவாதச் சிந்தனையும் சுற்றுச்சூழல் அக்கறையின் மீது செல்வாக்கு செலுத்தத் தொடங்கியிருக்கிறது. அதன் கரங்களில் இருந்து சுற்றுச்சூழல் சிந்தனையைக் காப்பாற்ற வேண்டும், உதாரணமாக பசுமைப் பரப்பை அதிகரித்தால் நுண் காலநிலையைப் (Micro Climate) பாதுகாக்க முடியும் என்று கூறினால், உடனே துளசிச் செடியை வளருங்கள் அதிக ஓசோனைத் தரும் என்று மத அடிப்படைவாதச் சிந்தனையை அதில் நுழைக்கின்றனர். தாவரவியல் அறிவு, ஓசோனின் அறிவியல் பற்றி அறிந்தவர்கள் இதைப் பார்த்து நகைப்பார்கள். அறிவியல்பூர்வச் சிந்தனையுடன் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.

பசுமை இலக்கியத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சூழலியல் சார்ந்த அடிப்படைகளை விளக்க முயன்றோம். இப்போது வாசகர்கள் அதைக் கடந்து ஆழமாக வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வும் கேள்விகளும் வாசகர்களிடையே அதிகரித்திருக்கின்றன. வேர்களைத் தேடும் இந்த முயற்சி நல்ல அறிகுறி.

‘காடோடி’ நாவலையே எடுத்துக்கொண்டால், ஒரு காட்டின் அழிவு குறித்த வலியையும் வேதனையையும் வாசகர்கள் எளிதில் உள்வாங்கிக்கொண்டார்கள். அவர்களுடைய புரிதல் அதிகரித்திருப்பதன் அடையாளம் இது. இன்றைக்கு விரிவும் ஆழமும் கூடிய நூல்களையே வாசகர்கள் தேடுகிறார்கள். எனவே, அந்தத் திசையில் பசுமை இலக்கியம் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


சூழலியல் எழுத்தாளர்நக்கீரன் நேர்காணல்Ecology writerபசுமை இலக்கியம்வாசகரின் தேடல்காடோடி நாவல்பருவநிலைநீர் எழுத்து

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author