

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பண்ணை’ (PANNAI) என்ற புதிய செல்பேசிச் செயலியை (app) உருவாக்கியுள்ளன. இந்த செயலி வேதாரண்யம் அருகே பெரியகுத்தகை, கடினல்வயல், கத்தரிபுலம் உள்ளிட்ட 6 கிராமங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அங்குள்ள விளைநில வரைப்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர 3 இடங்களில் வானிலையைத் துல்லியமாக கணக்கிடும் தானியங்கி மையங்களையும் அமைத்துள்ளனர். பண்ணைச் செயலியில் தங்களை இணைத்துக்கொள்ளும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பெய்யும் மழையின் அளவு, மண் தன்மை போன்ற அம்சங்களை அறிந்துகொள்ள முடியும். உழவர்களையும் நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்தச் செயலியை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தவுள்ளனர்.
தக்காளி விலை வீழச்சி
வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாகிவரும் நிலையில், தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துவருகிறது. மேலும் அதிக விளைச்சலால் சந்தைகளுக்கு தக்காளி வரத்தும் அதிகமாகிவருவதால் சில்லறை வியாபாரத்தில் ரூ.15 என்ற அளவில் விற்பனையாகிவருகிறது. இந்நிலையில் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் தக்காளியின் விலை மிகக் குறைவாக உள்ளது.
முட்டை தேவை அதிகரிப்பு
டிசம்பா் மாதம் ஒரு முட்டை ரூ.4.50 வரையில் விற்பனையாகும் என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் முட்டைத் தேவை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலை நிா்ணயக் கூட்டத்தில், தேவை அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை விலை உயா்வு போன்றவற்றால் வரும் நாள்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.