

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வெங்காய விலையின் உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளிருந்து வெங்காயத்தை இறக்குமதிசெய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. நாட்டில் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.
இதனால் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்த எகிப்து நாட்டிலிருந்து ஆறாயிரம் டன், துருக்கி நாட்டிலிருந்து பதினோராயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது. பொதுத் துறை நிறுவனமான எம்.எம்.டி.சி. சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உழவர்களுக்கு ஓய்வூதியம்
உழவர்களுக்கு ஓய்வூதியம், நிதிவூதவி வழங்கும் மசோதாவை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது. இந்திய மாநிலங்களில் முதல்முறையாக கேரள சட்டப்பேரவையில் உழவர்களின் நலனுக்காக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மாநில வேளாண் அமைச்சர் வி.எஸ் சுனில்குமார் கேரள சட்டபேரவையில் கடந்த ஆண்டு தாக்கல்செய்தார்.
பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு உழவர்களுக்கு ஓய்வூதியம், நிதிஉதவி வழங்கும் மசோதா நவம்பர் 21-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. உழவர்களுக்கான தனி நலவாரியம், உழவர்களின் வாரிசுகளுக்குக் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் இணையும் உழவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படும். அதில் அரசும் உழவரும் இணைந்து பணம் செலுத்துவார்கள். இவ்வாறு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மாதம் ரூ.100 பணம் செலுத்தும் உழவர்களுக்கு, அவர்களுடைய அறுபது வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும்.
சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய கூட்டுறவு சர்க்கரைத் தொழிற்சாலை இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் பருவநிலை மாற்றம், வறட்சி, வெள்ளப் பாதிப்புகளின் காரணமாகச் சர்க்கரை உற்பத்தியின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 2018-19 நிதியாண்டில் சர்க்கரை உற்பத்தி 33.1 மில்லியன் டன்னாக இருந்தது.
ஆனால், 2019-20 நிதியாண்டில் சர்க்கரையின் உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 26 மில்லியன் டன் முதல் 26.5 மில்லியன் டன்வரை குறையக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: அன்பு