Published : 14 Dec 2019 01:14 PM
Last Updated : 14 Dec 2019 01:14 PM

கோயம்பேடு வந்தது எகிப்து வெங்காயம்

எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக வெங்காயம், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது. இதையெடுத்து மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது. மும்பை துறைமுகத்துக்குக் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட எகிப்து வெங்காயம், அங்கிருந்து லாரி மூலமாகப் பல மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாற்பது டன் எகிப்து வெங்காயம் வந்துள்ளது. நாட்டு வெங்காயத்தை நிறம், அளவுகளில் இருந்து இது வேறுபட்டுள்ளது. எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்திலும் அளவில் பெரிதாகவும் உள்ளது. அதேநேரம் எகிப்து வெங்காயமும் கிலோ ரூ.100-க்கு
விற்பனை செய்யப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் நிலங்கள் சேதம்

மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பருவம் மாறிப் பெய்த மழையால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றில் ஒரு பகுதி வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேங்கி நிற்பதால் பருத்தி, நெல், வெங்காயம், சோயா பீன்ஸ், மக்காச் சோளம், கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் திராட்சை, மாதுளை, காய்கறி வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெங்காயத்தைப் போல் மற்ற காய்கறி, பழங்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதிய பருத்தி விதை

புதிய பருத்தி விதைகளை உருவாக்கும் முயற்சியில் உகாண்டா நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மத்தியப் பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், தென்னிந்தியப் பருத்தி நூல் சங்கம், பருத்தி மேம்பாட்டு அமைப்பு, உகாண்டாவின் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து செயல்படவுள்ளன.

உகாண்டா பருத்தி அதிக மகசூல் தரக்கூடியது, ஆனால், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய பருத்தி விதை உகாண்டா பருத்தியைவிட மேம்பட்டதாக உள்ளது. இதனால் இரு நாட்டுப் பருத்தி விதைகளில் ஆராய்ச்சி நடத்தி, அதிக மகசூல் தரும் புதிய பருத்தி விதைகளை உருவாக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புதிய பருத்தி விதைகள் இரு நாடுகளிலும் பரிசோதனை செய்யப்படும்.

தொகுப்பு: அன்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x