

கோபால்
இதுவரை எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் உயிரினங்கள் கதாபாத்திரமாக நடித்திருக்கின்றன. பெரும்பாலான படங்களில் நாய்களும் குரங்குகளும் மாடுகளும் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன. காட்டுயிர்களைப் பற்றிய சில படங்களும் வந்திருக்கின்றன.
அவற்றில் யானைகள் போன்ற தாவர உண்ணிகள் அப்பாவிகளாகவும் புலிகள் போன்ற இரைகொல்லிகளைத் தீயவையாகவும் சித்தரிக்கும் படங்களே தமிழில் இதுவரை வந்துள்ளன. விதிவிலக்காக, ஒரு சில பக்திப் படங்களில் புலி தெய்விக அம்சம் மிக்கதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.
மாறுபட்ட படம்
இந்த நிலையில் இந்த ஆண்டின் மத்தியில் புதுமுக இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் வெளியான ‘தும்பா’ படம், புலிகளைப் பற்றிய சில முக்கியத் தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறது. காடுகளையும் காட்டுயிர்களையும் மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் முன்னோட்டம், அது குழந்தைகளைக் கவர்வதற்கான படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. படத்தில் குழந்தைகளைக் கவர்வதற்கான அம்சங்கள் இருக்கின்றன.
ஒரு குட்டிக் குரங்கு மனிதர்களைப் போலவே சிந்தித்துச் செயல்படுவதுபோல் காட்டப்படுகிறது. அதன் செயல்களும் சேட்டைகளும் குழந்தைகளைக் கவர்வதற்கான மிகைக் கற்பனை. இது தவிர படத்தில் காட்டப்படும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் இயல்புடனேயே காட்டப்பட்டுள்ளன. அதேநேரம், உயிர்ப் பன்மைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கும் புலிகளின் இன்றியமையாமையை எளிமையாக விளக்கியதன் மூலம், இது பெரியவர்களுக்குமான படமாகிறது.
புலிகள் ஆட்கொல்லிகள்தான் என்ற தவறான சித்திரத்தைத் திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. ஆனால், அனைத்துப் புலிகளும் மனிதர்களைக் கொல்பவை அல்ல என்ற உண்மையைச் சொன்னதன் மூலம் இந்தப் படம் பலரது அறியாமையைப் போக்க உதவியிருக்கிறது.
புலி தன் இயல்பான வேட்டையாடும் திறனைத் தானாகவோ அல்லது மனிதர்களின் பேராசை உள்ளிட்ட புறக்காரணிகளாலோ இழக்க நேரும்போதுதான், அது மனிதர்களைக் கொல்ல முயல்கிறது என்பதை இந்தப் படம் பதிவுசெய்துள்ளது.
இதைத் தாண்டியும், தன் பசிக்காகக் காட்டின் மற்ற உயிரினங்களைக் கொல்வதால் குருட்டுத்தனமான ‘ஜீவ காருண்ய சீலர்’களின் பார்வையில் புலி ஒரு தீய உயிரினமாகத் தென்படக்கூடும். ‘புலிகள் இல்லாமல் போனால் தாவர உண்ணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிடும். அவை தாவரங்களை உண்டுவிடுவதால் மழை இல்லாமல் போகும். இது மனிதர் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்து. ஒட்டுமொத்தமாகப் புவியை அச்சுறுத்தக்கூடியது’ இவ்வாறு பல்லுயிர்ச் சங்கிலியை எளிய வசனங்களில் இந்தப் படம் விளக்கியுள்ளது.
புலி விற்பனை அரசியல்
எல்லாவற்றுக்கும் மேலாகப் புலித் தோல், புலி நகம் ஆகியவற்றைப் பெரும் விலை கொடுத்து வாங்குவதற்கான பன்னாட்டுச் சந்தை இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கைக்காக இயற்கையை முற்றாக அழிக்கும் அளவுக்குப் பேராசை பிடித்த மனிதர்கள் நிறைந்த சங்கிலி இது. இந்தச் சங்கிலியின் சில கண்ணிகளையும் அதில் உள்ள அரசியலையும் இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது.
அத்துடன் காடுகளில் பல்லாண்டு காலமாக வாழ்ந்துவரும் பழங்குடிகள், புலி உட்பட அனைத்துக் காட்டுயிர்களுடன் இணக்கமாக வாழ்வதையும், அந்த வாழ்க்கைமுறை பரவலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தொட்டுச் செல்கிறது.
கதை, திரைக்கதை, காட்சியமைப்பு ஆகியவற்றில் இருக்கும் குறைகளைத் தாண்டி மேற்கண்ட அம்சங்களைப் பேசியதற்காகவே ‘தும்பா’ படத்தைப் பாராட்டலாம். இந்தப் படத்துக்கு உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம் இந்தப் படம், உயிர்ப் பன்மை சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மேலும் பல படங்கள் எதிர்காலத்தில் வெளியாக வழிவகுக்கலாம்.