Published : 28 Dec 2019 12:00 PM
Last Updated : 28 Dec 2019 12:00 PM

விடைபெறும் 2019: சூழலியல் நிகழ்வுகள் - ஒரு பார்வை

சு. அருண் பிரசாத்

சூழலியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக 2019 விடைபெறுகிறது. தமிழகம், இந்தியா தொடங்கி உலகம் முழுமைக்கும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட பல்வேறு சூழலியலில் அமைப்புகளின் மீது தாக்கம் செலுத்திய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து ஒரு சிறு தொகுப்பு:

அமேசான் காட்டுத் தீ

பிரேசிலில் காடழிப்பு தீவிரப் பிரச்சினையாக இருந்துவருகிறது. வேளாண்மைக்காகவும் கால்நடைப் பொருளாதாரத்துக்காகவும் அமேசான் காடுகள் சரமாரியாக அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கு ஏற்படுத்தப்பட்ட காட்டுத் தீ, தொடர்ந்து பல நாட்கள் எரிந்து மாபெரும் உயிரினப் பன்மை மையமாகத் திகழும் அமேசானுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதனால் அதீத கரியமில வாயு வெளியேற்றம், உயிரினங்கள் அற்றுப்போதல், மண் வளம் குன்றுதல் உள்ளிட்ட விளைவுகள் உலகின் ஒட்டுமொத்த சூழலியலையும் பாதிக்கும் ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆகஸ்ட் 23 வரையிலான காலத்தில் மட்டும் பிரேசிலில் 75,336 இடங்களில் காட்டுத்தீ பரவியிருப்பதாகவும், இது வரையிலான பதிவுகளில் இதுவே உச்சம் எனவும் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. அதிதீவிர வலதுசாரியான ஸெய்ர் போவ்சோனரு பிரேசிலின் அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து, நாட்டின் வளர்ச்சிக்காக அமேசான் காடுகள் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் என்று அறிவித்தார். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அவர் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானது.

கிரெட்டா துன்பர்க் என்றொரு நிகழ்வு!

மனிதர்களின் வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வலியுறுத்தி, 2018-ல் தனியாளாகப் போராடத் தொடங்கிய 16 வயதுப் பெண் கிரெட்டா துன்பர்க், 2019-ல் ஒரு நிகழ்வாக மாறினார். ‘எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்’ (#FridaysForFuture) என்ற பெயரில் கிரெட்டா தொடங்கிய இந்தப் போராட்டம், குறுகிய காலத்தில் உலகம் முழுக்கப் பரவியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுக்க மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன; பொதுமக்களும் தங்கள் குழந்தைகளோடு பருவநிலைப் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

‘எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு?’ என்று ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களை நோக்கி கிரெட்டா எழுப்பிய கேள்வி மிகுந்த விவாதத்துக்குள்ளானது. தன்னுடைய செயல்பாடுகளால் உலகம் முழுக்கப் பேராதரவையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றிருக்கும் கிரெட்டாவுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன; இந்த ஆண்டு நோபல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த கிரெட்டா, 2019-ம் ஆண்டின் மனிதராக ‘டைம்’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அழிக்கப்பட்ட மும்பையின் நுரையீரல்!

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் உள்ள ‘சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா'வை ஒட்டி ‘மிதி' ஆற்றுப்படுகையில் உள்ளது ‘ஆரே மில்க் காலனி' காட்டுப் பகுதி. ஆரேயில் உள்ள மரங்கள், புல்வெளிகள், புதர்கள், சதுப்புநிலங்கள் போன்றவை அடங்கிய சூழல் தொகுதி சிறுத்தை, வலசைப் பறவைகள், பாம்பு, தேள், சிலந்தி, வண்ணத்துப்பூச்சி உள்பட இன்னும் பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடமாக உயிரினப் பன்மையுடன் செழித்திருந்தது. இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்துக்காக 2,800 மரங்கள் வெட்டப்பட்டன.

‘மும்பையின் நுரையீரல்’ என்று அழைக்கப்பட்ட ஆரே காட்டுப் பகுதியில் மரம் வெட்டுவதற்குத் தடை கோரிய வழக்குகளை பம்பாய் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று மரம் வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டபோது, 95 சதவீத மரங்கள் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்தன.

நிலைகுலைந்த நீலகிரி!

நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் நான்கு நாட்கள் தொடர்ந்த மழைப் பொழிவு, 250 செ.மீ. பதிவாகி தமிழகத்தில் பதிவான அதிக மழைப் பொழிவு அளவை எட்டியது. கட்டுமீறிய மழை, வெள்ளம் ஒருபுறம், சூழலியல் சீர்குலைவால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மறுபுறம் என ஆபத்தான பின்னணியில் நீலகிரி மலைப் பகுதி திணறியது.

மலைப் பகுதிகளில் கடுமையாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறி, மழைநீர் இயற்கையாகச் சேகரமாகும் ‘வயல்’ என்ற அமைப்புகள் கட்டிடங்களாக மாற்றப்பட்டது; தண்ணீர் செல்லும் இயற்கையான பாதைகள் முழுவதும் தோட்டங்களுக்குள் தடுக்கப்பட்டது; வாய்க்கால்கள் குறுக்கப்படுவது; சுற்றுலா விடுதிகள் வரம்பின்றிக் கட்டப்படுவது ஆகிய செயல்பாடுகளே இத்தகைய பேரழிவுக்குக் காரணம் என்கிறார்கள் நீலகிரியின் சூழலியலாளர்கள். மேலும், தீவிர தட்பவெப்ப மாறுபாட்டால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீலகிரியில் மழை பொழிந்திருக்கிறது. இதற்கான முதன்மைக் காரணிகளுள் ஒன்றாகப் பருவநிலை மாற்றம் பார்க்கப்படுகிறது.

தடமின்றி அழியும் தடாகம்!

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னத் தடாகம் கிராமம், உயிரினப் பன்மை வளம் மிகுந்தும் யானை வழித்தடமாகவும் விளங்குகிறது. தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ‘HAGA’ (Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் ஆகியவற்றை உருவாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு அனுமதியின்றி 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இங்குச் செயல்படுவதால், இந்தப் பகுதியின் உயிரினப் பன்மை சீரழிந்து கொண்டிருக்கிறது.

சூளைகளிலிருந்து வெளியேறும் புகை, நுண்ணிய கார்பன் துகள்கள் மனிதர்களின் நுரையீரலில் ஊடுருவி அங்கேயே தங்கிவிடுகின்றன; தாவரங்களின் ஆரோக்கியமும் காற்று மாசுபாட்டால் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயரும் பேருயிர்களான யானைகள் இந்தச் சூளைகளால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. இது யானை-மனிதர் எதிர்கொள்ளலுக்கு வழிவகுத்திருக்கிறது.

கூடங்குளத்தில் இணையத் தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணுமின் நிலையத்தில் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சில சமூக வலைத்தளக் கணக்குகள் வெளியிட்ட தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தின. அணு உலையின் கட்டுப்பாடு அமைப்புகள் (Control Systems) இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்காது. எனவே, இணையத் தாக்குதலுக்கான சாத்தியம் இல்லை என்று அணுமின் நிலையத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

ஆனால், நிர்வாகப் பணிகளுக்காக இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்த நிலைய நிர்வாகி ஒருவரின் கணினியில் இணையத் தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று அணுசக்தி மின் உற்பத்திக் கழகம் (NPCIL) ஒப்புக்கொண்டது. லாசரஸ் (Lazarus) என்ற வட கொரிய ஹேக்கிங் கும்பல், DTrack என்ற வைரஸ் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் ஏற்கெனவே கேள்வியும் அச்சமும் உள்ள நிலையில் இதுபோன்ற இணையத் தாக்குதல்கள் சூழலியல் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

திணறிய டெல்லி

நாட்டின் தலைநகர் டெல்லியை ஒட்டுமொத்தமாக மூச்சுத்திணற வைத்த மோசமான காற்று மாசு சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியது. உழவர்கள் பயிர்க்கழிவுகளை எரிப்பதுதான் இதற்கு முதன்மைக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் எவ்விதப் பாதுகாப்பும் இன்றிக் கட்டப்படும் கட்டிடங்கள்; நகரைச் சுற்றி நிலக்கரி உள்ளிட்டவற்றை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகள்; அளவுக்கு அதிகக் குப்பையை எரித்தல்; டெல்லியில் இருந்து மூன்று மணிநேரத் தொலைவில் மதுராவில் செயல்படும் பெரிய சுத்திகரிப்பு ஆலை; போதாக்குறைக்கு நகரின் கட்டற்ற வாகனப் பெருக்கம் ஆகியவையே காற்று மாசு எல்லைமீறிப் போனதற்கு அடிப்படைக் காரணங்கள்.

காற்று மாசு எப்போதும் இருந்தாலும், பசுமை அரண்கள் அழிக்கப்பட்டதன் விளைவாக வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. உயிரைப் பறிக்கும் இந்தப் பிரச்சினை குறித்துச் சற்றும் அலட்டிக்கொள்ளாத மனோபாவமே நாடெங்கும் நிலவுவதாகவும், சுற்றுச்சுழல் தூய்மைக்குப் பொதுமக்கள் அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தக் காற்று மாசு டெல்லியுடன் நிற்காமல், சென்னைவரை பரவியது.

நீரின்றித் தவித்த சென்னை!

சென்னையில் இந்த ஆண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு தீவிரப் பிரச்சினையாக உருவெடுத்தது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டன. இதனால் சென்னை மாநகர பொதுமக்களுக்குக் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம், மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர், சிக்கராயபுரம் கல்குவாரிகள் எனப் பல்வேறு வழிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் தண்ணீர் விநியோகம் நடைபெற்றது. நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற சர்வதேச நாளிதழ்கள் இப்பிரச்சினையைக் கவனப்படுத்தின. ஹாலிவுட் நடிகர் லியோனர்டோ டி காப்ரியோ, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒளிப்படத்தைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x