

சு. அருண் பிரசாத்
ஐ.நா., பருவநிலை மாநாடு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் கடந்த வாரம் (டிசம்பர் 2 - 13) தொடங்கி நடைபெற்றுவருகிறது.
‘காப்’ (Conference of Parties) என்று அழைக்கப்படும் இந்த மாநாடு கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் கூடும் இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், முன்னெடுப்புகள் குறித்து விவாதிப்பார்கள்.
கியோட்டோ, கோபன்கேஹன், பாரிஸ், கேடோவீஸ் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகள் முக்கிய கவனம் பெற்றன. ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) கடந்த ஆண்டு வெளியிட்ட ‘1.5 டிகிரி செல்சியஸ்’ சிறப்பு அறிக்கை, இந்த ஆண்டு வெளியான ‘கடல், பனிப்படலத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம்’ பற்றிய அறிக்கை, கடந்த வாரம் வெளியான ‘கார்பன் வெளியேற்ற இடைவெளி’ அறிக்கை என நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் பல்வேறு அறிக்கைகளினூடே இந்த மாநாடு கூடியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் இயற்கைக்கான உலகளாவிய நிதியமும் (WWF) ஸ்பெயின் நாட்டின் பிராதோ தேசியக் கலை அருங்காட்சியகமும் இணைந்து பருவநிலை மாற்றத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதைப் புகழ்பெற்ற நான்கு ஓவியங்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பெல்ஜிய ஓவியர் யோயாகிம் பதினீர், ஸ்பானிய ஓவியர்களான டீகோ வெலாஸ்குவெஸ், ஃபிரான்சிஸ்கோ தெ கோயா, யாகின் சோரொலா ஆகியோரின் ஓவியங்களைக் கொண்டு கடல்மட்ட உயர்வு, பருவநிலை அகதிகள், உயிரினப் பேரழிவு, கடும் வறட்சி ஆகிய நிகழ்வுகளைச் சித்திரிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.