Published : 22 Aug 2015 11:05 AM
Last Updated : 22 Aug 2015 11:05 AM

சென்னை மாநகரம்: ஒரு ஜல சமாதி

இன்று நாம் வாழும் இடமெல்லாம், ஏதோ ஒரு காலத்தில் அடர்ந்த காடாகத்தான் இருந்திருக்கும். பல ஊர்களுக்கு இது பொருந்தும். ஆனால், சென்னையில் இன்றைக்கு எழுந்து நிற்கும் பல பகுதிகளுக்கு அடியில், ஏதோ ஒரு நீர்நிலை இருந்த சுவடு தெரியாமல் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும். சென்னையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் எவரும், இதை உணர்ந்துகொள்ளலாம்.

இந்தப் பின்னணியில்தான் சென்னையில் எஞ்சியுள்ள முக்கிய நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் போராட ஆரம்பித்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் வரலாறு

சென்னையும் தண்ணீர் பஞ்சமும் ஒட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போன்றவை. 19-ம் நூற்றாண்டின் மத்தியக் காலம்வரை கிணறுகளில் இருந்தும், ஏரிகள்-நீர்நிலைகளில் இருந்தும் சென்னை நகருக்குத் தேவையான தண்ணீர் எடுக்கப்பட்டுவந்தது. ஆனால், 1940-களில் சென்னையின் தண்ணீர் தேவை பூர்த்தியாகாமல், சிக்கலானதாகவே இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு பூண்டி, செங்குன்றம், சோழவரம் நீர்த்தேக்கங்களில் இருந்து கிடைத்த தண்ணீர், தேவையை நிறைவு செய்துவந்தது. அதுவும் போதாத நிலையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை அன்றைய முதல்வர் அண்ணா 1967-ல் அறிவித்தார்.

இத்தனை அம்சங்களும் கைகொடுத்தும்கூட, 1974-75-ல் சென்னையின் தண்ணீர் தேவை தீர்த்துவைக்க முடியாததாக இருந்தது. அப்போதுதான் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் லாரிகளும் கால் பதித்தன. 1990-களில் சாதாரண மக்களின் கைக்கு எட்டாத தொலைவுக்குத் தண்ணீர் செல்ல ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் புறநகர் பகுதியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் கொண்டுவந்து விற்க ஆரம்பித்தன. 2003-04-ம் ஆண்டில் நீர்த்தேக்கங்கள் வறண்டபோது, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் மோசமாகத் தலைதூக்கியது.

சுருங்கிய இடைவெளி

இப்படியாக, பக்கத்தில் இருந்த நீர்நிலையில் கிடைத்துக்கொண்டிருந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து குழாய் விநியோகத்துக்கு மாறி, கடைசியில் லாரிகளில் விநியோகிக்கப்படும் விஷயமாகத் தலைகீழாக மாறிவிட்டது. இன்றைக்குத் தண்ணீருக்குக் கட்டணமாகக் கொடுக்கப்படும் விலையும் அதிகம், தண்ணீருக்கு இயற்கை சூழல் கொடுக்கும் விலையோ கணக்கிட முடியாத அளவு அதிகம்.

சென்னையின் தண்ணீர் பஞ்ச வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் முதலில் 80 ஆண்டு இடைவெளி, பிறகு 35 ஆண்டு இடைவெளி, பிறகு 15 ஆண்டு இடைவெளி என தண்ணீர்ப் பஞ்சம் வரும் காலம் சுருங்கிக்கொண்டே வந்திருக்கிறது. இதன்படியும் பருவநிலை மாற்றங்களையும் ஆராய்ந்தால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

பறிபோன பராமரிப்பு

ஆறு போன்ற நிரந்தர நீர்வளம் இல்லாத சென்னை-பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள், நீர்த்தேவையின் அவசியத்தை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட்டுள்ளனர். இயற்கையாக அமைந்த மற்றும் தேவை காரணமாக வெட்டப்பட்ட ஏரிகள், பாசன ஏரிகள் காலம்காலமாகப் பராமரிக்கப்பட்டு வந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. நூறு ஆண்டு காலத்துக்கு முன்வரை இந்தத் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

அதற்குப் பிறகு நீர்நிலைகள் சார்ந்த அக்கறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 'நகர வளர்ச்சி' முதன்மை பெற்றபோது, முதலில் காவு வாங்கப்பட்டவை நீர்நிலைகளே. இங்கே இடம்பெற்றுள்ள படங்களே அதற்குச் சாட்சி. சென்னை மாநகராட்சி அமைந்துள்ள ரிப்பன் கட்டிடம் 1913-ல் கட்டப்பட்டது. பறவை பார்வையில் எடுக்கப்பட்ட படத்தில், அதற்குப் பின்னால் அமைந்திருந்த மக்கள் பூங்கா - மாநகராட்சி விலங்கு காட்சிசாலை பகுதியில் 11 குளங்கள் இருந்துள்ளன. அவற்றில் பெரிதாக நீண்டிருக்கும் குளத்தைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இன்று அது இல்லை.

காணாமல் போன குதிரைலாட ஏரி

இன்றைக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை, முகப்பேர் ஏரி வீட்டுவசதித் திட்டம், மாம்பலம் ஏரி வீட்டுவசதித் திட்டம் என்பது போன்ற சாலைகளையும் திட்டங்களையும் பார்க்கலாம். இந்தப் பகுதிகள் அனைத்துமே ஒரு காலத்தில் ஏரியாக, கால்வாயாக இருந்தவைதான். இன்றைக்குப் பெயர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன, ஏரிகள் காணாமல் போய்விட்டன.

இப்படிக் காணாமல் போன ஏரிகளில் முதன்மையானது, 'லாங் டேங்க்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட சென்னையின் பிரம்மாண்ட ஏரி. சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டைவரை குதிரைலாட வடிவில் நீண்டிருந்தது இந்த ஏரி. அமைந்திருந்த பகுதிக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, மயிலாப்பூர் ஏரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. 1909 அரசிதழில் வெளியான வரைபடத்தில் இந்த ஏரி உள்ளது.

நுங்கம்பாக்கம் ஏரி இருந்த பகுதியில்தான் சூளைமேடு, லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டவை இன்றைக்கு அமைந்துள்ளன. அதேபோல மாம்பலம் ஏரி இருந்த பகுதியில்தான் மேற்கு மாம்பலம், பாண்டி பஜார், பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி போன்றவை உள்ளன. தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில்தான் இந்தக் குதிரைலாட ஏரியின் அன்றைய எல்லை என்று கூறப்படுகிறது. இன்றைக்கு அந்த நீண்ட ஏரியின் எந்தச் சுவடும் இல்லை. இப்படியாக சுவடுகூடத் தெரியாமல் ஏரிகள் அழிக்கப்பட்டால், பிற்பாடு தண்ணீர் மட்டும் எப்படிக் கிடைக்கும்?

பாழான பள்ளிக்கரணை

மேற்கண்ட நீர்நிலைகளின் அழிவு நம் காலத்துக்கு முந்தையது என்றால், தென் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் அழிவு நம் கண் முன்னே நடந்துகொண்டிருக்கிறது. 1960-களில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் ராஜிவ் காந்தி சாலை தொடங்கும் மத்தியக் கைலாஷ்வரை 5000 ஹெக்டேருக்கு நீண்டிருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அடுத்த 40 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பல வகைகளில் சூறையாடப்பட்டது. இன்றைக்கு எஞ்சியிருப்பது, அதில் பத்தில் ஒரு பங்குதான்.

இந்த சதுப்புநிலத்தின் மேல் கிட்டத்தட்ட 80 ஹெக்டேர் பரப்புக்கு மாநகராட்சி குப்பைகளைக் கொட்டியிருக்கிறது. 2012 செயற்கைக்கோள் படத்தில் பச்சையாகத் தெரிவது சதுப்புநிலத்தின் நீர்ப்பகுதி. நடுவில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பழுப்பு நிறப் பகுதிதான் குப்பை கொட்டப்பட்டுள்ள இடம். அது மட்டுமில்லாமல் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம், மத்திய அரசு நிறுவனங்கள், பாலங்கள் எனப் பல்வேறு கட்டிடங்கள் சதுப்புநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. ரியல் எஸ்டேட்டும் பள்ளிக்கரணையை பதம் பார்க்காமல் இல்லை.

எஞ்சியுள்ளது காப்பாற்றப்படுமா?

நாடு விடுதலை பெறுவதற்கு முன் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் 124 முக்கிய ஏரிகள் இருந்ததாகப் புவியியலாளர்கள் சுசீலா ராகவன், இந்திரா நாராயணன் ஆகிய இருவரும் குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுரண்டப்பட்டு இந்த நூற்றாண்டில் 40-க்கும் குறைவான ஏரிகளே எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஏரிகள், நீர்நிலைகள் ஆரோக்கியமாக இல்லை என்பது மட்டும் நிச்சயம். பெருமளவு ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டப்படுவது எனச் சீரழிந்து கிடக்கின்றன. அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளுக்குத் தண்ணீரைக் கொண்டுவந்து சேர்க்கும் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன. இந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை அப்படியே பயன் படுத்த முடியாது என்பது உண்மைதான்.

அதேநேரம் எஞ்சியுள்ள நீர்நிலை களைப் பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். சென்னையின் கடற்கரைப் பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் மட்டுமில்லாமல் உட்புறப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு சரிந்துவிட்டதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவற்றிலிருந்து சென்னை முழு வதும் விரவிக்கிடந்த நீர்நிலைகள் தொடர்பாக அரசின் அலட்சிய மனோபாவமும், மக்களின் அக்கறை யின்மையும்தான் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அடிப்படை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

சிதைந்த நிலையில் இருந்தாலும் போரூர் போன்று எஞ்சியுள்ள நீர்நிலைகளும் அழிக்கப்பட்டால் ஆழ்குழாய் கிணறு, தண்ணீர் லாரிகள் மூலம் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் நம்முடைய நிலை, எதிர்காலத்தில் பாலைவனத்தில் முடிவடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x