Published : 21 Dec 2019 12:11 PM
Last Updated : 21 Dec 2019 12:11 PM

உயிரினப் பன்மை: மறைந்துவரும் மழைக்காலக் கச்சேரிகள்

ஆசிய ஆண் தேரை, இனப்பெருக்க நிலையில்

சு.வே. கணேஷ்வர்

இரவு மணி பத்து. விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. தேநீர் அருந்திவிட்டு, மழை வருமா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கைபேசியில் அம்மாவின் அழைப்பு.

“இப்போ எங்க இருக்க? இங்க நல்லா மழை வருது. நிறையச் சத்தம் கேக்குது. சீக்கிரம் வா!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். “அப்படியா! விக்கிரவாண்டியில சாப்பாட்டுக்கு வண்டிய நிறுத்தியிருக்காங்க. சீக்கிரம் வந்துருவேன்,” என்று நானும் ஆவலோடு இணைப்பைத் துண்டித்தேன்.

அம்மாவின் புதிய ஆர்வம்

சிறு வயது முதலே என்னை மழையில் விளையாட அனுமதிப்பதால், நான் நனைவது பற்றி அம்மாவுக்குக் கவலை கிடையாது. ஒருவேளை நான் வருவதற்குள் மழை நின்றுவிட்டால் கச்சேரி களையிழந்துவிடும். அதை நான் தவறவிடக் கூடாது என்பதுதான் அவருடைய கவலை.

ஆம், நாங்கள் பேசிக்கொண்டது கொட்டும் மழையிலும், ராகம் போட்டுப் பாடுவதுபோல் தனித்துவமாகக் கத்தும் தவளைகளைப் பற்றித்தான். ஆர்வம் இருந்தாலும், நான் பல முறை வலியுறுத்திய பிறகே பறவை நோக்குதலில் அம்மா ஈடுபட்டார். ஆனால், நான் எதுவும் சொல்லாமலேயே அதிக ஆர்வத்துடன் தவளை நோக்குதலிலும் அவர் ஈடுபட்டது இயல்பாக நடந்தது.

காட்டாங்குளத்தூரில் இறங்கி வீட்டுக்குச் செல்லும் பாதையில் நிறைய ஆசியத் தேரைகள் (Common Asian Toad) கண்ணில்பட்டன. சில தேரைகள் வண்டிச் சக்கரங்களில் சிக்கி இறந்திருந்தன. இதைக் கண்டதும், காடுகளை ஊடறுத்துச் செல்லும் சாலைகளில் பேய்த்தனமாகச் செல்லும் வாகனங்களில் நசுங்கி இறக்கும் எண்ணற்ற உயிரினங்களின் மரணம் என் மனத்தில் நிழலாடியது. அந்தச் சிந்தனை வலுப்பெறும்முன் கோயில் குளத்தில் ஒலித்த நீர்தத்தித் தவளையின் (Common Skittering Frog) சத்தம் மீண்டும் தவளைப் பாடல்களின்மீது கவனத்தைத் திருப்பியது.

இந்திய மரத்தவளை

தவளையும் தேரையும்

தவளைகள் (Frogs), தேரைகள் (Toads) இரண்டுமே நீர்நிலவாழ்விகள் (Amphibians). நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டுக்கும் சில வேற்றுமைகளும் உண்டு. தவளைகளின் தோல் ஈரப்பதத்துடனும் வழுவழுப்பாகவும் இருக்கும். தேரைகளின் தோல் காண்பதற்குச் சொரசொரப்பாகவும் உடல் முழுக்கக் கொப்பளங்கள் வந்ததுபோலும் இருக்கும்.

இந்தியாவில் இதுவரை நஞ்சுத்தவளைகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. ஆனால், தேரைகளுக்குக் கண்களுக்குப் பின்னால் ஒரு சிறு நஞ்சுச் சுரப்பி (poison gland) அமைந்திருக்கும். இரைகொல்லிகளிடமிருந்து தப்பிக்கவே இந்தத் தற்காப்பு அமைப்பு. மனிதர்களுக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை. இவையே இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடு.

வண்ணத் தவளை

மரத்தவளை தந்த மன நிறைவு

வீட்டில் அம்மா தயாராக இருந்தார். “சீக்கிரம் வா,” என்று சமையலறையின் ஜன்னலைக் காண்பித்து, “இதைத் தானே வீட்ல ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்த, இப்போ கெடச்சிருக்குப் பாரு,” என்றார். மழையில் நனைந்ததைவிட மகிழ்ச்சியிலே அதிகம் நனைந்தேன்.

அது ஓர் இந்திய மரத் தவளை (Common Indian Tree Frog). மெதுவாக நெருங்கிச் சில படங்களை எடுத்தபோது, “இது எப்படி இங்க மேல வரைக்கும் வந்திருக்கும்?” என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்டார். “அம்மா, இது ஒரு மரத்தவளை. ஜன்னலை ஒட்டித்தானே முருங்கை மரம் இருக்கு. அதான் ஏறி வந்திருக்கும். சின்னப் பசங்க விளையாடற வில் அம்பு இருக்குல்ல, அதுல செவுத்துல போய் ஒட்டிக்கிற மாதிரி அம்போட ரப்பர் நுனி எப்படியோ, அதே போலத்தான் மரமேறும் தவளைகளோட விரல் நுனியும் அமைஞ்சிருக்கும்.

மரத்துக்கு மரம் தாவிக் குதிக்கும்போது கீழ விழாம பிடிச்சிக்க, அது உதவும்” என்றேன். “பாரேன், என்ன ஒரு அடாப்டேஷன் இதுங்களுக்கு” என்று ஆச்சரியத்துடன் அந்தத் தவளையின் கால்களை உற்றுநோக்கினார். மழையின்போது உங்கள் வீட்டுக் கதவுகள், குளியலறை போன்ற இடங்களில் இந்தத் தவளையை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

தோட்டத்தில் ஒலித்த பாடல்கள்

பின்னர், ஹெட் டார்ச் (Head Torch), குடையை எடுத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள தவளைகளைக் காணச் சென்றோம் . 10x10 அளவே உள்ள சிறிய தோட்டமானாலும் வேதிப்பொருள் எதுவும் பயன்படுத்தாமல் மிகுந்த அக்கறையுடன் வீட்டின் உரிமையாளர் பராமரிப்பதால், தோட்டம் இயற்கையாகச் செழித்திருந்தது.

இதனால் மழை வரும்போது தவளைகளுக்குக் கொண்டாட்டம்தான். அம்மா எனக்குக் குடைபிடிக்க, நான் ஒவ்வொரு தவளையாகத் தேடி அடையாளம் கண்டு செல்பேசியில் படமெடுத்துக்கொண்டிருந்தேன். படமெடுப்பதற்காகத் தவளைகளைப் பிடிப்பது, மிகவும் தவறான செயல்.

நம் கைகளில் இருந்து அவற்றுக்கு நோய்த்தொற்றுப் பரவ வாய்ப்புண்டு. நாம் அருகே செல்லும்போது அங்குமிங்குமாகத் தாவும். அப்போது டார்ச் வெளிச்சத்தில் படங்கள் எடுக்கலாம். சுமார் ஒன்றரை மணி நேரம் தேடியதில் ஆசியத் தேரை (Common Asian Toad), கூர்வாய் அழகுத் தவளை (Ornate Narrow-mouthed Frog), புள்ளித் தவளை (Variegated Frog), சிவப்பு கூர்வாய்த் தவளை (Red Narrow-mouthed Frog), இந்திய மரத்தவளை (Common Indian Tree Frog), வண்ணத் தவளை (Sri Lankan Painted Frog), புதர்த் தவளை (Cricket Frog) போன்றவற்றைப் பதிவுசெய்ய முடிந்தது.

சிவப்பு கூர்வாய்த் தவளை

ஒரே ஆண்டில் குறைந்த எண்ணிக்கை

பறவைகளைக் கண்காணிக்க eBirdஐப் பயன்படுத்துவதால் அதே பாணியில் மழை வந்தால் தவளைகளைக் கணக்கெடுத்துக் குறிப்பெழுதும் பழக்கமும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பருவமழையின்போது வீட்டுத்தோட்டத்திலும் அருகிலுள்ள குளத்திலும் நிறையத் தவளைகளும் அவற்றின் சத்தமும் கேட்டன.

ஆனால், இந்த ஆண்டு மழையின்போது தவளைகளின் எண்ணிக்கை தோட்டத்திலும் சுற்றியுள்ள பகுதியிலும் பெரிதும் குறைந்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் காணப்பட்ட ஆசியத் தேரைகள், தற்போது எட்டுக்கும் குறைவாகவே தென்பட்டன.

மூன்று முதல் ஐந்து கூர்வாய்த் தவளைகளை ஏற்கெனவே கண்டு மகிழ்வுற்றிருந்த எனக்கு, இந்த ஆண்டு ஒன்றுகூடக் கண்ணில் படாதது மனத்தை வாட்டியது. அவை மிகவும் அழகான குட்டித் தவளைகள் ஆயிற்றே! வீட்டில் வெறும் ஓராண்டில் பதிவுசெய்த தவளைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட எதிர்பாராத இந்த மாற்றம், எனக்குப் பேரதிர்ச்சியாகவும் வருங்காலச் சந்ததிகளின் நல்வாழ்வைப் பற்றிய கவலையையும் அதிகரித்தது.

உயிர்ச்சூழலின் முதல் அறிகுறிகள்

ஒரு உயிர்ச்சூழலின் ஆரோக்கியத்தை அங்குள்ள தவளைகளை வைத்தே கூறிவிடலாம். காரணம், அவை நீர்நிலவாழ்விகள் குளிர்த்த உயிரினங்களான இவற்றால் மனிதர்களைப் போல் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்க முடியாது; அதனால் வெளிப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் இருப்பிடத்தை (நீர் அல்லது நிலம்) மாற்றிக்கொள்வதன் மூலம், தங்கள் உடல் வெப்பநிலையை அவை பராமரிக்கின்றன.

தவளைகளின் இனப்பெருக்கத்தில், முட்டையிலிருந்து தலைப்பிரட்டையாகி தவளையாக மாறும் வளர்சிதை மாற்றத்திலும் நீர்நிலைகளுக்கு முக்கியப் பங்குண்டு. தவளைகள் தோல் மூலமும் சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதால், நீரிலும் நிலத்திலும் ஏற்படும் மோசமான மாறுதல்களைத் தாங்கிக்கொள்ள இயலாமல் மடிகின்றன.

இதனால் எண்ணிக்கை சரிந்து இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அந்த இனமே அழிந்துவருகிறது. வாழிட அழிவு, பூஞ்சை நோய்கள், களைக்கொல்லி - பூச்சிக்கொல்லிகளின் அளவற்ற பயன்பாடு, மாசு, புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் ஆகிய காரணிகள் பல்வேறு தவளை - தேரை இனங்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியுள்ளன.

கலவியில் ஆசியத் தேரைகள்

சத்தமின்றி மறையும் பாடல்கள்

இன்று பெரும்பாலான இடங்களில், அழிவின் விளிம்பில் உள்ள முதுகெலும்புடைய உயிரினங்களில் தவளைகள் முன்னிலையில் உள்ளன. தவளைகள் மட்டுமல்ல, பல்வேறு சூழல் தொகுதிகளே அடியோடு அழிந்துவருகின்றன. மனிதர்களுக்கு நோய் பரப்பும், பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளைகளும் தேரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும் பாம்புகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவாகவும் செய்கின்றன.

இவ்வாறு உணவு வலையில் ஓர் முக்கியக் கண்ணியாகத் தவளை உள்ளது. அளவில் சிறியதாகவும், இரவில் இரை தேடுவதாலும், மற்ற பெரிய உயிரினங்களைப் போல் கவர்ச்சியாகத் தோன்றாமல் இருப்பதாலும் தவளைகளும் அவற்றின் மகத்தான சூழல் பங்களிப்பும் போதிய கவனம் பெறாமலே உள்ளன.

நீருக்கு அடுத்தபடியாக, சுவாசிக்கத் தூய்மையான காற்றைக் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து உயிரோடு இருப்பதே மிகப் பெரிய போராட்டமாக மாறக்கூடும். காலம் கடந்து வருந்துவதைவிட, நம் வழித்தோன்றல்களுக்கு நாம் சேர்த்து வைக்கக்கூடிய ஆகப்பெரிய ஒரே சொத்து, வளமான பல்லுயிர்ச் சூழலே. அதில் தவளைகளுக்கு மிகப் பெரிய சிம்மாசனம் அவசியம்.

கட்டுரையாளர், பறவை ஆர்வலர்

தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x